Friday, 31 March 2017

வசந்தமா, அடர்மழையா



என்கிட்டே பேசணும்னா நீயே வந்திடுவ, அப்போ பேசிப்பேன், அப்போ தவிர்க்கமாட்டேன், ஏன்னா ,,, வசந்தமும்,, அடர்மழையும் வருடமொருமுறை, எப்போதாவதுதான் வரும், இப்பருவம் உன்மேல், ஓயாமல் சிவிறிக் கொண்டிருக்கும் என்னைப்பார்த்து, நான் வசந்தமா, நீ அடர்மழையா, எனக் கேட்காதே ,, சட்டென்று ஆமாம் சொல்லிடுவேன் ம்ம்,, அடர்மழையில்லாமல் வசந்தமில்லை ஆதலால் ம்ம் பேசிப்பேசி நமக்குள் நாம் அலுத்துவிடவேண்டாம் யாருடனேயாவது பேசிப்பேசி அலுத்துவிட்டு பின் என்னிடம் வா ... அதுவரை, உன் கண்களைப்பார்த்து புதிது புதிதாய் கதைகள் சொல்ல கற்றுவைக்கிறேன் மெதுவாக அலையெனத் தொடங்கிய இந்த இதயத்திற்கு ,, வேகமும் அழுத்தமும் காதலும் காமமும் ரொம்ப அதிகம் ,,, வச்சுக்கோ அடுத்தமுறை நீ என்கூட பேசவரும்வரை ❤ ம்ம் "பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 29 March 2017

காதல் டாபிக்


காதல் டாபிக் 
=============

கயிறறுந்த நாணலாய் 
என் உயிர்  
உன் ஆராதனைகளின் பின்னால் 
தொடர்ந்துகொண்டுதான் 
இருக்கிறது.
உன்னை நினைக்கும்போதெல்லாம் 
என்னுள் நான் 
மீண்டும் ஒருமுறை பிறந்துவிடுகிறேன் 
உன் கை என்னில்பட்ட 
அந்த முதற்தருணமே 
பரிசுத்தமடைந்துவிட்டேன்  நான் 
மதியலை மிதக்கும் 
நனவோடைக் கீற்றுகளால்
தட்டாமாலை ஆடினேன் ம்ம்

மென்சோகம் இழையோட, 
யுகங்களின் அழகில் 
மிளிர்ந்த 
உன்முகமும், 
விரல்கள் பூத்தொடுக்க வழிந்த
உன் குரலின் 
வசீகரமும்
என்னை  
உன்வசம் சரியச்செய்கின்றது
நீ அடிக்கடி 
நம் உரையாடலின் நடுவே
சொல்லிக்கொள்ளும்  "ஆமாவா" 
என்னும் சொல்
என்னை முற்றிலுமாய் கிறங்கவைக்கிறது

உன் பெயரெழுதப்பட்ட 
நீல நிறமைய்யையும்
முதல் முறையாக 
நேசிக்கத்தொடங்கிவிட்டேன் நான்,,,
நீலநிறமைய்யின் 
இழையோடிய எழுத்துகளின்மேல் 
ஒரு பிறைநிலா,,!!
இதுவரை நிமிர்ந்துநாணாத நிறைநிலா,,!!
இருளும் ஒளியும் அற்ற 
என் உலகில் 
இரவும்பகலுமாக 
நான் ஏந்தி தடம் காட்டபோகும் 
தனிநிலா என்னில் நீ ,,,,!!

"பூக்காரன் கவிதைகள்" 

Monday, 27 March 2017

பூக்கள் பூக்கும் தருணம் - சிறுகதை



பூக்கள் பூக்கும் தருணம் - சிறுகதை
=================================

கோவை காந்திபுரம் முன்ன இருந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி டவர் ,  இப்போ கணபதி சில்க்ஸ் இருக்குங்க தோழர் , காந்திபுரம் டவுன்  பஸ் ஸ்டான்ட்  க்கு எதிர்த்தாப்புல சிம்ம சொப்பனமா  இருக்குமுங்க  தோழர்,  
இந்த இடத்தைப்பத்தி ஏன் இப்போ சொல்றேன் தெரியுங்களா தோழர்.

காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டான்ட்

விற்ற, விற்பனை செய்யப்படாத மல்லிகை முழங்களுக்குள் மறைந்த காதல், கோபம், பிடிவாதங்கள், தலைமுறைகளாக, கேலிகள் சுமந்த கற்களாலான இருப்பிடங்கள், தள்ளுவண்டிக்காளான்  கடைகள்,
என்றோ சுவரில் கிறுக்கப்பட்ட, அடையாளம் தொலைத்த,  பழைய அலைப்பேசி எண்கள், தவறவிட்டவைகளை தேடிக்கொண்டிருக்கும் பழைய சிலர், பேருந்திற்காக காத்திருக்கும் சுமதலைகள், அப்போதுதான் சேரப்போகும், கடைசியாகப் பிரியப்போகும், காதல், நட்புடைய லாண்ட்மார்க், பார்த்து பழக்கப்பட்ட பெயர்த் தெரியாத முகங்கள், திறக்கப்படாத இதயங்களின் ஆவிகள் (நினைவுகள்), யாரோவுடைய தொலைந்துபோன பார்வைக்கென தேடித்திரியும் பார்வைகள், சில்லரைத் தட்டின் சப்தங்கள்,  டிரான்சிஸ்டர்களின், அலைவரிசை ஊசலாடும் திறக்கப்பட்ட பெட்டிக்கடைகள், அன்றைய எங்களை நினைவுப்படுத்தும் புதிய நாங்கள் யாரோ,

காலேஜ் முடிச்சிட்டு பிரெண்ட்ஸ் கூட சுத்திக்கிட்டிருப்பேன் தோழர் , அடுத்து வேலைக்குப்போலாமா இல்லை மேலே படிக்கப்போலாமா என்னும் குழப்பத்திற்கிடையில், சான்றிதழ்களை கலரில் நகலெடுக்க ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி டவருக்குள் நுழைகிறேன், 1996  கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப்பின் டவரின் ஒரு பகுதி காலியாகிக்கிடந்தது, இன்னொருப் பகுதியில்  

ஸ்டார் செராக்ஸ், கருப்புவெள்ளை அச்சு எடுக்கும் பிரிவு, வண்ண நகல் பிரதி மேலும் அச்செடுக்கும் பிரிவு, விசிட்டிங் கார்ட், இன்விடேஷன், பிரௌச்சர், புத்தகங்கள், வடிவமைக்கும் பிரிவு, செய்தித்தாள் போஸ்டர் என வடிவமைத்து அச்சிடும் பிரிவு, பெரிய பெரிய வரைபடங்கள் வரையும் பிரிவு என ஏராளம் பிரிவுகள் இருக்கின்றன. அந்த இடம்,  அங்கே பணி புரியும்  இளம் ஆண்களும் பெண்களும் திருமணமானவர்களும் என கலகலத்துக் கொண்டிருக்கும் அவ்விடைத்தையொத்த சூழல் டவர் அருகே உள்ள டீக்கடை, சுப்பு மெஸ்  என  அந்த இடம்  லெகுவாக என்னை கவர்ந்திருந்தது தோழர்

நகலெடுக்க அற்பசமயம் காத்திருக்க வேண்டியிருந்ததால், வெளிப்புற சுவர்களில் பதியப்பட்ட வண்ணப்படங்களின்மேல் இலயிக்கலாமே என பார்வையை ஓடவிட்டேன் தோழர்  

A4 அளவைவிட சிறிய அளவிலான தாளில் ஆட்கள் தேவை என்ற, ஸ்டார் செராக்சின் விளம்பரம், பில்டிங் வரைப்படம் மேலும் பொதுப்பணித் துறையின் மேப் வரைப்படம் கம்பியூட்டரில் வரைய ,, கணக்கீடு செய்யம் பணிக்கான விளம்பரம் அது தோழர்

பார்ட் டைமில் வேலைக்கு சேர்ந்தால் என்ன என்று தோணிற்று அன்று அதன் உரிமையாளரை சந்திக்க முடியவில்லை , மறுநாள் காலை நேரத்தே எழுந்து என் காரில் வந்து பார்த்தபோதுதான் உணர்கிறேன்
அங்கு டவருக்கான பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்று

நூறடி ரோட்டில்,  இடம்பார்த்து காரை பார்க் செய்துவிட்டு, ஒரு ஆட்டோ ரிஃஷாவில் போய் இறங்கினேன்
உரிமையாளரைப்பற்றி விசாரிக்கும்போது, இரண்டாம் தளத்தில் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து
நேரிட்டுக் காணச் சென்றேன்.

அற்பம் காத்திருக்க நேர்ந்தது தோழர் , மோசமில்லை அவரைக்கண்டு பேசி விண்ணப்பத்தை அளித்ததும், ஒரு மூன்று நாட்கள் சமயம் கேட்டிருந்தார், ஆனால் அடுத்த நாளே கூப்பிட்டு வேலைக்கு சேரலாம் என சொன்னது
மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது தோழர்  

சிறுவயது முதல் தனியாகவே இருந்துவிட்டு எனக்கு, நெரிசலில் புழங்குவதும், நெரிசலில் பயணிப்பதும் புதிது எனினும்  அதிகம் விருப்பப்படுகிறேன் ஆம் தோழர்

காலையில் டவுன் பஸ்ஸில் பயணம், சீட்டு சிலபோது கிடைப்பது கடினம் இருந்தாலும் வேலைக்குப் போகிறவர்கள் மத்தியில் விழும் பேச்சு கேலி இவைகளினூடே பயணிப்பதுவும் அலாதிதான் தோழர்

காலத்தோடு வேகமாக விரைந்து கொண்டிருக்கிறேன் தோழர், ஸ்டார் செராக்சில் எல்லோரும் ஏறத்தாழ நண்பர்களாகியிருந்தோம் ஆண் பெண் என பேதமில்லாது, சுப்பு மெஸ்ஸில் ஒரு சாப்பாடு ஆர்டர் செய்தால் ஆறு பேர் சாப்பிடலாம் 18 ரூபாய் சாப்பாடு,, ( பீசில்லாத மீன் குழம்பு, கோழி குழம்பு , கறிக்குழம்பு சாம்பார் ரசம் , மோர், நிறைய சோறு, அப்பளம் என பெரிய பார்சல்) ஒன்றாக சாப்பிடுவோம் பங்கிடுதலிலும் பேதமில்லை அங்கே. தோழர்

ஜெனெரல் ஷிப்ட் முடிந்தால் எல்லோரும் ஒன்றாக பஸ் ஸ்டான்ட் போவோம் தோழர்  , நிறைய நேரமிருந்தால் வஉசி பார்க்  போயிட்டு திரும்ப நேரத்துக்கு பஸ் ஸ்டான்ட் இல் வந்து,, கட்டிட இருக்கையில் சாய்ந்து இருந்து மொக்கைப்போடுவோம், அதில் சிலர் காதலித்துக் கொண்டிருந்தார்கள், சிலர் அவர்களுக்குள்ளாரே சண்டையிட்டுவிட்டு  பேசாமல் இருந்தார்கள், சிலர் புரளி பேசிக்கொண்டிருந்தார்கள் சிலர் அரசியல் சிலர் நகைச்சுவை என  இப்படி ஒன்று கூடும் பஞ்சாயத்தெல்லாம் அப்பொழுதுதான் வெளிவரும், ஒவ்வொருத்தருக்கான பஸ்  வரும்போது விடைபெற்று போவோம் தோழர் ,,, நண்பர்களின் திருமணம் என்றால் கூட்டத்தோடு போயி கும்மியடித்துவிட்டு  ஒன்றாக படம் பிடித்து பின் பணிக்குத் திரும்புவோம், அந்த வாழ்க்கை  இன்று  யாரோ அன்றைய எங்களுக்கு பதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் போல தோழர், பிடித்த பெண்களுக்கு பிடித்த ஆண்கள் வாங்கித்தரும் மல்லிகைப்பூவிற்கு பிரத்யேக வாசமிருக்கும் , பரிசு பொருட்களுக்கு அதன் மதிப்பிற்கும் அங்கே .... இப்படி அழகாகக் கடந்துகொண்டிருந்தேன் வாழ்நாளின் என் நடு பக்கங்களில் நான் தோழர்

அப்போதுதான் தோழர், சுற்றும் முற்றும் பார்க்காமல்  வேகக்கடக்கும் என் வாழ்க்கை வீதியில் ஒரு ஹாரன் சத்தம் போல, காலைப்  பூக்கள் சட்டென்று பூக்கும்போது சன்னமாய்  புறப்படும் மீயொலி போல, அவள் மொழி மென்மை,  அப்பேருந்து நெரிசலின் சலசலப்பைக் கடந்து முதல் நாள் என் செவி   கிழித்தது தோழர், "பர்ஸ் காணோம் என்ற மொழி" ஆம் அவளைப் படைத்தவனின் குரூரம் முழுவதும்  என்னிடம் திரும்புகிறதை என்ன சொல்லுவேன்  தோழர், பேயாது நின்ற ஆயிரம் காலத்து அடைமழை ஒன்றாக ஒருநாளில் என் மேல் பொழிவதைப்போல, அதுநாள் அடைத்துவைத்த புதிய  இசையை அன்றுதான் பூமிக்கு அனுப்பிவைத்தானோ இறைவன் என்பதைப்போல, சுற்றி என்னை சொர்கமாக்கினாள் நிமிடம் தோழர்,

அன்றிலிருந்து அப்பேருந்து பிரவேசம் என்னில் புதிய  பிராரப்தம் என்பேன் தோழர் , அவள் இருக்கைக்கு நெருக்கமாகச் சென்று நிற்பேன், எப்போதும் பயணிக்கும் ராஜி அக்காபாக்கத்தில் அன்று அவளிருந்தாள்,
இயற்கையை சபிக்கும்படி கட்டளைக்கு ஆளாக்கப்பட்டேன் அவள் பார்வையற்றவள் என்று அறிந்த அந்த நிமிடம், காணாது போயினும், மீண்டும் காணும்படி கண்களைப் பிறாண்டும்  மிளிர்ந்த விழிகள், காற்று அவள்
கூந்தலை அழகாய் அலைக்கழிக்கிறது, அவள் கன்னக்குழிகளைக் கணவாவது, அவளை மீண்டும் சிரிக்கவைக்கலாமா என்று தோன்றும் அழகு தோழர்,

ராஜி அக்கா, சகப்பயணி, பஸ் ஏறும்போது பார்த்து சிரிப்பார், மேலும் பஸ்ஸில் கூட்டம் அதிகமாகும்போது
என் கைய்யிருக்கும் சோற்றுப்பையை வாங்குவார்கள், கொஞ்சமே பேசுவார்கள், அதைத்தவிர
அவர்களைக்குறித்து எனக்கு அவ்வளவு தெரியாதுங்க தோழர், அன்றுதான் ஆரம்பித்தோம், ஒருமணிநேரம் நிறைய தரிப்புகளை பேருந்து கடந்து செல்வதால் மிகையான சலிப்பிலிருந்து கடக்க அந்தாக்ஷரி ஆரம்பிக்கலாமா என்று,

அதற்கு அடுத்த நாளிலிருந்து முன்பாகவேச் சென்று பஸ்ஸில் முன்பக்கமாக ஏறி அவள் முகம் காணும்படி ஒரு இடம்பிடித்து எதிரிலுள்ள கம்பியில் சாய்ந்து நின்றிடுவேன், அன்றுதான் ராஜி அக்கா, அவளிடம்
என்னையும் என்னைச் சுற்றிய சிலரையும் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள், பின்பு எல்ல்லோரிடமும்
இவள் மலர்விழி என்று ராஜி அக்கா சொன்னபோது, மலர்ந்த அவள் இதழ்கள், அந்த நொடிக்குள் விழுந்து
திருடிக் கொண்டிருக்கிறேன் சுயநலம் தோழர், நிறைய நேரம் அந்த அழகைத் திருடிக் கொண்டிருப்பதை
எது உணர்த்தியதோ தெரியவில்லைத் தோழர், தானே உணர்கிறாள் போல தலைகுனிந்தாள் தோழர்,

