Friday, 7 April 2017

ஆயிரம் பூக்காடுகள் அவள் ஒருத்தி மட்டும்



ஆயிரம் பூக்காடுகள் அவள்  ஒருத்தி மட்டும்
=====================================

ஆக்கிரமித்த உரிமையோடு 
"டீ" என்று அழைக்கிறபோதெல்லாம் 
தாமதித்த மழைக்காலங்களில் 
அவளோடு குடைபிடித்து நடப்பதாய்  நனவோடை  

காற்றொலிப்பான் சப்தம் 
காற்றோடு 
காதையும் அறைந்து உணர்த்தியிருந்தது 
ஆம் அவளை பிடிக்கும் 
அணைத்தலுக்கும் முத்தமிடலுக்கும் இடையிலான 
திரையிட்டக் கட்டுப்படுத்துதலின் 
தனிமையில்  
எதையும் சொல்லாமல் நேசித்திருக்க 

வெளியிடையில் 
மஞ்சுமூடியிருந்த கார்காலம் அது 
சாளரம் திறந்திருக்கிறது 
பனிக்காற்றில் 
அரும்புடை பூக்களின் பிறந்தவாசம் 
வயதை அழைக்கிறது 

தூங்கலையா 
என்ற அவள் ஆகாசவாணியில்
தளுவத்தை இறுக்கிக் கொண்டு ம்ம்
இல்லை இது உனக்கான கவிதை 
அழகா வரவேண்டாமா 
இதைப் பார்த்தாவது 
நீ என்னை தேடுவாய் தானே  
அப்படிப்பார்க்காதே 
உன் பார்வை நெருப்பா இருக்கு  
நீ நல்ல பொண்ணு  
உன் பார்வைக்கு முன்னால்
இந்த பொறிக்கி கண்கள்  
பயந்துதானே ஆகணும் என்றேன்

அவள் விம்பம் கரைந்திருக்கும் 
அந்த அறையின் 
நான்கு சுவர்களோடும் ,, 
உடமைகளோடும் ,,,,,,,,,,,, 
யாரும் பார்க்காத இடத்தில் 
அவளுடனான இலேசான தட்டுமுட்டுதலுக்கு 
இடம் தேடத்தான் செய்கிறேன் 

பண்டிகைநாள் நினைவுபோல் 
ஏதாவது சாகசம் செய்து 
அவளை பார்க்கும்படி செய்யலாம் 
என்ற கனவுகளின் 
ஒத்திகைகளுக்கு நடுவில் 
காலங்கள் கழிந்துகொண்டிருந்தன 
கருவளையங்கள் 
என் மேற்கன்னக்குழிகளை 
தீரா  இருட்டாக்கிக் கொண்டிருந்தன 

தெரியவில்லை ம்ம்ம் 
சர்கஸ் கோமாளி எனவும் 
செல்லப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் ம்ம்ம் 
நிலவின் கறைப்பட்டுத் ததும்பும் 
ஆம்பலின் தணுப்புபோல்
தூர நின்றே அவள் காட்சிகள் மறைந்தன 

நாடோடிக் காற்று தழுவவில்லை 
என்று தொடங்குகையில் 
என்ன என்று கேட்கும் விழிகள் 
பூங்கனல்போல் மின்மினிகளைப் பிரசிவிக்கும் 
இதயக்காரை கோடுவெடித்து  
ரோஜா மொட்டு நாணும் 
முட்களை மிதித்த மூங்கில் விதையாய் 
வார்த்தைகள் கரணமடித்து 
யானைக்காலில் மிதிப்படும் தருணமாகும் 
கந்தகத்தின்மேல்  நடமாடும் 
இரத்தச்சிவப்பழகி அவள் 
ஆயிரம் பூக்காடுகள் அவள்  ஒருத்தி மட்டும் 
அவள் பிடிக்காத 
அந்த மல்லிகைக் கொடியின் விரல்கள்
அவளை விடுவித்ததும்தான்  
ஆண் நெஞ்சுள் இடறிய வலியானாள் 

எண்ணத்தில் உதித்த அக்கண்ணாடி சீசாவின்மேல்
ஒருபுறம் அமிழ்ந்துகொண்டிருக்கும்  
மனக்கடிதங்கள் எல்லாம் 
ஏதும் பேசாமல்  
சேற்றுக்குழைவில் சிக்கிய 
மண் புழுவைப்போல்
அச்சுப் பிறழ்ந்து அழிந்து கொண்டிருந்தன 

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment