Friday, 10 February 2017

திருடிப்போன "அவள்" விழிகள்

திருடிப்போன "அவள்" விழிகள் ============================ எதை ரசித்தாலும் யாருடனேனும் சொல்லிக்கொள்ள பிரயத்தனப்படும் கிடுகிடுத்த இதயம் உறங்கி எழுந்துவிட்டு அடுத்தநாளில் நடக்கப்போகின்ற ஒளிப்பதிவு செய்ய முடியாத நிகழ்வுகளைக் கடந்துபோகிறேன் இனிமேலும் இதை செய்யக் கூடாதென பலமுறை உணர்வினோடு சொல்லிக்கொண்டப்பின்னாலும் ஒரு கள்ளக்காணல் தென்பட்டுவிடுகிறது அங்கு நின்று அதையும் அவளிடம் செய்துவிடவேண்டுமாய் முளைவிடும் என் புதிய குறும்புகள் அவளே சொல்லட்டும் நினைத்த கணமே உறையச்செய்யும் இந்த பனிப்பொழிவிற்கு என்ன பெயர் வைக்கலாம் ம்ம் நெரிசலில் அலசுகின்ற குரல்களின் நடுவில் எதையோ அவிழ்க்க எண்ணி தன்முனைப்பில் விட்டுவிடுகிறேன் நெருங்கிடும்போது அவள் பார்வை நிமிராத நடுக்கத்திலும்,, அலைபேசி அலறிடும்போது அவனாகத்தான் இருக்கக் கூடுமோ என்கிற அவளின் படப்படத்தலிலும் விழிகளில் அரும்பிய கடிதங்களின் தூரங்களை அகலமாக்கி அங்கிருந்து போகையில் எத்தனைநாள் எத்தனைமணிநேரம் அதற்குள்ளே குடியிருந்தோம் என்பது அடுத்தமுறை காணும் அதே அவள் விழிகளில் நான் வரைந்த ஏக்கங்களின் ஏற்ற இறக்கத்தினால் கண்டறிந்துவிடலாம் ம்ம்ம் இந்த நீட்சி எதற்கென்றுத்தெரியாமலேயே கட்டுண்ட காலங்களுக்குள் இரு பக்கங்களின் மௌனமும் இடம் மாறி இடம் ஏதோ கிறுக்கி அழிக்கின்றன எனக்குப் பிடிப்பதாய் தெரியப்படுத்தி நாளுக்குநாள் சூடிக்கொள்ளும் செவ்வந்திப் பூக்களின் எண்ணிக்கை அவள்வீட்டுத் தோட்டத்தில் அதிகப்படுத்திக்காணும் போல் அடக்கிவைத்த எதையும் கனவுகளுக்கு விரையம் செய்துவிடாமலும் என் விழிகள் சொல்லவந்ததை சொல்லவிடாமலும் திருடிப்போன "அவள்" விழிகள் அங்குதான் இறைத்திருக்கின்றனபோல் நுனி தொட்டுவிடாமல் பின்னால் நின்று வாசம் களவாடுகையில் என் வாசமே இருந்திருந்தது அவளின் எல்லா நாளின் பூக்களிலும் "பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment