Monday, 30 January 2017

அவன் - சிறுகதை

அவன் - சிறுகதை ================ எல்லோரும்போல நா ஒண்ணும் அவ்ளோ அழகா இல்லை,, ஸ்காலர்ஷிப் ல ஒரு பெரிய காலேஜ் ல எனக்கு இடம் கிடைச்சது ... நான் நல்லா படிக்கணும் இது என்னுடைய ஆசை ,, நான் நல்லா வரணும் இது எங்கம்மா உடைய ஆசை,,, முதல் நாள் க்லாஸ்லயே 49 பேரு வந்திருந்தோம் க்ளாஸ் ல ஐம்பது பேருன்னு சொன்னாங்க,, கடந்த ரெண்டு வாரமா இல்லாத புயல் பெங்களூர் கடந்திருக்கிறதாக ரேடியோல சொன்னாங்க ... அவ அன்னைக்குத்தான் அவளோட முகமல் மென்பட்டுக்குரலாலே "மே ஐ கமின் சார்" அப்படின்னு ரொம்ப தாமதமா உள்ளே வந்தா ,, மணி அப்போ பகல் பதினொண்ணு ... பெங்களூர் கடந்த புயல் ஊரைத் தாக்கிச்சோ இல்லையோ இந்த புயல் என்னை சாச்சிடுச்சு,, இது என் முதலாம் கட்ட புயலின் தாக்கம்,,, வாத்தியார் உட்பட எல்லோரும் என்னை என் தோற்றத்தைக் கேவலமாத்தான் சித்தரிப்பாங்க ,, அதெல்லாம் கூட வலிக்கலை அதில் அவளும் அப்படித்தான் பார்த்தா,,, எவ்ளவோ அவமானங்களுக்கு மத்தியில் ,, சோறு மூஞ்சியில விட்டெறிய சாப்பிட்டிருப்பேன் ,, படிக்க புஸ்தகம் இல்லாமே தெளிவில்லாத கார்பன் அச்சு எடுத்து படிச்சிருப்பேன் ,,, என் பிறவியை நினைச்சு ஒருநாள் கூட நான் வருந்தியது இல்லை,,, வீட்டில கரண்ட் இருக்காது,, அம்மாவோட வெற்றுவயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கும் நான் ,,, கேட்பேன்,, அம்மா நான் ரொம்ப அசிங்கமா இருக்கேனாம்மா,, யார் சொன்னா என் பிள்ளைக்கென்ன குறை ,, ராசாமாதிரி வருவ ,, என்று எப்போதும் சொல்லும் ஒதெல்லோ டெஸ்டிமோனா கதை சொல்லுவாள் ,,, நான் பொறந்தப்போவே என்னைக் கொன்னிருக்கலாம் தானே ம்மா ,, இப்படி ஒரு முகத்தோடு ஒரு பிள்ளை இல்லைன்னே நினைச்சிருக்கலாமேம்மா ,, என்னும்போது ,, அவளுக்கு பசியின் வலி ஒன்றும் தெரியவில்லை ,,, நேர்க்கோட்டில் நெஞ்சுப்பிளப்பதைப்போல் அழுதாள் ,,, இருக்கும் எல்லோருக்கும் பசி ஒரு பொழுதுபோக்காகியிருந்தது எதுவும் இல்லாத எனக்கு என் பசி,, என் அம்மாவின் பசி பெரும்வலி ,, மோட்சம் தேடி அலையும் பெரும்வலி ,, பெரும்பாலும் திக்கற்றவர்கள் வயிற்றுவலியால் தூக்கில் தொங்கி இறந்தார்கள் என்று செய்திவர கேட்டிருப்பீர்கள் ,,, ஆனால் அது வயிற்று வலி அல்ல,, பசியின் வலி,, இல்லை, நாங்கள் சாகமாட்டோம், என் வருங்காலத்தினுடைய ஆயுள் நீடிப்பு எல்லோருக்குமான இந்த பசியினோடிருக்கும் போராக இருக்கட்டும் ... நானும் என் அம்மாவும் அற்பம் கைகளால் வயிற்றை இறுகிப் பொத்திக்கொண்டாவது உயிர்வாழவேண்டும் ,, அவள் கண்ட என் கனவுகளுக்காய் ....... இத்தனை வலியும் வலியில்லைதான் ஆனால் கல்லூரியில் அவள் என்னை அருவருப்பாய் பார்த்த அந்த முதல் நொடி ,,, கனத்திருக்கிறேன் அவளைக்கடக்கும்போதெல்லாம் இதய எஞ்சின் வேகமாக படபடக்கும் ,, நடுக்கம் வரும் ,, வியர்க்கும்,, தாழ்வு மனப்பான்மை கொடி பிடிக்கும் இதயத்திற்குள் இருந்துவிட்டு இரும்பால் குத்தினாள் ,, சுவரெங்கும் அவள் சிரிப்புச்சத்தமே .... அன்றைய இரவு, கொதிசோற்றின் சூடு என் நெஞ்சு புண்ணிற்கு இதமிருந்ததில்லை ,,, எப்போதும்போல் காலையில் எழுந்து காலேஜுக்கு போயிட்டேன் ,,, எல்லோரையும் கேள்வி கேட்கும் வாத்தியார்கள் என் மூலையை திரும்பி பார்த்ததுக்கூட இல்லை .. பதிவெடுப்பதைத் தவிர என் ரோல் நம்பரை அடுத்து அவர்கள் உரக்க அழைத்தது என் பரீட்சைக்கான ஹால்டிக்கட் தரும்போதுதான் ... நீயெல்லாம் என்ன படிச்சி எழுதி கருமத்தை