Wednesday, 22 February 2017

மௌனமாகிவிடுகிறேன்



மௌனமாகிவிடுகிறேன் 
=======================

இது மரணம்வரை தொடரும் பந்தம் என்கிறேன், 
எப்போதாவது 
விட்டுப்போய்விடுவாயா என்கிறேன், 
உனக்கெது இஷ்டமென்பதை அறிய சிரமிக்கும்போதெல்லாம்
சுவரெட்டிப்பார்க்கும் 
ஒரு திருடனைப்போல்  
சிறு சிறு தவறுகள் புரிகிறேன், 
இயல்பொதுங்கும்போது கோமாளியாகிறேன், 
என்னைப்பிடித்திருப்பதாய் 
காண்பிக்கமாட்டாய், 
சகலரோடும் சமரசம் கொள்ளும் உன்னிடம் 
என்னை அவர்களைவிட உயர்த்திப் பேசுவேன், 
உன்  பேரமைதியின் 
இரைச்சல் சொறிச்சல் நானாகிறேன், 
இத்தனையும் நீ அறியும்படி செயகிறேன்,  
என்னிடம் சொல்லாத உனக்கானவற்றை 
அறியவேண்டுமாய் எத்தனிக்கிறேன், 
என்னையே நேசிக்கும் உன்னை 
புண்படச்செய்யும் என்றறியும் வாசகம் சொல்கிறேன், 
என்னிடம் ஆமோதிப்பை எதிர்ப்பார்க்கும் 
உன் திசைகளில் 
நீ சந்தோஷித்திருக்கையில் 
நீ சலிக்கும்படி செயகிறேன், 
உனக்கான தனிமைக்குள் நுழைந்து 
குட்டிக்கரணம் அடிக்கிறேன், 
உன் மௌனம் 
என்னிடம் நீண்டுக்கொண்டே இருக்கிறது  அறிகிறேன், 
முடியும்வரை மன்னிப்பாய் தெரியும், 
நீ முன்புபோல் இல்லை  என்கிறேன் 
அப்போதுனக்கு நான் 
உற்றத் தோழனாய் இருந்ததை மறந்துவிட்டு, 
எல்லாம் எல்லாம் அறிகிறேன், 
இன்று நான் உன்னுடையவன் 
அதற்காக 
என்றுமான உன் குணங்களை  
அடைக்கப்பார்க்கிறேன் நீ துடிக்கிறாய், 
என் அன்பு இவ்வளவும் செய்யுமா?, யோசிக்கிறேன், 
உள்ளூர வருந்துகிறேன், 
எனக்காகிவிட்டப்பின்பு  எங்கும் போய்விடமாட்டாய் தான்,  
ஏன் எனக்குமட்டும் 
எப்போதும் புதியவளாகவேத் தெரிகிறாய், 
இத்தனை காலத்தில் எனக்கு நீ சலிக்கவே இல்லையே, 
உனக்குநான் 
புதியவனாகிறேன் என்று விழையும்போதே  
ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிடுகிறேன், 
கோழிமுட்டைக் கண்களால் அப்படி பார்க்காதே, 
அவைகளால் வசமாக்கிவிட்ட 
என் பழைய யதார்த்தங்களைக் கொண்டுத்தா ம்ம், 
உன்னிடம் நான் கொண்ட மாற்றம்போல் 
வேறு யாரோடும் நிகழ்த்த முடியாது, 
அத்தனைக்கு நீ என்னில் புதியவளாகிக் கொண்டிருக்கிறாய், 
அது பிடித்திருக்கிறது என்று 
எதையோ  நீ  சொல்லும்முன்பாக 
அதைவிட அதிகம் கொண்டுவருகிறேன் என்று 
நான் சொல்லும்போது  
அதனுடைய ரசனை 
உன்னில் குறையவேக் காண்கிறேன் கண்ணம்மா,,  
எது உனக்கு இஷ்டமோ 
அதை எடு என்று சொல்லும்போது, 
அதை நீ எடுக்கும்போது, 
அதைப்பற்றி நீ  மற்றோரிடம்  
சொல்லிச்சிரிக்கும் காட்சிகளைக் காணும்போது ,, 
அதுவாகவே நான் மாறிவிட்டால் என்ன 
என்றுத் தோன்றும், 
அதை மிகையாக ரசிக்கலாம் தான்,  
நீ அறிந்த என்னையே  
மேலும் மேலும் உன்னிடம் திணித்தேன் அன்றி, 
உன்னை, 
நீ, 
உன்னுடைய சமயம், 
உனக்கான சூழல்கள்  என்பதிலெல்லாம்  
என்னையே இடர்ப்படுத்தி, 
உன்னை தூரமாக்கிவிட்டேன், 
என் இம்சைகளினால் நம் மௌனம் நீண்டுக்கொண்டிருக்கிறது, 
நீ பேசுவதைக் கேட்பதற்கான  
சமயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன், 
என் எல்லாமே தவறுதான்,  
காயங்களைக் கொடுத்துவிட்டு ஆற்றுவதற்கு நினைத்து  
மேலும் காயம் உண்டாக்குகிறேன், 
தவறுதான், 
இவையெல்லாம் நீ மன்னிப்பாய் என்று அறிவேன், 
இனி நான் மௌனமாகிறேன், 
உன் வகையில் 
எத்தனையோ அரவணைப்புகளை 
என் குற்றங்களுக்குப் பின்னால் தந்தவள் நீ, 
இத்தனைக்குப்பின்னாலும் 
உன்னை நேசிக்கிறேன் கண்ணம்மா, 
நான் உன் 
நிசப்தங்களுக்குப் பின்னால் 
மரக்கதவை கொரிக்கும் 
எலி சப்தம் ஆகிவிடும் முன்பு, 
நீ உன் செவியடைக்கும் முன்பு, 
இதோ நான் மௌனமாகிவிடுகிறேன், 
இனியும் மன்னிப்பாய், 
எனக்கு ஆறுதல் சொல்வாய்,  
இது மரணம்வரை தொடரும் பந்தம் என்கிறேன்,,,,  

"பூக்காரன் கவிதைகள்" 

Tuesday, 21 February 2017

ஒரு ஏகாந்ததை யாசிக்கிறேன்

ஏகாந்ததையின் கனவுகள் ஊடே அத்திரையோடிக்கொண்டிருக்கும் ரோஜாக்காடுகளில்  நடந்து செல்கிறேன், சுகந்தங்களை நினைவுக்கூறும் தருணம்போல இடைவேளையில் மேனித் தழுவிய காற்று  ஏகாந்தம் முறித்து என்னுடன் வருவதில் விரோதமில்லைதான் ம்ம்..நிறைந்த பச்சையங்களூடே சொந்தமென்று அவகாசப்படும் தனிமையை  நெஞ்சோடுச் சேர்த்தணைத்து  ஒருபோதும் முடிவில்லாத யாத்திரை, காய்க்கனிகள் புசித்து, அருவிகளிலே தெளிநீர்க் குளித்து, வழிக்கூடுகளில் அந்தி உறங்கி, காடும் மலைகளும் நதியும் குன்றும் என எல்லாம் தாண்டி அங்ஙனம் நடந்து நடந்து போய்க்கொண்டே இருக்க யாசிக்கிறேன். யாருடையத்தனிமையிலும் இனி
தானேச்சென்று விழவேண்டாம் தானே ம்ம் :)

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 19 February 2017

ஆதலால் வா, பழமையிற்தொடங்கி புதுமையில் முடிக்கலாம்



ஆதலால் வா, பழமையிற்தொடங்கி புதுமையில் முடிக்கலாம்
=============================================

தோளில்  தலைச்சாய்த்தபடி
என்னையா பார்க்கிறாய் என்பதைப்போல
பார்த்துக்கொண்டிருக்கும்
உன் கண்களுக்காக
இந்த வரி
தொந்தரவில்லாதவரை, எதையும் தடுக்கவேண்டாம்
வரட்டும்ம்  விடு ம்ம்
மனம், சன்னமாகி,  மாதுரப் புகையாகி
அடுமனையில்
சமையலாகி
பீத்தோவனின் சிம்பொனியுமாகி
சடுதியில்
புன்னகையாகி
நிபந்தனையற்ற பரிமாற்றங்களாகி
கருவாகி உருவாகி
அறுதியில்
உனக்குப்பிடித்த உயிராகி
நிழற்படவியிலும்,
பயனியின், ஒளிப்பதிவியிலும் படர
எப்போதாவது
பேசிக்கொண்டிருப்போம்
தொடர்பை
துண்டிப்பதாகச் சொல்லிவிட்டு
நொடிக்கொரு முறையென எத்தனை முறை அழைப்பாய்
என்  மென்சோம்பேறித்தனங்கள்
வளர்ந்து நிற்கும்
நகங்களை
வெட்டமாட்டேன் என்று  அடம் செயகிறன்றன
ஓயாமற்பெய்துக்கொண்டிருக்கும்
கார்மழைக் காலங்களில்
குளிர் அணைக்க இடமிருக்காது அறிவாயா
ஆடையே இல்லாமல்
கம்பிளியை, கழுத்தோடு அணைத்துக்கொண்டு
ப்ரியமானவர்களிடம்
பேசும் மனநிலை
இப்படி எப்போதாவது அமையும்போது
பல்லே விளக்காமல்
முனங்கிக் கொண்டிருக்கும் ம்ம்ம் ங்களிலிருந்து
செவ்வந்திப் பூக்களுடைய
சாக்லைட் சுவை உருகும் தானே
இது உன் வகை
ஆதலால் வா, பழமையிற்தொடங்கி புதுமையில் முடிக்கலாம்
ஒட்டவெட்டாத மீசையை
தளிரிதழ்களாலொதுக்கி யௌவ்வனம் விதைப்பதைப்போல
பவ்வியம் செய்துக்கொள்
என்னுடன்
அந்த நிமிடங்களைக் கடந்துவிட்ட எல்லோருக்கும்
நான் காதலன் இல்லை
நான் தேர்ட் ரைட்டட் இல்லை
துளிர்விடும்,  பார்வை சுனாமியால்
உனக்குள்ளில்
என்னை,  ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு
இப்போது
காதலிப்பதாகச் சொல்லி
அடுத்தடுத்தே
முளைவிட்டுக்கொண்டிருக்கும்
உன் ப்ரியங்களின் இதழ்களைக் கிள்ளிப்பார்க்கும்
சுயநலவாதி என்னை
எனப்பெயர்ச் சொல்லி அழைக்கப் போகிறாய்

பூக்காரன் கவிதைகள்

Thursday, 16 February 2017

இதழ்கள் பேசவில்லை



இதழ்கள் பேசவில்லை
=======================

ஓடிக்கொண்டிருக்கும்  கதையில்
இதழ்கள் பேசவேண்டாம்
கதவைத்தட்டும் கைகள்
ஆக்கிரமிக்குமோ என்ற ஒழுகலும்
கதவைத் திறந்தால்
கண்கள்  எதை நோக்குமோ என்ற வழுவலும்
மினுக்கமான துளிகளை
முகத்தில் விதைத்தாற்போல் பருவமும்
மென்மையான
சணல் போன்று கனத்த பின்னலுடைய கூந்தலும்
நாகம் படம் பிடித்துபோல் நிற்கும்
அளவுடைய கழுத்தும்
காரணமே இல்லைதான் என்றாலும்
காரணம் தேடி
கரணமடிக்கும் நாவுதனிற்கு
இங்கீதம் மறக்கும்
விழிமணிகளில் சந்தேகம் சுமந்திலை
என்றாற்தான் வியப்பு
நூறுமுறை கண்டிருக்கக் கூடும் சுந்தரம்
இதழ்கள் திறப்பது
பேச இல்லை என்பதைக்கூட
இத்தனை ரசனையோடு செய்யமுடியுமா
பயண நித்தியம்
சாத்தியமில்லைதான்
எதுவரை என்றில்லை, எப்படிக் கேட்பது ம்ம்
எதுவரையோ அதுவரை
இனி இப்படித்தானோ இந்த மௌனம்
இளமைக்கு மரணம்
நவீனமாய் இருப்பதைப்போலாகியதே
யாரிடமும்
சொல்லலாமா வேண்டாமா என்ற
அசம்பாவிதமான
விபத்தொன்றை
இப்படியா நேரிடச் செய்வது
முட்டிமேல்
இதிகாசத்தை திறந்து வைத்துக்கொண்டு
அசைவிருக்கும்
பூக்களையா வாசிக்கிறேன்
இடம் மாறும் சொற்களை வைத்துக்கொண்டு
என்னதான் கேட்கலாம்
படுக்கையில் ஒருபுறமாய் சாய்ந்துவிட்டு
கோலம் அல்லவா
நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்
உன்  ஆடையின் அசவுகரிய சூழ்நிலைக்கு
என் போர்வை விலக்கு
நாகரீகமானபோது
எனக்குள் இருந்த நல்லப்பிள்ளையை
அங்கெங்கேயாவது
தொலைத்துவிடலாமா சுயநலம் ம்ம்
ஏதோ உடைந்துகொண்டிருக்கும் கிலேசம்
அதுவரை
தவறென்றதெல்லாம்
இப்படி ஒரு காட்சிக்கு முன்னால்
ஏதும்  தவறில்லை என்ற சுவர்தான் அது
பறக்க எழும் கைகளால்
புத்தகத்தை இறுகப் பற்றிவிடுவேன்
எழ எத்தனிக்கும் கால்களை
நிலத்தில் அமிழ்த்திக்கொள்வேன்
நிச்சலனம் ஏற்ற
பறிதலையும்
நிற்காமல் துடிக்கும் உதடுகளையும்  
என்ன செய்வது
அடுத்துடையவளின் நிமித்தங்கள் பருகும்
ஆக்சிஜன் ஆகியிருக்கலாம்
ம்ம்  மழையால்
மூடிக்கிடக்கும் ஜன்னலில் அறையும்
நீர்த்திவலையின்  நிலைதான்
ஏது கடற்கரையில் இல்லாத அலைவீச்சுகளும்
ஏது பூக்களும் நறும்பாத
சுகந்தமும்
ஏது பிரபஞ்சமும் நிகழ்த்தாத பூகம்பமும்
ஏது நதிவிளிம்பில் இல்லாத
அமைதியும்
ஏது வானில் பறக்காத வானம்பாடிகளும்
யாரும் உணராத அகவரை உடைய மோகாந்தமுமாய்
பிரிகையில்
நெஞ்சாம் பாறைக்கு நடுவே
பிளவு செய்த
பார்வைகளுமாய்
ஒருமுறைத் திரும்பிப் பார்த்தால் தான் என்ன என்றால்
ஓரோரு முறையும்
திரும்பிப் பார்க்க நேரிடும் இடர் வருமே
ஏக்கங்களுடனே
இனி இதழ்கள் பேசவேண்டாம்