அந்தாக்ஷரியும் அவளும் நானும் ராஜி அக்காவும் இன்னும் சிலரும் என இருந்த அந்த அழகான பயணத்தில்,
நான் மலர்விழியிடம் சாய்ந்து கொண்டிருக்கிறேன்  நிமித்தங்களை, ராஜி அக்கா ப்புரிந்து கொண்டார்கள் தோழர்,  ராஜி அக்கா என்னை புரிந்துகொண்டார்களே அன்றி அதை அவளிடம் சொல்லிருக்கமாட்டார்கள் என்பதில் என்னில் தெளிவிருந்தது தோழர், நானும் அவள் எங்கு போய்விடுவாள் மெதுவாக ஒரு நல்லவேலை கிடைக்கும்போது எல்லோருக்கும் இனிப்பு வழங்குவதைப்போல தொடங்கி அவளுக்கும் கொடுத்து   மனதை சொல்லிவிடலாம்  என தாமதித்திருந்தேன் தோழர், அவளுக்குத் தருவதாய் எண்ணி அவளைக்கண்ட அந்தநாளில்  கிறுக்கிய கவிதையொன்றை இதுநாள் வரையும் எத்தனை உடுப்புகள் மாறியபோதும், அதை  அன்று  இடும் உடுப்பின் சட்டைப்பையில் மாற்றிவைக்க மறக்கவில்லைத் தோழர்,

கயிறறுந்த நாணலாய்
என் உயிர்
உன் ஆராதனைகளின் பின்னால்
தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
உன்னை நினைக்கும்போதெல்லாம்
என்னுள் நான்
மீண்டும் ஒருமுறை பிறந்துவிடுகிறேன்
உன் கை என்னில்பட்ட
அந்த முதற்தருணமே
பரிசுத்தமடைந்துவிட்டேன்  நான்
மதியலை மிதக்கும்
நனவோடைக் கீற்றுகளால்
தட்டாமாலை ஆடினேன் ம்ம்

மென்சோகம் இழையோட,
யுகங்களின் அழகில்
மிளிர்ந்த
உன்முகமும்,
விரல்கள் பூத்தொடுக்க வழிந்த
உன் குரலின்
வசீகரமும்
என்னை
உன்வசம் சரியச்செய்கின்றது
நீ அடிக்கடி
நம் உரையாடலின் நடுவே
சொல்லிக்கொள்ளும்  "ஆமாவா"
என்னும் சொல்
என்னை முற்றிலுமாய் கிறங்கவைக்கிறது

உன் பெயரெழுதப்பட்ட
நீல நிறமைய்யையும்
முதல் முறை
நேசிக்கத்தொடங்கிவிட்டேன் நான்,,,
நீலநிறமைய்யின்
இழையோடிய எழுத்துகளின்மேல்
ஒரு பிறைநிலா,,!!
இதுவரை நிமிர்ந்துநாணாத நிறைநிலா,,!!
இருளும் ஒளியும் அற்ற
என் உலகில்
இரவும்பகலுமாக
நான் ஏந்தி தடம் காட்டபோகும்
தனிநிலா என்னில் நீ ,,,,!!

சொல்லிக் கொள்ளலாம் நேரங்களில் தோழர்,  பெங்களூரில் ஒரு பெரிய அடுக்ககம் கட்டும் நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கு அழைத்திருந்தார்கள், எப்படியோ அந்த வேலை எனக்குக்கிடைத்துவிடும், மலர்விழியுடைய  மலர்விழிகளாக கிடைத்த இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளவேண்டுமாய்
அதையே ஒரு இலட்சியம் செய்துக்கொண்டேன்  தோழர், யாரிடம் போலும் சொல்லாது ராஜி அக்காவிடமும் சொல்லாது, பெங்களூர் சென்றுவிட்டேன், நெடும்பயணத்தில் எப்போது இந்த நேர்முகத்தேர்வு முடியும், முடிந்ததும் என்னைச்சுற்றி பின்னால் சிறகுகள் முளைக்கச்செய்து உடனே பறந்து சென்று  அவளைப்
பார்த்துவிடவேண்டுமாய், அடக்கிவைத்தவைகளை பொட்டித் தெறிக்கவேண்டுமாய் துள்ளிக்கொண்டிருந்தன  என் ஆவல்கள் தோழர்,

நேர்முகத்தேர்வு முடிந்து, திரும்ப வந்த அந்த இரவை கடக்க அப்பப்பா எத்தனை போர்க்களம் போல தோழர்
விடிந்தும் விடியாத நேரத்திலேயே கிளம்பி பேருந்து தரிப்பில்  புறப்பட்டுப்போய் நின்றுவிட்டேன் தோழர்
அன்று எல்லோரும் வந்திருந்தார்கள், மலர்விழியும் வந்திருந்தாள், இனிப்புகளுடன் சென்ற என்னிடம்
நான் முந்தும் முன்பு ராஜி அக்கா இனிப்புகளுடன் முந்திக்  கொண்டார்கள் தோழர், விஷயம் எட்டாமல்
வியப்பிற்குள் விழ இருந்த நேரம் தோழர், ராஜி அக்காவே அவர்கள் குரலுயர்த்தி, என்னை முழுநாள் ஊமையாக்கும் செய்தி ஒன்றை சொன்னபோது என்னை அறியாமலேயே நான் வீழும் கண்ணீரை விழாமல் விழுங்க இடம் தேடினேன் தோழர்,

ஆம், மலர்விழி மருது  என்ற இருவரின் பெயரிட்ட அவர்களுடைய புகைப்படம் பதிந்த  அந்த திருமணவோலையை, ராஜி அக்கா என் முன்னால் நீட்டியபோது, அவளும் அவளைப்போன்றே
ஒரு பார்வை அற்றவரை  திருமணம் செய்யப்போகிறாள்  என்னும்போது, இதயம் கருகும் ஓசையால் செவியடைத்துப்போகிறேன் தோழர். வாழ்த்துவதைத் தவிர வேறென்ன செய்யப்போகிறேன் சொல்லுங்கள் தோழர்,