கிழிக்கப்போறியோ என்ற மென்னும் வார்த்தைகளுடன் சபிக்கப்பட்டே பெற்றிருந்தேன்" ,, பரீட்சை முடிந்தது முடிவு வரும் முன்னாலும் ,, லீவிற்கு ஊருக்கு செல்லும் முன்னாலும் ,,, கெட் டூ கெதர் பார்டீ வைத்திருந்தார்கள் .... எனக்கிருந்த காஸ்ட்லீ சட்டையின் மேல் தோள் கிழிந்திருக்கிறது .. சொந்தம் தையல் ஒட்டு போட்டுத்தான் அணிந்திருக்கிறேன் ,,, உறவினர்கள் வேண்டாம் என்று கொடுத்த ஆடையில் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகியிருக்கும் கருப்புநிற டபுள் லூப் இருக்கும் பலூன் பேகி பேண்ட் போட்டிருந்தேன் .... உருகிய தோலின் வழியே என் நெஞ்செலும்புகளும் கழுத்தெலும்புகளும் எல்லோருக்குமான அன்றைய காட்சிப்பொருளாகின மேலும் உடலும் உயிரும் உருக உருக அவளும் என்னை ப்பார்த்து எள்ளலித்துக் கொண்டிருந்தாள் ,,, மரணப்படும் முன்னொருசில மணித் துளிகளுக்கு முன்னால் ஒருவன் எந்த அளவிற்கு வலிகளை அனுபவித்திருப்பானோ ,,, அதைவிடக் கொடூரம் இப்படி வாழ்வது இவர்கள் முன்னால் நடமாடுவது ,,, நடமாடிக்கொண்டிருக்கிறேன் ,, சபையில் அதிகப்பட்ச கேளிக்கைகளில் நிறைந்திருக்கிறேன் ,,, எ்னைக்குறித்த என் வருங்கால லட்சியங்களுக்கிடையில் கனவுகளுக்கிடையில் அவள் யாரோவால் என் உயிரோடு இணைத்து மெல்ல மெல்லப் பறித்துத் தொடுக்கும் மலரானாள் ,, என் கனவுகளில் தூரிகை உதிர்த்தவள் ... இன்று அதே கனவுகளில், காட்சிகளில் நின்று அகலே அகலே தூரமானாள் .. அழகான ஆடவர்கள் என் முகமருகி மூக்கு நுனியருகி பலமாக சப்தமிட்டுச் சிரித்தார்கள் ,, அவர்களுடைய கைச் சிறைக்குள்ளிருந்துவிட்டு அரிய வாசனைகளுடன் அவளும் சிரிக்கிறாள் ... அந்த எதிரொலிகள் ஒரு மணற் பரப்பில் .. மணற்சுழற்சியினூடே என்னை துரத்துகின்றன ... இதன்படியால் உறங்கிக்கூட நாளாகிவிட்டது ..அப்போதெல்லாம் கூட அதைத்தாண்டி வாசிப்பது எனக்கு வைராக்கியம் ஆகியது ... முதல் செமஸ்டர் பரீட்சை முடிவு நோட்டீஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள் ......... லிஸ்டில் முதல் மாணவனாக ... எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் என் கண்ணீர்க்கொண்டு விழுங்கியிருந்தேன் ,,, இது என் இரண்டாம் புயலின் தாக்கம் ,,,, முதல் முறை அன்றைய முதல் க்ளாஸ் பீரியடில் ,,,, லேவண்டர் நிறை வாசங்களுமாய் ,,,, என் வாழ்வில் முதன்முதலில் பூக்கவிருக்கும் முதல் வசந்தமுமாய்...... அன்றைய கிழக்கினுடைய உதயமுமாய் ,, மூச்சில் புதிய வாசனையோடு .... அருகி......... அவள் உள்ளங்கைகள் என் மேங்கைகள் அமிழ்த்த ஒரு ஹாய் சொல்ல அடுத்தமர்ந்தாள் ........வலி காணும் அவள் கண்களால் என் எதிர்காலம் திறந்துகொண்டிருக்கிறாள்..........வலி நெஞ்சாங்குலையின் இருட்கட்டில் தலைக்கீழாக தொங்கிக்கொண்டிருந்த வவ்வால்கள் எல்லாம் என் இதயத்தின் இடவல வென்ட்ரிக்கிள் வாதாயனங்கள் ஊடே வெளிப்போயின ...வலி காயப்பட்ட சதை தளத்தில் உள்ளே ஓர் அடர்மழை ஒரு புல்வெளி வேர்விடுகிறது... வலி ............. உயர்ந்த வன்மரங்களுடைய காடொன்று உயிர்வரை வேர்விடுகிறது ........வலி ............. ரமணி சந்திரன் காதல் கதையில் வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர் கதாபாத்திரம் ஆகிறார் .......... கவிதை வேர்விடுகிறது .......வலி ....... ஆனால் இந்த வலி .............. முற்றிலும் அன்றைய, அப்போதைய என் பிறப்பு முதலான எல்லா வலிகளிலிருந்தும் முற்றிலுமான வேறுபட்ட......... வலி பூக்காரன் கவிதைகள்

