Wednesday, 22 February 2017

மௌனமாகிவிடுகிறேன்



மௌனமாகிவிடுகிறேன் 
=======================

இது மரணம்வரை தொடரும் பந்தம் என்கிறேன், 
எப்போதாவது 
விட்டுப்போய்விடுவாயா என்கிறேன், 
உனக்கெது இஷ்டமென்பதை அறிய சிரமிக்கும்போதெல்லாம்
சுவரெட்டிப்பார்க்கும் 
ஒரு திருடனைப்போல்  
சிறு சிறு தவறுகள் புரிகிறேன், 
இயல்பொதுங்கும்போது கோமாளியாகிறேன், 
என்னைப்பிடித்திருப்பதாய் 
காண்பிக்கமாட்டாய், 
சகலரோடும் சமரசம் கொள்ளும் உன்னிடம் 
என்னை அவர்களைவிட உயர்த்திப் பேசுவேன், 
உன்  பேரமைதியின் 
இரைச்சல் சொறிச்சல் நானாகிறேன், 
இத்தனையும் நீ அறியும்படி செயகிறேன்,  
என்னிடம் சொல்லாத உனக்கானவற்றை 
அறியவேண்டுமாய் எத்தனிக்கிறேன், 
என்னையே நேசிக்கும் உன்னை 
புண்படச்செய்யும் என்றறியும் வாசகம் சொல்கிறேன், 
என்னிடம் ஆமோதிப்பை எதிர்ப்பார்க்கும் 
உன் திசைகளில் 
நீ சந்தோஷித்திருக்கையில் 
நீ சலிக்கும்படி செயகிறேன், 
உனக்கான தனிமைக்குள் நுழைந்து 
குட்டிக்கரணம் அடிக்கிறேன், 
உன் மௌனம் 
என்னிடம் நீண்டுக்கொண்டே இருக்கிறது  அறிகிறேன், 
முடியும்வரை மன்னிப்பாய் தெரியும், 
நீ முன்புபோல் இல்லை  என்கிறேன் 
அப்போதுனக்கு நான் 
உற்றத் தோழனாய் இருந்ததை மறந்துவிட்டு, 
எல்லாம் எல்லாம் அறிகிறேன், 
இன்று நான் உன்னுடையவன் 
அதற்காக 
என்றுமான உன் குணங்களை  
அடைக்கப்பார்க்கிறேன் நீ துடிக்கிறாய், 
என் அன்பு இவ்வளவும் செய்யுமா?, யோசிக்கிறேன், 
உள்ளூர வருந்துகிறேன், 
எனக்காகிவிட்டப்பின்பு  எங்கும் போய்விடமாட்டாய் தான்,  
ஏன் எனக்குமட்டும் 
எப்போதும் புதியவளாகவேத் தெரிகிறாய், 
இத்தனை காலத்தில் எனக்கு நீ சலிக்கவே இல்லையே, 
உனக்குநான் 
புதியவனாகிறேன் என்று விழையும்போதே  
ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிடுகிறேன், 
கோழிமுட்டைக் கண்களால் அப்படி பார்க்காதே, 
அவைகளால் வசமாக்கிவிட்ட 
என் பழைய யதார்த்தங்களைக் கொண்டுத்தா ம்ம், 
உன்னிடம் நான் கொண்ட மாற்றம்போல் 
வேறு யாரோடும் நிகழ்த்த முடியாது, 
அத்தனைக்கு நீ என்னில் புதியவளாகிக் கொண்டிருக்கிறாய், 
அது பிடித்திருக்கிறது என்று 
எதையோ  நீ  சொல்லும்முன்பாக 
அதைவிட அதிகம் கொண்டுவருகிறேன் என்று 
நான் சொல்லும்போது  
அதனுடைய ரசனை 
உன்னில் குறையவேக் காண்கிறேன் கண்ணம்மா,,  
எது உனக்கு இஷ்டமோ 
அதை எடு என்று சொல்லும்போது, 
அதை நீ எடுக்கும்போது, 
அதைப்பற்றி நீ  மற்றோரிடம்  
சொல்லிச்சிரிக்கும் காட்சிகளைக் காணும்போது ,, 
அதுவாகவே நான் மாறிவிட்டால் என்ன 
என்றுத் தோன்றும், 
அதை மிகையாக ரசிக்கலாம் தான்,  
நீ அறிந்த என்னையே  
மேலும் மேலும் உன்னிடம் திணித்தேன் அன்றி, 
உன்னை, 
நீ, 
உன்னுடைய சமயம், 
உனக்கான சூழல்கள்  என்பதிலெல்லாம்  
என்னையே இடர்ப்படுத்தி, 
உன்னை தூரமாக்கிவிட்டேன், 
என் இம்சைகளினால் நம் மௌனம் நீண்டுக்கொண்டிருக்கிறது, 
நீ பேசுவதைக் கேட்பதற்கான  
சமயங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன், 
என் எல்லாமே தவறுதான்,  
காயங்களைக் கொடுத்துவிட்டு ஆற்றுவதற்கு நினைத்து  
மேலும் காயம் உண்டாக்குகிறேன், 
தவறுதான், 
இவையெல்லாம் நீ மன்னிப்பாய் என்று அறிவேன், 
இனி நான் மௌனமாகிறேன், 
உன் வகையில் 
எத்தனையோ அரவணைப்புகளை 
என் குற்றங்களுக்குப் பின்னால் தந்தவள் நீ, 
இத்தனைக்குப்பின்னாலும் 
உன்னை நேசிக்கிறேன் கண்ணம்மா, 
நான் உன் 
நிசப்தங்களுக்குப் பின்னால் 
மரக்கதவை கொரிக்கும் 
எலி சப்தம் ஆகிவிடும் முன்பு, 
நீ உன் செவியடைக்கும் முன்பு, 
இதோ நான் மௌனமாகிவிடுகிறேன், 
இனியும் மன்னிப்பாய், 
எனக்கு ஆறுதல் சொல்வாய்,  
இது மரணம்வரை தொடரும் பந்தம் என்கிறேன்,,,,  

"பூக்காரன் கவிதைகள்" 

No comments:

Post a Comment