நன்றி - பூக்காரன் கவிதைகள்

Sunday, 26 March 2017

மொட்டு முளைத்தநாள் வாழ்த்து டியர்



With Pavithra Ethiraj

முகநூல், நிறைய நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கு எனக்கு, எங்கும் சரி,, சிலராலே மட்டுமே எல்லாரையும்
சந்தோஷப்படுத்திக்கடக்க முடியும்,,அதுக்கு ஆதர்ஷமான  ஒரு குழந்தைத்தனம் வேணும்,, நம் கிண்டல் கேலிகளைத்தாண்டி, இப்படி ஒரு நட்பிருக்குன்னு சொல்ல,, ஒரு உரிமை வேணும்

உனக்கு  இத்தனை வயசு ஆனப்புறமும்,, உன்னை ஒரு குழந்தையாதான், என்னாலே பாவிக்க முடியுது பவித்ரா ,,

எந்த கள்ளக்கபடமும் இல்லாத, மறைவில்லாத உன் பேச்சு, உன் பதிவைக்கடக்குறப்போ ஏற்படும் நகைப்பு, நாலு வார்த்தை பேசும்போது கிடைக்கும், ஆசுவாசம் என எல்லாமாய் ஒரு தோழி ரூபத்தில் இருக்கிறாய்
அதற்கு முதலிடம் க்ருஷ்ண லக்ஷ்மி  தான், அவதான் இப்படிப்பட்ட குணாதிசயங்களோட எங்கிருந்தோ வந்து பூமியில் குதிச்ச தேவதையல்லாத   முதல் பிறவி ன்னு தீர்க்கமா சொல்லமுடியும், இப்போ நீயும் பவித்ரா,

நம் பிறவிக்கு அடையாளம், மனதுக்குள் கட்டிக்கிடக்கும் எத்தனையோ சுமை வார்ப்புகளுக்கப்பால்
நம்மால் யார் சந்தோஷப்படுகிறார்கள் என்பதாகத்தான் இருக்கும்,, அப்படித்தான் நான், ஆனால்
என்னுடைய சந்தோஷங்களை திரும்பப் பெற்றுத் தந்தவர்கள் நீங்க ரெண்டு பேராத்தான் இருக்கமுடியும்
(விளக்கங்கள் இல்லை)

"யாருமில்லாத தனிமை, அப்பொழுது தோன்றும் நிலா, உயர்ந்த மரங்கள் தொட்டு, பூக்கள் குளித்து வாசம் ஒழுகி, களவி (திருடி) மெய்சிலிர்க்கச் செய்யும் மென் காற்று, என் இருள் ஒளிக்கும் பின்னிரவு, தரைத்துள்ளும் சன்னப்பின்ன மழை, இதயம் போல விசாலமாக திறந்திருக்கிற ஜன்னல், சட்டென்று உண்டான வசந்தம், அதில் பூத்த ரோஜா, க்ருஷ்ண லக்ஷ்மி,  இப்போது நீ,  பனித்துளி,  ஏன் உன்னை முதலில் வருடவில்லை என்பதில், என் எத்தனை எத்தனைக் கற்பனைக்கப்பாலும், இயற்கையின்மீது முடியாத   முரண் தான் எனக்கு... பிடித்த வாசனை, நம்  நரம்புகளை, நாசியை புடைக்கச் செய்யும்போது, முகம் சிவந்து, கண்கள் இறுகி, நுதல் சுருங்கி அழகாவதைப்போல, அழகாகிறேன் உள்ளம்,,, உன்னோடு  தோழமைக்கொண்ட உள்ளம்

உனைப்புரிந்த உன் மாம்ஸ் க்கு எப்போதும் போல, உன்  வயசு கூட கூட குழந்தையாகத்தான் இருப்பாய்,
மேலும் கிருஷ்ண பிரசாத் வளர வளர அவனுக்கு நீ அக்காவா என்று பிறர்க்கேட்கும் படி, அழகாகவே மாறிக்கொண்டிருப்பாய்,,,,,

பூக்காரன் கவிதைகளின்
மொட்டு முளைத்தநாள் வாழ்த்து டியர் ஃபிரென்ட் :)

Thursday, 23 March 2017



அணைப்புக்கு அடுத்த பட்சமாய்
=============================

என் அறியாமை விரிசலை உன் கண் கூர் சீவுகிறது
தாவணி  அலைவரிசையில்
மாறி மாறி புலப்படும்
ப்ரிண்டட் பூக்களுடைய லோகம்
ஒரு புகைப்படத்திற்குள்
பல நிறங்களாக மாறுகிறாய் ஒப்பனை

சண்டை  முடிவில்
முத்தமிடுவேன் என்பதால் தானே
அவ்வப்போது  
சண்டைப்போட அழைக்கிறாய்
பயப்படாதே
இன்றோ நாளையோ மாறிவிடும்
ஒரு சுழற்சி மூச்சால்
சூடு பட்ட என்  சில்லென்றவைகள்

உன்னில் எத்தனையாவது நீ  தொடர்கிறாய்
திறக்கும் குழிகளை
திறப்பதும் மூடுவதுமாய்

வாசிப்பு நிறுத்தத்தின்
சிறு அசதியில்
வளர்க் குரல் சிரிப்பு விசிறி பின்
விசிட்டிங் கார்ட் தொலைத்த கனத்த ரயில் பயணம், தடதடத்த இதயம்,

பார்வை முடிவிலிப் பெய்தலின் தினசரி கலைக்கண்,
பருவக்காடு மேவும்
ஆண் கனவு,

அலசலில்,
இடம் எங்கே எனும் இன்னும் சற்று நேரத்தில்
கடினநாணல் அவிழும்
காணாமல் போய்விடுவாய்,
ஆர்ப்பரிப்புகளை ஒளித்துவிட்டு
அளவு மிஞ்சாத சினிமா  நடிகன் போல
நொடிகளின் காலாவதிக்குள்
திருடுபோய்க்கொண்டிருக்கிறேன் தொடக்கம்  