Sunday, 29 January 2017

புரியாத சமிக்கைகள் அரங்கேறுதே...
===================================

உரைக்காத பொய்ப்பெயரை உரைத்துவிட்டேனே
அவளிடம்
நானும் பெயர்வைத்திருக்கின்றேன்
யாருக்கும் ஏன்
அவளுக்கே தெரியாமல்
நான்மட்டும் அழைக்க ம்ம்ம்
கேட்டாலும் சொல்லிவிடமாட்டேன் என்ற
சிரித்தபிடிவாதம்
எனக்குள்ளும்  இருக்கிறதே...
அதுதானோ என்று ஏமாந்துதேடட்டும்

இதோ சோழியை உருட்டிவிட்டு சென்றுவிட்டேன்
அகண்ட என் மார்புக்காடுக்குள்
அரள்கின்ற
அவள் கருமணிகளிரண்டும் சுழலட்டுமே...
கனவிலாவது தெரியட்டுமே..
உடல்மூடிய உயிராதாரமொன்றின்
அசரீரித் தெறிக்க
அந்த துஷ்யந்தவனத்தின் சகுந்தலையானவள்
அவள்தான் என்பதை

அழகான பூக்கள் பூக்கும் அக்கரையொன்றில்
புதர்கள் குடைக்குடையாய் மண்ட
தடமற்ற அலமர லிருட்டில்
அகவைதிருடிடும்
திரு(டி)விளையாடல் ஒன்று அரங்கேறுதே
அமலை இடரானதோ
அண்மையில் புகலானதோ
சமிங்ஞை அறியாமல் இளமை திசைபுரள்கிறதே

தைவரல் ஊடுருவிய கூந்தலுடுத்த
துணையற்றுப்போகட்டுமே
அத்தளுவமும்
ஆணியம் என்று சபிக்காமலிருந்தால்
கொஞ்சம் துவட்டிவிடுகிறேனே....
என் உட்டணப்பறிதலினால்
சூடா ஊடல்தீர்கையை
தேடா இடத்தில் இருந்து அள்ளி
இவன் இல்லாமல்
இவன்செய்த இவ்வினையை
செய்வினை என்பாளா....தெரியவில்லை

இதோ சோழியை உருட்டிவிட்டு சென்றுவிட்டேன்
அகண்ட என் மார்புக்காடுக்குள்
அரள்கின்ற
அவள் கருமணிகளிரண்டும் சுழலட்டுமே...
கனவிலாவது தெரியட்டுமே..

"பூக்காரன் கவிதைகள்"

Saturday, 28 January 2017

ஆயிடையில், அவளும் நானும், அழகாகியே இருந்தோம்

ஆயிடையில், அவளும் நானும், அழகாகியே இருந்தோம் ========================================================== அவள் கூந்தல் வரைந்தேன் காற்று அலைக்கழித்தது ஒரு சிறிய தாளில் மேகம் வரைந்தேன் விண்ணில் எறிந்து ஓடினேன் எத்தனையோ மேகக்கூட்டங்கள் என் பின்னாலோடின உறவுக்காரன் சல்லியத்தில் ஆசையோடு வளர்த்த தத்தையும் நானும் திண்ணையிலாயிருந்தோம் ஆற்றில் குளித்துவிட்டு தலைத்துவட்ட பிரியப்படாத நான் இரவு நட்சத்திரங்களுடைய பெரும் ரசிகன் தலைமை ஆசிரியரிடம் வெள்ளையடித்த பள்ளிக்கூட சுவர்களில் வர்ணம் பூசியதாக வழக்கில் பட்டிருந்தேன் உள்ளங்கைகளில் தேய்த்த பிரம்பால் பதம்பார்த்திருந்தார்கள் ஆறாத ஐந்தாறு குரு முதல் பரிசானது காலம் தடசமாகவில்லை இப்போதெல்லாம் அந்த ஆற்றங்கரையில் ஈர்த்த கூந்தல்காரியின் புழக்கமில்லை எப்போதாவது என் இருப்பின்போதோ இன்மையின்போதோ தத்தைகளோடு விளையாடிச்செல்வாள் ஒருநாள் அப்படித்தான் அன்று அவள் வருகையிருந்தது பூக்கள் எல்லாம் ஆராதித்தன கிழக்கிலிருந்து உருவான வெப்பக்காற்று தூரே இருந்து அருகே வர வர மெல்லக்குளிர்ந்து பனிப்பொழியத் தொடங்கியது கிளைமேய்ந்த நிறக்குருவிகள் அவற்றின் சின்னஞ்சிறு சிறகுகள் படபடத்து கூடடைய ஆயத்தமாயின நீர்த்த சாலை உதிரிமரங்களுக்கு நடுவில் திரைக்கட்டியது தத்தைக்கூடு வழியே அக்காட்சிகளில் லயித்திருந்தேன் வழியெங்கும் அடர்ந்த பனிமூட்டங்களை கிழித்து மென் காற்றின் ஊடே ஒரு வெளுத்த துப்பாட்டாவின் சரிகைகள் மின்ன ஆயிரம் நிலவுகள்போல் பின்னிருந்து அவள் பனிக்குமிழிகளைத் தப்பி தப்பி சொர்க்கத்திலிருந்து வழித்தப்பி இறங்கிய அப்சரஸ்போல் அவள் நெருங்கிக்கொண்டிருந்தாள் பூமியில், புற்கள் நிறைந்த மலைவெட்டுகளில் மேய்ப்பாரில்லாத கட்டவிழ்த்துவிட்ட ஆடுபோல் மனம் பிறவி மறந்த நிர்வாணமாகி துள்ளிக்கொண்டிருந்தேன் அவள் கண்களின் ஒளிக்கொண்டு காடு பூத்தன குழி மாடங்களில் புதர் முளைத்தன தத்தையின் ஓரோரு பச்சை இறகுகள் பிடிவிட்டவண்ணம் பறத்தலாகின இருள் பரவி வானம் மூடிக்கொண்டிருந்தது அன்றைய நட்சத்திரங்களுக்கு வஞ்சனை அதிகந்தான் என்பேன் ஒன்றொன்றாய் உறக்கம்விழித்து எல்லாமெழுந்து கண்கள் சிமிட்டி சிமிட்டி அவள் அதற்குள் தொகைந்து கொண்டிருந்தாள் பாதை நீண்டுக்கொண்டே இருந்தது சூரியன் பிறக்க நேரம் பாக்கியில்லை ஆர்ப்பரித்த நிலாக்கள் ஆயிரம் நூறாகி நூறு ஒன்றாகி தூரே தூரே அகன்று அதோ ஒளிர்ந்த புள்ளிபோல் நட்சத்திரமாகிவிட்டாள் இன்றும் காலங்களின் வேகத்திற்கு தடசமில்லைதான் பள்ளிகாலத்தின் காலாவதி விளிம்பில் நான் நின்றுக்கொண்டிருந்தேன் இவ்வழியை என்றாவது அவள் திரும்பிப் பார்க்கக்கூடும் பாதி இறகுகளோடிருக்கும் தத்தையை விட்டுப்போகிறேன் ஓர்மைகளின் கூட்டத்தொடரிலிருந்து அவள் தவறிவிட்ட குட்டிக்காலங்களை அப்போது அவள் ப்ரதீக்ஷிக்கக்கூடும் விட்டுப்போனவன் இனி என்றாவது தேடி வருவானா எனறு தெரியவில்லை நினைவு வரும்போதெல்லாம் இப்போதுபோல் யாருமில்லாத இடம் பெயர்ந்துவிட்டு நெஞ்சறையும் மௌனத்தால் உருகி அவளை அமிழ்த்திக்கொள்வேன்போல் "பூக்காரன் கவிதைகள்"