"பூக்காரன் கவிதைகள்"

Monday, 13 February 2017

ஒருத்துளி காத்திருப்பு

சிறுமழை பெய்துக்கொண்டிருக்கிறது
ஸ்மோக்கிங் ஜோனில்
அவன் இஷ்ட்டத்தோடு புகைத்துக்கொண்டிருந்த
சிகரெட் துண்டை
மணற் நிரப்பிய தகர உருளையில்
வீசிவிட்டுப்போனான் ,,
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்
கூரை ஒடிசிலின் வழியே
சதா சிவிறிக் கொண்டிருக்கும் மழைத்துளிகளில் இருந்து
அப்புகையை அணைக்கப்போகிற
ஒருத் துளிக்காய்

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 12 February 2017

மீண்டும் உதிப்பேன்


ஒரு அஸ்தமனத்தில் சூரியன் மரிப்பதில்லை, 
சுடர்க்கொள்ளக் காத்திரு மீண்டும் உதிப்பேன்

"பூக்காரன் கவிதைகள்"

Saturday, 11 February 2017

ஆனைக்கள்ளன்


ஆனைக்கள்ளன் 
===============
(என்றோ எப்போதோ கேட்டவைகளும் சொல்லியவைகளும்)

அவள்

எனக்கு தோன்றியது ஒன்று, 
என்னை வீழ்த்திடவா நீ இங்கு வந்தாய்  ம்ம், 
உன்னால் அது கழிந்தபோது 
அ்தியாசமாகிட்டு,   
பின்னே கள்ளக்கதைகள் சொல்லி 
கூத்து களித்ததைக் கண்டபோது  
சர்க்கஸிலே 
பஃபூனினோடு உள்ளதுபோல் ஒரு ரசம்,,,
பாலையில் 
பூக்களின் வாசனைப்போல , 
நிலா ஒழுகும்
பனி இரவுகள் போல 
பின் எப்போது இது இஷ்டமாகி மாறியது ம்ம்,, 

அன்று நீ போனப்போ ,, 
திரும்பி வரும்வரை  
என் அறையின் சுவரிலே 
யாருமில்லாததைப்போல பார்த்து  இருந்தேன்  . 
அந்த சுழற்சிகள் 
இனியும் வேகமாய் சுழலணும்
நான் ஆக்கிரத்திருந்தேன்,,,  
அப்போதுதான்  
என் மனசு சொன்னது   
உன்னை எனக்கு இஷ்டம் என்று 

எல்லோரும் 
மியூசியத்திற்கு வருவது  
சரித்திரத்தை திரும்பிப்பார்க்க 

நேரம் வைக்கவில்லை 
உன் பின்னால்தான் இருக்கிறேன் 
கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமே ம்ம், 