மொழி தெரியுமோ தெரியாதோ,
கவிதை சொல்லிக்கொடுக்கும் மௌனம் கொல்லுதே,
எங்கோ புதைந்துகிடக்கும்
புதையலொன்றின்
தேடல் போல
விரல்களுக்குத் தட்டுப்படாத  இதமாகும்  அரிப்பாகுதே

இணை சேராத
காந்த துருவம்போல
காற்றிலே அணைப்புக்கு அடுத்த பட்சமாய்
வெட்கங்களிரண்டும்
வெவ்வேறு கோணத்தில்  திசை மாறுதே

கடையாணி அறைகிறாய் கால வெள்ளை க்ரூரத்தில்
கரும்புள்ளி ஆகிறேன் மனசு சுவரப்படம்  

"பூக்காரன் கவிதைகள்"

Tuesday, 21 March 2017

அம்பாலிகா - சிற்றுண்டி சிறுகதை



அம்பாலிகா  - சிற்றுண்டி சிறுகதை
=================================

மூன்றாம் யாமத்துக் கனவில்
அந்த புறங்கடையில் இறங்கி
தடவுகளை ஒதுக்கி
சற்றே நடந்தால் ஒரு குளமிருக்கு
தேவதைக்குளம்
அவனோடுள்ள
நிறைய சண்டைகளுக்குப்பின்னால்
அம்பாலிகா
தேவதைக் குளத்து பரதேவதைக்கு
விளக்கேற்ற சென்றிருந்தாள்
அப்போது
நிறைய இறகுள்ள
ஒரு மயில்
அவளைச்சுற்றி  பறந்து வந்து
முன்புள்ள  நிலவிளக்கின்மேல்  நின்றது
அது  அம்பாலிகையை நோக்கி
வட்டமிட்டு  வட்டமிட்டு
ஓரோரு பீலியாய்  
உதிர்த்துக்கொண்டிருந்தது ,
காடு முழுதும் பீலிகள் நிறைந்துகொண்டிருப்பதை
அங்கிருந்தவர்கள் கண்டபோது
அந்தரீக்ஷத்தில்
பறந்துகிடக்கின்ற
பீலித்தும்புகளுக்கு இடையினூடே
அம்பாலிகையைக்
கைப்பிடித்து நடந்துபோகின்ற
தேஜஸ்கள் நிரம்பிய  ஒரு தேவகந்தர்வன் அவன்
அதுவரை,
யாரும் காணாத தேவகந்தர்வன்
அம்பாலிகையை
கண்முன்னில் நிறுத்தி
நேரே அக்குளத்திற்குள்  மூழ்கிவிட்டிருந்தான்
பின்பொருக்கிலும் திரும்பி வரவில்லை
அங்கிருந்தவர்கள்
குளம் முழுவதும் வற்றச்செய்து
எத்தனைத்  தேடியும்,  காணவில்லை

Cut.......................

அன்றொருநாள்,எதுவுமே இருக்கவில்லை,
நம் சந்தோஷங்களைத் தவிர.
நிலவொளியும் ஓயும் பாடில்லை,
இந்த இரவு, முடியும்பாடில்லை,
மரணித்த தோளில்
முகப்பூ சாய்ந்திருக்கிறாள்  நினைவுகள்

"பூக்காரன் கவிதைகள்"

Friday, 17 March 2017

டைம்பாஸ் டைம்பாஸ்

டைம்பாஸ் டைம்பாஸ் 
======================

காலம் தப்பிய மழை என்பதால் 
கம்பியில்லாத ஈயச்சட்டங்களைத் திறந்துவிட்டு 
வெளியே நடக்கலாமா வேண்டாமா என 
யோசித்துக்கொண்டிருக்கிறேன் 
தெலுங்குப்படத்தில் வருவது போல 
சம்பந்தமில்லாத 
உடைகளை அணிந்துவிட்டு கண்ணு சிவக்க 
நண்பர்களோடு 
வசனம் பேசிக்கொண்டிருக்க இஷ்டமில்லை 
சரி, டீவீ  சேனலை மாத்தலாமுன்னு முடிவு பண்ணி 
ரிமோட் கண்ட்ரோலை 
நோண்டி நோண்டி ரிப்பேர் பண்ணிட்டேன் 
பேஸ்புக் பாத்தா 
எல்லோரும் சுத்தமா மொக்கைய போட்டு வச்சிருக்கானுங்க 
என்ன பாக்குற 
ஹோ, உன்னைப்போலவே 
யாருமில்லாம தானே பேசிக்கிட்டிருக்கானே 
இவன் யாருன்னு பாக்குறியா ??

""போன் ரொம்ப நேரமா அமைதியா இருக்கு 
உன்னைப்போலவே தான் நானும், 
ரேகைகளுக்குள் சத்தியம் ஒளிக்கிறவன்
உன் நடையின்  வேகம், 
எப்போதும்போல, என்னைப் பின் தள்ளிக்கொண்டிருக்கிறது
என் கைவிரல்களை, 
உன் அருகிலேயே வைத்திருக்கிறேன்   
உன் உறக்கத்தினோடே 
எப்போதும் நீ அணைத்திருக்க துணையாய் ம்ம் 
வெளியில்
மழைக்கு முன்னாலுள்ள காற்று  
பூவிதழ்களின் ஆயுள் பறித்துக்கொண்டிருக்கிறது  
நினைவுகளைத் தவிர, 
இங்கு சகலமும் மாறிவிட்டன 
சரி, போரடிக்குது  
காய்ந்துபோன சருகொன்றை எடுத்து 
நிறைய மையிருக்கிற பேனாவால்  
சும்மாங்காட்டி குத்திக்கொண்டிருக்கலாமா "" 