கெளரவங் காத்தவள்

கெளரவங் காத்தவள்
======================

தோடறுத்துச் சென்று
புறத்தோல் தின்றவன் கணவனெனினும்
காதறுந்த நிலையிருந்தனளாயினும்

கஞ்சிக்கென சுமந்த சட்டியின்
குறைவிலா கனம்
சிரம் துளைத்தெறிந்திடினும்

குடும்பக் குலப் பாவையென
மற்றோர் செல்வந்தன் மகள்
பிறன் மனையென ஆனவள்

புனல்வழிந்த கண்களில்
எய்தினாள் இரவுக்கவிப் புலம்பல்

ஆதாளி காசினியில்
அன்பிற்கேங்கிடும்
அடிமையிவள் ஒரு கதியிலியாய்

உமியாய் சதை பிரிய
ஊடகமில்லா மசக்கைச் சொன்னது
அவள் கருவுற்றனள் என

தெந்தனம் தழுவியும்
திரைச்சீலை மார்பு விலகாது
நத்தையென தானே சுமந்தனள்
தன்கூட்டை சென்றவிடவெல்லாம்

நாளையகனவிலே
பனி கிரணங்கள் உடைய
சந்திரன் பிறப்பானென
சுமையினைத் தழுவியே பெயரிட்டாள்

நிசிசரன் மடுவில் சிறையிடப்பட்டும்
இருதிறல் மனத்தால் நடத்தை சாகாது

மதலையின் குதலையே
பிறவி இலட்சியமெனத்தாங்கி
சகடத்தில் சிக்கி சங்கடத்தில் மாண்ட

எரியுமி ழுரகும் கயவப் பெருமகன்
கரம்விட்டக்கண்ணாளனவன்
குலம்குடி செழித்திடக் காத்தவ ளின்று

கெளரவங் கொண்டாள் இவள்
தான் பத்தினியெனச் சொல்லி

பூக்காரன் கவிதைகள்

Thursday, 26 January 2017

சலனம் ஏன், சிறகு விரிக்க (உரைநடை)

சலனம் ஏன், சிறகு விரிக்க (உரைநடை)
==================================

இனி இந்த சந்திப்பு தீர்ந்து போகாது,
மரச்சட்டங்களில் அறைந்த திரையில்
உன்னை பதிகிறேன்,
என்னையும் பதிகிறேன்,
எனக்கு ஒரு உயிர் வரைகிறேன்,
உனக்கும் ஒரு உயிர் வரைகிறேன்.
இடையே சதையாலான ஒரு  கயிறு வரைகிறேன்.
அது நம்மை சேர்க்கட்டும்.
எனக்கும் உனக்கும் உள்ள பந்தம் இக்கயிறு.
இதனூடே பேசிக்கொள்வோம்.
சிரிப்போம். அழுவோம் வா மித்ரா

மித்ரா ஒருமுறை சொன்னாள்

அவள் மட்டுமே விசித்திரமானவள் என்று,
ஆனால்

அவளைப்போல் விசித்தமானவர்கள்
எங்கோ காணாமல்
உலகத்தின்
மூலைமுடுக்குகளில் வசிக்கலாம்,
இதோ இப்போது
என்னைப்போலவே  இயல்பில் நின்று
மீறிய குறைகளுடன் நீ.
பால்கனியில் இருந்தபடி இரவுகளில்
என்னைப்போலவே நீயும்
என்னைப்பற்றி நினைத்திருப்பாய்.
நான்  வரைந்த  ஓவியங்கள்
சொல்லியிருக்குந்தானே
அந்த அன்பிற்குரியவன் நீதான் என்று.
நீயும்  என்னைப்போலவே
விசித்திரம் நிறைந்தவன் தான் போ

கனவில்
நீ எங்கோ காணாமல் போய்விட்டாய்.
நான், நாம்
இருவரும் சேர்ந்திருக்கும்
ஆல்பம் காண்பித்து
எல்லோரிடமும் விசாரிக்கிறேன்.
ஆம் அந்த இரவு விடிந்துவிட்டது.
காப்பியின் சுவையில்
உன் துழாவல் இருந்தது.
படுக்கைக்கு முன்னால்தான்
நீ ஆதர்ஷமாய் சிரித்தபடி
சுவற்றில் தொங்கி கொண்டிருந்தாய்.
அருகில் நான்
உன் கேசம் கோதி நின்றிருந்தேன்.
உனக்கு எத்தனை அழகான சுருள் கேசம்,
கள்ளமாய் விசாரித்தேன்,
நீ மித்ராவைவிட்டு  போய்விடுவாயா
உன்னால் முடியுமா என்று

அன்பு மித்ரா,

அன்று நாம் நண்பர்காகியிருந்தோம்,
நம் தொடுதலுக்குள்
கூச்சம் இருந்ததில்லை,
பின்பொருநாள்,
உன் வெள்ளைத்தாட்களை நிறமாக்கிய
கருத்த திருடன் நான் என்பாய்,
நானேதான் போ
உனக்குப்பிடித்த சிகரெட்டுமாய்
உன் முற்றத்து சாய்க்கதிரையில்
நினைவுகளுமாய் இருக்கிறேன்,
போ, அவைகளின் மடியேறி இருந்துகொள்.
இரவிற்கு இன்னும்
அற்ப நேரந்தான் இருக்கிறது.
இனி இந்த இரவிற்கு  உன்னைவிட துணை
அந்த நினைவுகளுக்கு
வேறெதுவும் இதமாக இருக்கப்போவதில்லை.
அவைகளை ஒருநேரம்
ரோமாஞ்சனம் என்று அழைத்துக்கொள்,
சிலநேரங்கள் சிலநாட்கள்
சலிப்புத் தோன்றும் என்றால்
நித்ய வசந்தம் என்று அழைத்துக்கொள்.