உன்னிடம் நான் 
சொல்லிக்கொண்டிருப்பதையும்  
என்னிடம் நீ 
சொல்ல இருப்பதையும்  
நாமே சொல்லிக்கொள்ளலாம் 

அல்லாது 

இதெல்லாம்  
சொல்லமுடியாமல் போனாலோ 
என்று  பயந்துதான் 
எழுதலாம் என இருந்தேன் ,, 
நிறைய எழுதிப்பார்க்கிறேன்   
எதுவும் சரியாக வரவில்லை,, 
எல்லாத்தையுமே  
சுருட்டிக்கசக்கிக்கூட்டி எறிந்துவிட்டேன் ,,

எப்போதோ ஏற்ற முறிவின் சுவடுகள் 
இப்போது இப்போதுதான் 
மாய்ந்து வருகின்றன    
மீண்டும் அது சம்பவிக்குமோ 
என்ற அவசியமில்லாத ஒரு பயம்  
என் மனதில் இருக்கு ,,
அதனால் தான் 
இத்தனை ஒரு நீண்ட முகவரைச் சொல்கிறேன் .. 
ஒரே ஒரு வார்த்தையே 
அக்கடிதத்தில் உள்ளது ,, 
அது உனக்குத் தெரிந்ததும் கூட

அவன்  

ஐந்து காசுக்கு கதியில்லாதவன்  
ஆனைக்கு 
விலைச்சொன்னதுபோல
உன்னிடத்தில் 
நாடகம் விடுத்த ஆனைக்கள்ளன் நான் ,, 

மனதில் ஏதுமில்லாதபோது 
ஆகாயம் உருண்டு 
கீழே  என் தலையில் விழுந்தாலும் 
தாங்கிவிடலாம் என்ற 
தைரியம் இருந்தது என்னிடம் அதுவரை  

காரணம் 
நஷ்டப்படவேண்டி காத்திருக்கும் 
விலைமதிப்புடைய  எதுவும்  
எனக்கென்று   இல்லை , 

ஆனால் 
உன்னைவிட்டு வந்திட்ட இப்போது  
எதையோ நஷ்டப்பட 
போகிறேன்போல் 
என்ற தோணல் மட்டுமாய் நகர்கிறேன், 

பெரிய மிடுக்கன் நானென்று 
எப்போதும் 
சுயத்தம்பட்டையிலிருந்தேன்   

இப்போதே என் மனசு சொல்லிற்று, 
நாம் நமக்கு என்று   
முடிவெடுக்கமுடியாத சிலவை  
நம்மிடமே எங்கோ இருக்கின்றன...  
அங்கே புத்திக்கும் சூத்திரத்திற்கு ஏதும் இடமில்லை, 

ஒளிவாட்டங்களுக்கிடையில் 
அறியாதே சொல்லாதே  
எப்படி எப்படியோ 
உன்னை இஷ்டப்பட்டுவிட்டேன்  , 

எத்தனையோ ஊசிகளில் நுழையும் 
ஒருக்கண்டு நூற்போல ,   
ஒரு பொய்யிலிருந்து தப்பிக்க 
இன்னொரு பொய்யில் நுழைந்து நுழைந்து 
முடிவில் எல்லார் முன்னிலும் 
குற்றவாளியைப்போல நின்றபோது  
உனக்கும் எனக்குமிடையில் 
அகண்ட தூரமே நிறையக் காண்கிறேன், 

உயிர் 
சுவாசமிழந்தைப்போல்  
எதுவுமே விழித்திரைக்குமுன்னால் 
வசப்படாமல் 
ஒரு மௌனியாகியிருந்தேன் , 

அங்கே அன்று 
யாருக்கு நேரே  நான் இமை அடைப்பது ,, 
இனி யாரோடு அங்கே 
குட்டிகுட்டிப்பொய்களைச் சொல்லி 
சிரிக்கவைப்பது,  
விலையில்லாதவன் ஆகிவிட்டேன், 

ஒரு தீர்மானம் எடுக்கும் கழிவில் இல்லை,  
ஆனால் 
யாரும் என்றும் எல்லோரையும்   
 சந்தோஷப்படுத்திக்கொண்டு  
என்றென்றைக்கும் அந்த யாரோ 
அவர்களுடைய சுயம் சதித்துக்கொண்டு  
வாழவும் முடியாதுதானே, 

என்றால் 
என்னால் முடியும்,  
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்    