ஐயோ 
இந்த தெலுகு ரீமேக் டூயட் பாட்டு உயிரை எடுக்குது 
ஒட்டுக்கேக்கற மாதிரி 
அக்கம்பக்கத்து ரகசியமெல்லாம் 
அவ்வளவு சுவாரஸ்யமா இல்ல 
பிரெண்ட்ஸ் யாரையாவது கூப்புட்டு வச்சு பேசலாம்னா 
சரக்கடிச்சிருப்பானுங்க 
பேசுனதையே பேசி சாவடிப்பானுங்க  
ஷாப்பிங் மால் போயி பராக்கு பாக்கலாமா ம்ம் 
பொண்ணுங்கள சைட் அடிக்கிறதெல்லாம் 
அக்கப்போரு ம்ம்ம்கூம்ம் 
பிரகாஷ் ராஜுக்கும் 
அவன் கடத்திட்டு வந்த அந்த நொன்னை 
பத்திரிக்கைக்காரனுக்கும் 
டயலாக் போயிக்கிருக்கு உலக மொக்கையான 
பிரகாஷ் ராஜ்ஜோட டயலாக் 
இந்த படத்துலதான்  இருக்கும்போல 
வேறே என்னதான் செய்ய 
ஆஹ், இரு வாறன் ஒரு டீ போட்டு எடுத்துட்டுவாரேன் 
எதுனாச்சும் ஐடியா கிடைக்கும் ம்ம் 

ரமீச வரச்சொல்லி 
கொஞ்சநேரம் வெளிய எங்குட்டாச்சும் போயிருக்கலாம் 
திருவனந்தபுரம் மலையாளம் 
செம்மயா பேசுவானே, டயம் செம்மயா போகுமே  ம்ம் 
நேத்து க்ரீன் கேட் 
சாப்பாட்டைப்பத்தி பேசி 
அவனுக்கு கொதியேத்தி விட்டுட்டேன் 
அதே ஞாபகமா சுத்திக்கிருப்பான் 
சரி விடு, அப்புறமா கூப்புட்டு, டீ டைம் பார்க்கிங் ல போயி 
காருக்குள்ள இருந்து 
ஆர்டரைச் சொல்லிட்டு அவன் கொண்டாரவரை 
அவங்கூட மொக்கைப்போடலாம் 
இதுவும் சுகமாத்தா இருக்கும்ல ம்ம்ம் 
ஆமா அவன்தான் இன்னைக்கு இளிச்சவாயன் 
வாங்கிக்கொடுக்குற 
ஹார்லிக்ஸ் க்கு மேலேயே ஜாலியா பேசுவான் ஆங் 
இன்னைக்கு வெள்ளிக்கிழமை 
முடிஞ்சா சரி ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ஹாஹ் 

பூக்காரன் கவிதைகள்

Thursday, 9 March 2017

காதல்

கடந்த காலங்களைச் சொல்லிதான் 
இணையவேண்டுமென்பதோ பிரியவேண்டுமென்பதோ இல்லை 
தொட்டுப்போகும் பூக்களோடு 
காற்று தன் தனிமையை 
மென்மையாகத்தான் சொல்லிப் போகிறது
காதல்
நேற்றுப்பெய்த மழைப்போல
 அடுத்த கணம் நின்று போயிருக்கலாம்
பருவம் சேரும்போது
அதே மழை
திரும்பப்பெய்வதில் அதிசயமில்லாததைப்போல
போன காதல்
என்றாவது வந்து சேர்ந்துவிடும்
மழையே வா
என்று கேட்காதிரு மனமே <3 :)