என் கண்களை நேரிடும் சக்தியில்லாதவளுக்கு,
அவைகளோடு பேச
ஆயிரம் கதைகள் இருக்கும். பேசிக்கொள்  ...
அவைகளுக்கு  உன் கைகளை,
அவைகளின் கைகளுக்குள்
இறுகப்பொத்திக்கொள்ள வேண்டுமாய் இருக்கும்
அனுமதித்துக்கொள்.
மடிந்துகொண்டிருக்கும் இரவு
விடியும்வரை உன் தோள் வழங்கு
அவைகள் சாய்ந்துகொள்ளட்டும்
மினுக்களுடன் வெள்ளியோடை களியாடி
வென்று தோற்கும்வரை
அவைகளோடு பேசிக்கொண்டிரு.
கண்மூடி அவைகளை கவிதைகள் சொல்லவிடு.
நெஞ்சின் ஆழம்வரை இருத்தி
அவைகளை சொல்லவிடு.

இந்த இரவில் மித்ரா,
நீ என் நினைவுகளோடு பேசுவதைக்
கேட்டுக்கொண்டிருக்கும் சுவர்களுக்கு
காது முளைக்கலாம்.
பயப்படாதே
அந்த சுவர்களில்,
உன்னை வியாபித்திருக்கும்
எல்லா சூழல்களில், என்னை  எழுதிவிட்டேன்,
உன்னிலும் என்னை எழுதிவிட்டேன்,
உன் கண்கொண்டு காணும் அகலம்வரை
என்னை நிறைத்துவிட்டேன்.

ஆம்  நாளை
நீ  என் கண்களை நேரிட்டுப்பேசக்கூடும்,
அவைகளை நேரிடும் நான் தான்,
வெட்கப்படும் முதல் ஆணாக
உலகத்தில் இருக்கப்போகிறேன்போல்,

என்றாவது உன் மிருதி
உன்னினின்று பிரிகையில்,
நீ என்னைத் தொலைத்துவிடலாம்

நீ அழுதால் உன் கண்களைத்துடைப்பதற்கு,
உன் தனிமையின்போது
சாய்ந்துகொள்ள தோள் வழங்குவதற்கு,
நீ சிரித்தால்
கூடசேர்ந்து சிரிப்பதற்கு,
நீ மறந்த நினைவுகளுமாய்,
உன் செவிகளுக்கு
கேட்காத முனங்கல்களுமாய்,
அழுகையும் சிரிப்புமாய்  திரிகிறேன்

மித்ரா ,,,

யாரேனும் என் பெயரை உனக்கு நினைவுப்படுத்தலாம்
உன் அலமாரியிலிருக்கும்
பிரதியழிந்த புகைப்படங்களை எடுத்து
இவரைத் தெரியுமா என்று அந்த யாரோ கேட்கலாம்
நிறைந்த காலங்களுக்குப்பின்னால்
என் டைரியை நானோ இல்லை
எனக்குப்பின்னால்
எடுத்து வாசிக்கும் இரண்டாம் நபர்  யாரோ
நமைக்குறித்த நிகழ்வுகளை
கதைக்களம் செய்யலாம்
அப்போது
என் பெயர் உன் செவிகளில் ஒலிக்கக்கூடும்
சலனப்படாதே
உன் விழிகள்  நம் வாழ்க்கையை
மீண்டும் வாசிக்கக்கூடும்
சலனப்படாதே
உன் நெஞ்சாழத்தின் ஒரு மூலையில்
சமாதியாகிவிட்ட நானும், என் நினைவுகளும்
அதுவரையான
தனிமையின் சப்தங்களுடன்
கல்லறை உடைத்த நிராசைகளாய்
ஒரு காரிருளில்
வெளுத்த உடையணிந்த
என் காட்சிகள்
நீ வாழும் காலங்களோடு  பயணிக்கக்கூடும்
சலனப்படாதே
நம் பாத அச்சுகளுள்ள
என்  ஓவியத்திரைகளைத்தேடி
உன் மீள் மிருதிகள்
நீ வாழும் காலங்களோடு  பயணிக்கக்கூடும்
சலனப்படாதே
நீ வாசிக்கும் நம் வாழ்க்கை சுமந்த நாவலை
உன் கண்ணீர்  நனைக்கக்கூடும்
சலனப்படாதே


"பூக்காரன் கவிதைகள்"

ஹார்மோன் தியரி

ஹார்மோன் தியரி
=================
நாள் : 31-Jan-16, 11:19 am

என் செவிகள்
ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகளால்
நிரப்பப்பட்டிருக்கலாம்
உன் கூரிய மௌனத்தை
உட்கொள்ளுமுன்னே
அவை தின்று செறித்துவிடுகின்றன

என் பிரிய தண்டனைகளிலிருந்து
தப்பி ஓடுகிற
ரோசலின்ட் கதாபாத்திரமாகிறதுபோல்
உன் அலைப்பேசியின் குறுஞ் செயதி
இதோ மின்கல வீரியத்தை
அழித்துக் கொண்டிருக்கிறது

நல்ல மேயப்பர்களோ ஆர்டன் வனமோ
இங்கு எங்கும் தேவதை சிரிப்பின்
நடமாட்டம் இருப்பதாக  சொல்லவில்லையே

என் இதயத்தில் முளைவிட்ட
காதல் தாவரத்தின்
கடைநிலை ப்ரோட்டான்களுக்கு
இனியும் அவதாரம் தரிக்கும்
சக்தியில்லை என்பதை
காதல் தவிர்த்து பச்சைவாசம் கண்டப்புழு
அரித்து சொல்லிக் கொண்டிருக்கிறது