"பூக்காரன் கவிதைகள்"

இதழ்களுக்கு இரண்டாம் பட்சம் 
==============================


ஏதும் பேசவிடாமல்  
இடையினைக் கைப்பற்றினாய்
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி
உன் பெருவிரல்களுக்குள் என் பிடிகளுதரிவிட்டேன்   
அங்ஙனம் 
சுற்றியெங்கும் வலை எறிகிறாய் 
என் விழிகளை 
முழுவதுமாய் மூடவோ திறக்கவோ 
விடாமல் 
அயர்வில் ஆழ்த்துவது இது எத்தனாம் முறை 
சுவாசிக்க முடியவில்லை 
இந்த இறுக்கம் தளர்த்திக் கொள்ளவாவது 
கொஞ்சம்
விட்டுப்பிடிக்கலாம் தானே 
எல்லாம் ஆனபின்னால் 
வார்த்தைகளைத் தவிர 
உன் வருடல்களை எதிர்நோக்கி என் குளிர் ம்ம்  
என் காது மடல்களில் 
உன் வெப்ப இதழ்கள் பூத்திருக்கின்றன 
அந்த இதழ்களின் சிறு இதழ்களுக்குள்  மது ஊற்றுகிறாய் 
உலரும் போது 
விரியும் மலர் உதடுகளைத் தவிர 
அப்படிச் செய்து  
இறுதிவரை  எல்லாம் நனையவைக்கிறாய் 
என் ஐந்தாம் நிலையின் 
நல்ல மேய்ப்பன் நீ   
மீசையால், 
முன் சுருள் கேசத்தால்
அங்குலம் அங்குலம் உறுதி உடைக்கிறாய்  
காடு பத்திய 
முரளி ஓசைப்போல   
இமைக்கரையின் இரு ஓரங்களிலும் 
உணர்ச்சி 
பெருக்கெடுக்கிறது 
நல்ல வேளை 
இன்றுவரையும் உன் எச்சில் சுரப்பிகள்  
என் உதடுகளுக்கு   
இரண்டாம் பட்சம் தான்   

 "பூக்காரன் கவிதைகள்"











Friday, 10 February 2017

திருடிப்போன "அவள்" விழிகள்

திருடிப்போன "அவள்" விழிகள் ============================ எதை ரசித்தாலும் யாருடனேனும் சொல்லிக்கொள்ள பிரயத்தனப்படும் கிடுகிடுத்த இதயம் உறங்கி எழுந்துவிட்டு அடுத்தநாளில் நடக்கப்போகின்ற ஒளிப்பதிவு செய்ய முடியாத நிகழ்வுகளைக் கடந்துபோகிறேன் இனிமேலும் இதை செய்யக் கூடாதென பலமுறை உணர்வினோடு சொல்லிக்கொண்டப்பின்னாலும் ஒரு கள்ளக்காணல் தென்பட்டுவிடுகிறது அங்கு நின்று அதையும் அவளிடம் செய்துவிடவேண்டுமாய் முளைவிடும் என் புதிய குறும்புகள் அவளே சொல்லட்டும் நினைத்த கணமே உறையச்செய்யும் இந்த பனிப்பொழிவிற்கு என்ன பெயர் வைக்கலாம் ம்ம் நெரிசலில் அலசுகின்ற குரல்களின் நடுவில் எதையோ அவிழ்க்க எண்ணி தன்முனைப்பில் விட்டுவிடுகிறேன் நெருங்கிடும்போது அவள் பார்வை நிமிராத நடுக்கத்திலும்,, அலைபேசி அலறிடும்போது அவனாகத்தான் இருக்கக் கூடுமோ என்கிற அவளின் படப்படத்தலிலும் விழிகளில் அரும்பிய கடிதங்களின் தூரங்களை அகலமாக்கி அங்கிருந்து போகையில் எத்தனைநாள் எத்தனைமணிநேரம் அதற்குள்ளே குடியிருந்தோம் என்பது அடுத்தமுறை காணும் அதே அவள் விழிகளில் நான் வரைந்த ஏக்கங்களின் ஏற்ற இறக்கத்தினால் கண்டறிந்துவிடலாம் ம்ம்ம் இந்த நீட்சி எதற்கென்றுத்தெரியாமலேயே கட்டுண்ட காலங்களுக்குள் இரு பக்கங்களின் மௌனமும் இடம் மாறி இடம் ஏதோ கிறுக்கி அழிக்கின்றன எனக்குப் பிடிப்பதாய் தெரியப்படுத்தி நாளுக்குநாள் சூடிக்கொள்ளும் செவ்வந்திப் பூக்களின் எண்ணிக்கை அவள்வீட்டுத் தோட்டத்தில் அதிகப்படுத்திக்காணும் போல் அடக்கிவைத்த எதையும் கனவுகளுக்கு விரையம் செய்துவிடாமலும் என் விழிகள் சொல்லவந்ததை சொல்லவிடாமலும் திருடிப்போன "அவள்" விழிகள் அங்குதான் இறைத்திருக்கின்றனபோல் நுனி தொட்டுவிடாமல் பின்னால் நின்று வாசம் களவாடுகையில் என் வாசமே இருந்திருந்தது அவளின் எல்லா நாளின் பூக்களிலும் "பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 7 February 2017