Monday, 6 March 2017

நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா



நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா ==================================================== இயற்கையின் குருட்டிற்கு ஒரு நிமிட பார்வை வரம் அது, காதல் போன தெரு அதுதான் என்றுத் தெரியாமலேயே கைவீசி நடந்தேன் போல், பார்வைகள் அருகி பந்துபோல் புறப்பட்ட இடத்தே திருச்சேறும் தூரம் தான் நீ எனக்கு, என் இறந்தகாலத்தின் இளவேனிற்காலம் நீ, கனவுகள் தனிமைத் திருடியபோது, கவிதைகள் கற்பனைத் திருடின, அற்பநேரந்தான் அந்த உறக்கம், கண்களைத் திறந்தபோது யுகங்கள் தவமிருக்கும் ஞானியைப்போல பயணத்தில் யாருமில்லாததைப்போல, காட்சியில் விழுந்த கருணை நீ, பூத்துக்குலுங்கியது மனதில் பூக்கள் மட்டுமல்ல நீயும் தான், அகந்தோறும் இதயம் துடிக்கும் வினாடிகளைப்போல ஆசை மகரந்தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாய் வேதியலே, அவளிடம் கொண்டு செல்லும் வாய் நண்பன் மௌனிக்கின்றானே சரியா ம்ம் இங்கிருந்திருந்தால், போதிமரங்களோ புத்தனோ பொறுமையிழக்கும் போர்க்களம் அல்லவா செய்தேறிக் கொண்டிருக்கிறாய் இலை ஏறிய எறும்புபோல், இந்த பயணம் ஏன் இப்படி சுகமாக கனக்கிறது,? அறியாமல் கூட சோம்பல் முறிக்க எத்தனித்தாலே விரல்களில் நான்கைந்து அவள் விழும் கூந்தல் தொடுமே, காக்கைப் பழங்களையும்,, காகிதச் சுருட்களையும், கற்கள் சிறு கூட்டத்தையும், கையிலேந்தி எதைநோக்கி பயணப்பட்டிருக்கிறாள், எதையும் செய்யாமல் எல்லாம் கொள்ளைக் கொள்பவளிடம் என்னையும் கொஞ்சம் களவாண்டுப்போயேன் என்கிறதே, வழிமாறிய நிமித்தமாய் வயது ம்ம் அடம்பிடித்துதான் அமர்ந்திருப்பாள் போல், பயணம் அறையும் காற்று அவளுக்கு பிடிக்குமென்றுத் தெரிந்தபோது, காற்று என் எதிரி ஆனதேனோ, கவிக்கு முரண் கொடுக்கிறாள், வசப்படாமல் தவிர்க்கலாமா ம்ம் ஓரோரு முறையும் முகத்தில், முன்னே சரியும் கூந்தலை திசைத்திருப்பி எனக்குள் மோதலை ஏற்படுத்திவிடும்போதெல்லாம் அதை அரண் வைக்கலாமா என்று ஸ்தம்பித்துத் தோற்கிறேன், பொறுக்கிய கற்களை ஒவ்வொன்றாக எதிர்வரும் வாகனங்களினூடே இலக்குப்பார்த்து எறியும்போது, என் ஆரவாரங்கள் ஒட்சையேதுமின்றி கைக்கொட்டிச் சிரிக்கின்றன. நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிழைகளை என்னைத்தவிர யாரும் பார்த்துவிடக்கூடாதே, கைக்கூப்பி, கண்கள் மூடி இறைஞ்சினேன், கவிஞனை காட்சிகளின் திருடனாக்கியவளின் நிமிடங்களை அள்ளி எடுக்கத் துணிந்தபோது என்னை இழந்திருந்தேன்... என்னையும் சேர்த்து எல்லோரும் அவர்களை இழந்திருந்தார்கள். கண்களிரண்டையும் மூக்கின் நுனியில் நிலைநிறுத்தி நித்திரைவரம் பெறும் மனோதத்துவம் போல, காட்சிகளுக்குள், அத்தனைக் கண்களையும் நிலைநிறுத்திப் போனவளை இனி எந்த வழக்கில் தான் தண்டிக்கப்போவது ம்ம் இம்முறை அவள் சரிந்த கூந்தல் என் திசை திரும்பவில்லை ஏன்,?? கற்களும், காக்கைப்பழங்களும், காகிதச் சுருட்களும் தீர்ந்துவிட்டனபோல், ஏதுமில்லாத காலோச்சையோடு உதடுக்கடித்து கம்பிகளின்மேல் தலை சாய்ந்தவளுக்காய்,, காட்சிகளுள் சிறைப்போன நொடிகளை மீண்டும் எழச்செய்யலாமா, ?அவள் தொலைத்த கற்களோ காகிதக் கூழோக் கைச்சேருமா?? என்று என் அக்கம்பக்கம் துழாவுகிறேன்,, ஓடும் பேருந்திலிருந்து தாவி பொறுக்கிக் கொண்டுத் தரலாமா, ?? உயிரை இழந்துவிட்டு இவளை விடுவதா வேண்டாம் வேண்டாம், இறங்கும் முன்பு இரவல் விலாசமாய் நேசிக்கின்ற இதயம் வேண்டாம், திருடிச்சென்ற விழிகள் தா என யாசித்துவிடலாம் குற்றமில்லை. "பூக்காரன் கவிதைகள்"

விலைமதிப்பில்லாதவைகள் -

விலைமதிப்பில்லாதவைகள் -
டெக்னாலஜி யின் உச்சக்கட்டம் கேட்பதையெல்லாம் அடுத்தடுத்துக் கொடுத்துவிடுகிறது, டிஜிட்டல் ஆல்பம் ஆனால் இவைகளுக்கு ஆயுள் அவ்வளவு இல்லை என்றே சொல்லலாம், நிழற்படவியால் எப்போதோ க்ளிக்கிவிட்டு அந்த மென்படலத்தை டெவெலப் செய்து பிரதி எடுத்துவைக்கும் நிழற்படங்களை ஏதோ ஒரு நோட்டுப்புத்தகத்திற்குள்ளோ , ஏதோ சில பைகளுக்குள்ளோ, அங்கெங்கேயோ வைத்த இடம் மறந்திருப்போம், நீண்டகாலம் கழித்து வீட்டை, பரண்களை சுத்தம் செய்யும் போது அவை நம் கையில் கிடைக்கும்போது , பழஞ்சம் போட்டோக்கள் நிறம் அற்பம் தோய்ந்த நிலையில் காட்சிப்படும்போது, நாம் நம்மை, நம்மைச்சுற்றி இருந்தவர்களை அங்கே காணும்போது அந்த உறவுகள் நட்புகள் காதல் என எல்லாம் நம்மில் அருகிருக்காது, அந்த உறவுகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமாய் சொல்லும், அந்நொடி புத்துயிர்ப்பெரும் நம் உணர்வுகள் , இவற்றையெல்லாம் இன்றைய டெக்னாலஜியால் தரவே தரமுடியாது <3
வைத்த இடத்தை மறந்துவிட்டு பின்னொருநாளில் அந்த பொருள் கையில் கிடைக்கிறப்போ அந்த பொருளை அத்தனை நாள் நமக்கறியாமலேயே நாம் இழந்திருப்போம் என்பதுதான் உண்மை <3

Saturday, 4 March 2017

பிராயச்சித்தம்

இதற்கு முன்னால்
யாரை எங்கிலும் வெறுத்திருந்தால்
அதற்குப் ப்ராயச்சித்தமாய்
இனி யாரையும் வெறுக்காதிருக்க
சிரமித்துக்கொள்
சிறிய தாளப் பிழைகளால்
பெரிய விலை கொடுக்க நேரிடும் முன்
"பூக்காரன் கவிதைகள்"