ஆதவன் உன்னிடம்
வானின் நீல சுவடுகளை
மேகம் புணர்வதாக சொன்னக்கதையில்
சிறு மாற்றம் கொணர்த்தினேன்
தலை சாய்ந்த தாமரை
தண்டுமுறிந்து
தற்கொலை செய்துக்கொள்வாள்
வேண்டாம் விடு என்றாய்

மாசின்ராமின் கனத்த மழைவாசத்தின்
கிளர்ச்சிகளைக் கொடுத்துவிட்டு
என்னை மேடை ஏறாத
நளிஞன் செய்வதில்
உனக்கு இலாபமிருக்கலாம்

உள்ளங்கைகளை
இறுக்கிக் கூப்பிக் கொண்டு
அதன் இருட்டிற்குள்
பித்தோவன் சிம்பொனியின்
கின்னாரப் பெட்டி வாசிப்புகளுக்கு
நடனமாடிக் கொண்டிருக்கும் சிண்ட்ரெல்லாவே
உன் பசுமை பிரபஞ்சத்தின்
பயோஸ்கோப் காண்கிறேன்
உனக்கான விடுதலை இன்றல்ல நாளை
என்று சொல்லிச் சொல்லியே

நேற்று பின்னிரவின்  நரவாசத்திற்கு அப்பால்
என்மேல் இழையோடிய
உன் உவர்நீரின் ஈரம் உறிஞ்சும்
ஜன்னலோர வெய்யில்
இதமாகத்தான் இருக்கிறது

சொற்றவறின் (சொல்+தவறு)பாடின்மையால்
என்னோடு பேசும்
யாருடைய  வார்த்தைகளிலிருந்தும்
உன்னுடைய  முனங்கல்களை
என் ஹார்மோன்கள்
நினைவுப் படுத்துவதாக இல்லை விடு ம்ம்ம்

 "பூக்காரன் கவிதைகள்"

நட்சத்திரத் தூவல் (டைரி 2004)

நட்சத்திரத் தூவல் (டைரி 2004)
================================

சருகுகள் விழுந்தும்
சலனமின்றியிருக்கின்றது
ஆற்றின் விளிம்பு

குழப்பங்களோடு
துலக்கிக்கொண்டிருக்கின்றன
வனாந்திர பட்சிகள்
நீரில் தமது நிழலாடல்களை

ஆழ்ந்த பிரார்த்தனைக்குப்பின்னால்
எத்தனை முயன்றும்
அழிக்கமுடியாமல் தோற்றுபோகின்றன
பெரும்பெயல்கள்
வனதேவதைகளில் பூசிய
விபூதிகுங்குமக் கறைகளை

சுவர்களில் ஈரம் மேலேற மேலேற
பல்லிகள் சத்தமிடுகின்றன
புரியவாப்போகிறது ,,புயலுக்கு சகுனங்கள்

வருகையின் நீட்சியால்
சேவேரிய மனவழுக்குகளை
திறந்துவிடுகின்ற நிச்சலனங்களுக்குள்ளே
நெற்றிப்பாறையிலிருந்து
எம்பியெம்பிக்குதிக்கின்ற
கத்துகுட்டியாகின்றன ஆசைகள்
விவரமறிந்த  சூட்சமங்களும்
தனிமையின் சஞ்சாரத்தில்
கிணற்றுநீர்த்தவளையாய்
மொண்டுறுஞ்சப்படுகின்றன அங்கே

கழுவித்தீர்க்கின்றது
நட்சத்திரங்களையும் நிலாவையும்
அன்றையமழை நிரம்பிய
தொட்டாங்குச்சி இராத்திரி

ஆர்ந்த பனிமூட்டங்களின் இலயத்தில்
கலங்கித்ததும்பும் கொந்தவெளி
கீழ்வானமொன்றின்
விரிந்த வயல்களுக்கிடையில்
கருத்தமனிதர்கள் விரைந்துமறைகின்றனர்

தூரக்கிடையிலிருந்து மெலிதாய் வருடும்
பிதற்றல்சுமந்த
வெண்ணிற தென்றல்
எப்போதோ கை விட்டுப்போன
நியாபகங்களைப் பிரதிபலிக்கின்றனமாதிரி
லிகிதம் நழுவுகின்ற உதட்டில்
இளங்குயிலொன்றின்
சாகித்யத்தில்
வெள்ளியோடையின் காலமசிகள்
எதையோ திரையவிழ்த்துக்கொண்டிருந்தன