விழித்திருந்தவனின் கனவு - கடிதப்பதிவு


விழித்திருந்தவனின் கனவு - கடிதப்பதிவு 
=======================================

யதார்த்தமாய்தான்  ஒருமுறைக்கண்டது  
அந்த ஸ்வரம் கேட்டது 
மீண்டும் கண்டுமுட்டியபோது 
கூடுதலாய் அடுத்து 
உன்னை அறிந்ததும் கூட  
சிருஷ்டியை வாசிக்கிறேன்  
என் ஆராதனையைத் தெரிவிக்கிறேன் 
இயற்கையோடு சொல்லி 
விமர்சிக்க விருப்பமில்லை உன்னை  
ஆதலால்தான் 
எனக்குள் மாத்திரம் ஆராதிக்கிறேன் ம்ம்  
என்னுடைய முதல் கடிதம் 
உனக்குள்
எதோ ஒரு கோணத்தில் 
எனக்காய் ஒரு ஸ்தானம் 
ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற 
நம்பிக்கையில் 
அவ் அதிகாரத்தில் 
இரண்டாம் கடிதம் எழுதுகிறேன் 
இப்போ 
எனக்கு நினைவில் வருவது  
நிறைந்த ஜனக்கூட்டத்தின்  மத்தியில் 
கரகோஷங்களுடைய நிழலில்  
புன்சிரியுடை நிலாவுமாய் 
அபூர்ணமான வரிகளில் 
ஞாழற்பூவின்  
சுகந்தம் உதிரிய  பாவனையோடு 
உனக்குக்கொடுத்த 
நிமிடங்களை 
அழகாக்கிக் கொண்டிருந்தாய் 
காடினை,,, 
நிறுத்தம் படிப்பித்தது 
மழைதான் என்ற சங்கல்பமும்  
காற்று,,  
திடீர் கந்தர்வனாய் வந்து 
தன் வேகத்தை மடியொதுக்கி 
முத்தமிட்டுப்போகும் தோரணையும்   
தூலிகையாகி
அதினின்று விழுந்த 
இவ் அச்சரங்களின் யதார்த்தங்களே 
மூடியிருந்த என் கண்களை 
மெல்ல எழுப்பின 
அது யாருடைய சிருஷ்டி 
என்றறியாதே 
அந்த வார்த்தைகளிலே திருத்தம் குறிக்கிறேன் 
என்ற அறிவில்லாய்மையை 
அன்று நான் செய்துப்போய்விட்டேன்
ஆனாலும்  
அது கவியாத்திரிகைக்கு 
இஷ்டமாகியிருந்தது என்னும் நிதர்சனம் 
என்னுள்  தீராத 
ஒரு அனுபோதையாகியிருந்தது ம்ம் 
அதுதான்   
என் வாழ்வின்  
அனர்க்க நிமிஷங்களில் ஒன்றாகியிருந்தது 
இனி டைரியை மூடிக்கொள்கிறேனே

,,,"ஆராதகன்",,,  

"பூக்காரன் கவிதைகள்"

Saturday, 4 February 2017

கர்பநிலா

கர்பநிலா 
=========== 

அவள் அணைக்கும்போது 
ஒருமழையில் நிரம்பிய குளமாகிறேன் 
காஸ்மெட்டிக் அறியாத 
கலியுக பெண் மாதிரியின் 
சுய எடை அணிந்த போதைத் தொகுப்பு அவளாகிறாள் 
அவள் என் விரல்களை மடக்கி 
சிட்டிகைச்செய்து மனக்கணக்கு செயகிறாள் 
நான் அவளுடைய 
ஒழுகும் சிரிப்பினை 
அடைத்துவைக்க இடம் போதாமல் 
பெட்டகம் தேடுகிறேன் 
என் கைக்கூம்பில் அடங்கும் அவள் முகம் 
போர்வைக்குள் உதிக்கும் கர்பநிலா 
கட்டில் போதாதபோது 
கேசம் சுரண்டி காடு தேடுவாள் 
கைத்தரிப்புகளை 
இராத்திரி நூலாக்கி அதில் 
விடியும்போது செவ்வந்தி கோர்ப்பாள் 