பூக்காரன் கவிதைகள்

Wednesday, 25 January 2017

ஆப்தமித்ரா




ஆப்தமித்ரா --------------------- முத்தம் என்றாலே அகம் பிறக்கிறாள் மித்ராதான் ஒரு பெண்ணின் இடையில் கோடுவிழுதலின் அளவில் கூட அர்த்தங்கள் மாறும் என்பதை என் ஓவியம் சொல்லிவிடும். படித்தே அறியாதவளிடம் வாத்சாயனா பேசுகிறேன் உலக அறிவு பேசுகிறேன் ஆங்கிலம் பேசுகிறேன் அந்த காரில் ஏறி அமர்ந்துவிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறாள் அன்றுதான் என் முகம் பார்க்கிறாள் இதற்குமேலும் ஒருவரையும் சந்திக்கவிடாத அவளது பார்வையால் உன் எல்லாத் தோழிகளையும் சந்திக்கப்போகிறாயா என்று ஞாயமே இல்லாமல் கேட்கிறாள் ஆண் தீண்டா மலரவள், அடடே என்று தழுவிய விரல்களினால் அனிச்சைகள் நிகழ்த்தும் புதிரவள் ஒரு பனித்த ரோஜாவை முத்தமிட்டுவிட்டு அவளைப் பார்க்கிறேன் கண்கள் கிறங்கி கன்னம் சிவக்கிறாள் அட பூக்களின் திருடா நீ இதழ் பதிந்தது என்னவோ அந்த இதழ்களில் தான் உன் பார்வை தின்றது மட்டும் என் கன்னங்களைத் தானே டா சுவாரஸ்யங் களுக்கிடையில் சிறிதாய் சிரித்திடும் போது அவள் பற்கள் தொடுக்கும் பூமாலைகளுக்குள் தொலைகிறேன் யாரையும் நேசிப்பதாக சொல்லிவிட்டு திரும்பிப்பார்த்த போது காணாமல் போகின்றவளின் காதல் மேல் ஒருவருக்கும் அடுப்பமில்லைதான் நேற்றொரு தோழியிடம் சொல்லியிருந்தேன் சண்டையிட்டுப் பிரியலாமா என்று சொல்லி பிரிந்துபோகும் அதேதருணம் அலைப்பேசியிடம் கோபம் கொள்கிறேன் அழைக்கமாட்டாளா என்று உடனே அழைத்து உன் கைப்பேசியின் மேல் கோபமா,, ம்ம் அதை உடைத்துவிடாதே அது இருக்கும் தைரியத்தில்தான் உன்னை போகசம்மதிக்கிறேன் என்றவளின் காது பிசுகி இதைச் சொல்லத்தான் அழைத்தாயா என்று காதல் பண்ணவேண்டும்போல் ஆசைதான் என் ஞாயங்களை சமர்ப்பிக்க விடாமல் என் வாய்மூடிக் கொள்கிறாள் செவி ஓரம் அருகி மூச்சுத் தளர்த்திவிட்டு இந்த இதழ்கள் இன்னும் உந்தன் எத்தனை முத்தங்களுக்காய் காத்திருக்கின்றன தெரியுமா உன் முத்தங்கள் கொடுத்து என்னை கடன் காரி யாக்கு என்பாள் அகப்பிறையில் நீந்தி சன்னமாய் காதல் கோடு கிழிக்கிறேன் கடுமையான கத்தல்களுக்கிடையில் சமைக்கலாமா ம்ம் சமைத்தாயிற்றே சரி ,, வெட்டியதன் மிச்சம் ??? இதோ என்று இருகைகளை இணைய விரிக்கும்போது அடுத்தென்ன சப்திக்கலாம் அந்தபோதும் ஆண்மைப் போர்த்திக் கொள்வது அவள் பெண்மையைத்தானே ஓவியம் ஆகவா ஓவியம் ஆக்கவா ம்ம்ம் எத்தனைமுறை போர்த்தியும் நீ போர்த்திக்கொள்ள சலிக்காதவன் டா என்னும்போது எழுதிக்கொள்கிறேன் என் நாட்குறிப்பில் எழுதித் தீராத என் டைரியின் அத்யாயம் “அவள் “ "ஆப்தமித்ரா" “பூக்காரன் கவிதைகள்”

Monday, 23 January 2017

நலமோ எனநான் கேட்பேன், யாரோ என நீ கேட்பாய்

நலமோ எனநான் கேட்பேன், யாரோ என நீ கேட்பாய்
===============================================

கடைசியாக வாசித்துவிட்ட
உன் கவிதைகளுக்குப் பின்னால்
வேறெதுவும் வாசிக்கத் தோன்றவில்லை
எனப் பிதற்றுவாய்

காலியாகிவிட்ட எதிர்வீட்டு ஜன்னலில்
சிலந்திவலைக் கட்டிக்கிடப்பதை
கோலம் போட்டபடியே
அவள் கண்ணீர் கனத்து பார்த்துக் கொண்டிருந்தது
என்றுச் சொல்லி
அந்த கவிதையை முடித்துவிட்டாய்
மனமும் மாக்கோலமும்
இன்னும் அங்கேயேதான் இருக்கு
என்று திமிறுவாய்

அதிசயம்தான்
நான்  அணைக்கவேண்டுமாய்  
என்  கைகளை
உன் பக்கம் எப்படி நீட்டினாலும்
ஏதோவொரு
அழகான  விஷயம்போல
சட்டென்று அதற்குள் அடங்கிவிடுகிறாயே
கூடலுக்குப்பின்னால்
அப்போதுதான்
உதிர்ந்துவிழுந்த கோழி இறகுகளைப்போல
பூத்துவெடித்த
புதுப்பஞ்சினைப்போல
அன்று விரிந்த கொள்முதல் மலரின்
இதழ்களைப்போல ஆம்,,
இந்த சூத்திரம் எப்படி என்று எனக்கும் சொல்லித் தா ம்ம்ம்ம்  ,,,,

அலைகள் எத்தனை வந்தாலும்
என் கால்களை
நனைப்பதே இல்லைநான்
படிக்காத மூதாட்டி
அங்கே சொல்லிக் கடந்ததைப்போல
அமைதியாக
முந்திக் கொண்டுவரும் அலை
ஆணலையாமே
ஒரு குழந்தையிடம் சொல்லி
அங்கே போகவேண்டாம்
இன்னும் சிறிது நேரத்தில்
பெண்ணலை ஆக்ரோஷமாய் வந்து
ஆணலையையும்
அங்கே கால் நனைக்கும்
அனைவரையும் அள்ளிச்சென்றிடும் என்கிறாள்

ஒருநாள் அலையென வருவேன்
என்று சொல்லிவிட்டு
மறைந்துபோன
இடத்திலேயே காத்திருக்கிறேன்
உன் ஆக்ரோஷம் என்னை
அள்ளிச் சென்றிடாதா என்று
இது காவியமா என்று தெரியவில்லை
உச்சக்கட்ட ஆசையின் புலம்பலா என்றும் தெரியவில்லை
தோன்றுகிறது மீட்டுகிறேன்

கிரகங்களை சுமந்திருக்கும் பேரண்டத்தை
ஏதோ க்ஷணம்
வெள்ளியோடை தடவிப் போவதைப்போல
குளிர்ச்சித் தாளாத
மனசுக்குள்
அற்பம்  பிரிந்திருந்து
ரேகை ஓடவிடுகிறாயே
இனி அடுத்த நான்கு ராத்திரி களுக்காவது
உனக்கு மோக்ஷமில்லாத விஷமந்தான் போல