பூக்காரன் கவிதைகள்

Wednesday, 1 February 2017

சிவந்த இரவுகள்

சிவந்த இரவுகள் ================ எல்-பாசோவின் வாசத்தை மிஞ்சி உவர்ப்புக்குளித்த அந்த அறையில் பலரும் வந்து போயிருக்கலாம்,, ஆனால் சலனத்தின் பெரும்பான்மை நிச்சலனத்தில்தான் என்பதைப்போல் கருத்துரைக்க முன்வராத எவரும் அந்த நாற்றத்தால் மனக்கற்பு அழித்துக்கொண்டவர்கள்தான் என அறிவேன் எப்படிஎன்று கேட்கவேண்டாம் கண்ணீர் விற்பவர்கள்தான் இரவுகளை நிறமாக்கிக் கொண்டிருந்தார்கள் அது, என் மற்றும் அவளின் நுகர்வுதாண்டிய வேறு யாரின் நுகர்விற்கும் அத்தனை போதமில்லை அங்கே ம்ம்ம் நாளை அந்த அறை பூட்டப்படலாம் உன் பிரவேசமிழந்து பிழிந்தெடுக்கும் சப்பாத்து நடமாட்டங்களின் எதிரொலி எழுப்பாத நீள் சுவர்களும் முடங்கிவிட்ட தானியங்கி கடிகைமுட்களின் உயிர்நாடிகளும் சில நாட்கள் முதலாய் உன்னோடு பந்தமற்றுப்போய்விட்ட மல்லிகை கசங்கல்களின் கருகிய மீதங்களும் சாந்து பூசி ஒழிவாக்கப்பட்ட உயர் ரக சிகரெட்டின் காரநெடிகளும் இனியுமான அற்பநாட்களுக்காவது என்னை உறங்காமல் செய்திருக்கட்டுமே மித்ரா ம்ம்ம் என்னால் உன் அசையும் உடைமைகள் யாதும் உடைப்படவில்லை தேவைக்கு மிஞ்சிய சிணுங்கள்களால் திறக்கப்பட்ட உன் எல்லா மதகுகளின் வழியோடிருந்தும் ஒழுகி நொடிந்த வெள்ளப்பெருக்கொன்றின் பின்னாலும் அந்தக்கறை உணங்கிடவில்லை ஆனால் அதற்குள் உன் துளிகளுக்குள் அடைப்பட்டுவிட்ட நான் மட்டும் உன் மனக்கரையில் காய்ந்த கறையாகி பதிந்துவிட்டேனேனோ மித்ரா சலவை செய்ய மறந்து ஒத்திவைத்த நம் உடுப்புகளில் சரிதமெழுதி பழி தீர்த்த ஆசுவாசத்தில் இதுவரையான ஆதாரமில்லாமல் அரங்கேற்றப்பட்ட என் எல்லா கள்ளத்தனங்களையும் அறைந்துவிட்டுப் போயிருந்தது அந்த பின்னிரவின் பனிவாடைக்காற்று ம்ம்ம்ம்,, ஆனால் என் கற்பனைப்பெண்டுலத்தின் வழக்க நகர்தலின் அலைவு நேர விலகுதலினால் தமனியில் ஒரு குறுமுறிவுக்கோடு உறைந்துகொண்டிருக்கும் இரத்தத்திலிருந்து ஆக்சிஜன் பிரிகின்றசமயம் பாவங்களுக்கெல்லாம் விலைத் தேடிக்கொண்டிருந்தேன் எப்பொழுது வேண்டுமானாலும் விடுபடலாம் ம்ம்ம் நிலுவையிலிருக்கும் புனைவுமையற்ற கேள்விப்பட்டியல் ஒன்றிற்கும் சற்றே சாவு பயத்துடன் ஓட்டமுறைந்து நாளங்களை அழுந்தப்பிடித்த ஆத்மகதைக்குமான அந்த மெல்லிய திசுவின் பிணைப்பு
"பூக்காரன் கவிதைகள்"