உன்னிடம்
எதையெதையோ  பேசிவிட்டு
ஏதும் செய்யாமல்
திரும்பிப் போகிறவனைப் பற்றி
இனி விடிய விடிய பேசிக்கொண்டிருப்பாய்

படுக்கப் பாய்ப்போடுவதே
பைத்தியக்காரத் தனம்
முற்றிய பின்னால்தானே

இந்த முறையாவது
நான் வாங்கிக் கொடுத்த ஆடைகளையும்
பரிசுப் பொருட்களையும்
அடுத்து  நான் வரும்வரை
உபயோகிக்காமல் அப்படியே வைத்திரு
புத்தாடையில்
உன்னைக் காணும் பொலிவு
நீ அனுப்பும் புகைப்படத்தில் இல்லையடி
இந்த வாழ்க்கை
உனக்கு  சலித்துவிடாமல் இருக்கத்தான்
வருடம் ஒருமுறை வருகிறேன்
அடிக்கடி
என் விரல்கள் எட்டாத
மேற் முதுகில்
அரித்துவிடும் வியர்க்குருகளின் மேலே
கோபப்படும் உன் நகங்களின்
""வன்முறை உணருகிறேன்"" கனவு வருது ம்ம்ம்

உனக்கு நினைவிருக்கா
நாம் சண்டையிட்ட
எத்தனையோ நாட்கள்
பத்துமுழம் மல்லிகைப்பூவோடு
உன் அறைக் கதவோரம் சாய்ந்து
மெளனமாக  நிற்பேன்
அன்றெல்லாம் கூட
உன் பார்வை முட்கள்  
உனக்கு  ரோஜாதான் பிடிக்குமென்று
என்னிடம்  சொல்லுவதாக
நினைத்துவிட்டு
அவ்விடமிருந்து விடைபெற்று   நகர்வேன்

எப்போதும் ஜன்னலில் பூத்துத் ததும்பும்
உன் காத்திருப்புகளிடம்
என் நினைவுகள் கையசைத்துப் போக
தவறியது இல்லை
பாதைகளில் தாழிட்ட
முன் பனிக்காலங்களைப்போல
கார் மஞ்சுகளைப்போல
மழைப்பிறக்கும் முன்
ஆதித்தட்டான்களின்,
புற்றீசல்களின் வரவினைப்போல

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 22 January 2017

சுவாசித்தலின் தருணம் நீ,,

சுவாசித்தலின் தருணம் நீ,,
********************************************

அள்ள அள்ள சேரும் குப்பைபோல
சேர்ந்துகொண்டே இருக்கிறேன்  உனக்குள்

ஒரு வெறுப்பு ஒரு கோபம் ஒரு அசிங்கம்
அதனுடைய துர்நாற்றம்
இவைகளின்
கூட்டுத் தொடர்களைத் தாண்டியும்
நேசிக்கிறாய்

விடும் உத்தேசமில்லை
உன் கைகளால் மரணப்படும் வரை,,
என்ன செய்யப்போகிறாய் ம்ம்,,

இரவு நேரம்,,, தனித்து
தேநீர் அருந்தும் ப்ரியம் உணர்ந்திருக்கிறாயா ??

எல்லோருக்கும் தேநீர் அருந்துவது
அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிறது

எனக்கான தேநீர் அருந்தும் அவகாசம்
ஒரு கலை என்கிறேன்,,

பறக்கும் ஆவியை நாசியோடு  இழுத்துக்கொண்டு
கண்களை மூடிக்கொண்டு
என் மூளை செல்கள் வரை
கிளர்ச்சிக்கொள்ளுமாய்ச் செய்யும்
மிடறு மிடறாய் பருகும் நிமிடங்களுக்குள் நீயிருக்கிறாய்

என்னவளே
என் பிரயத்தனங்களால்
உடைகின்ற உன் மென்மையிடம்
பாவமன்னிப்புக் கேட்கின்ற நேரமும் அதுதான்,,

ஒரு தேநீர் பருக
இத்தனை மெனக்கெடுவது தேவைதானா
என்போருக்கு இது தெரியுமா,,

இதற்கு பின்னால் தான்
நான் உயிர்வாழும்  ரகசியமாய்
நீ புதைந்திருக்கிறாய் ,,
எத்தனையோ ஏசிவிட்டப்பின்னாலும்
இதுதான்  நீ அறியாத நான்
இதுதான் உன்னை நேசிக்கின்ற சமயம் என்பது  ,,
அவர்களுக்குத் தெரியாதுதான்  ம்ம்

உயிரானவளே

ஒரு வேளையின் தேநீர் கோப்பைக்காக
உன் மீதுள்ள பிரியங்களை
அதிகப்படுத்துகிறேன்
உன்னைக் காற்றாக சுவாசிக்கும் எனக்கு
வேறு எந்த வாசத்தோடு
ஒப்பிட்டு  நுகர்ந்தபோதும்,,
அது நாசியோடாகவே போய்விடுகிறது தெரியுமா,, ம்ம்

இந்த கோப்பை தேநீரால் மட்டுமே
உன் வாசத்தை
முழுமைசெய்து விழுங்க முடியும் என்பதை
ஆணித்தரமாக ஒப்பிக்கிறேன்,,,

என்னை இரண்டறக் காணும்
உன் மனசு அசரீரிகளிடம்
இதைச் சொல்வாய் நீ,,

மருத்துவர்கள் சொன்னதுபோல
சீராக ஓடிக்கொண்டிருக்கும் என் இதய துடிப்பிற்குள்
தேநீர் கோப்பைகளின் மூலமாய்
அதிகப்பட்ச ஆசையாக
உன் வாசனையை நிரப்பியிருக்கிறேன் என்று ம்ம்

நானுள்ளவரை தேநீரும் வாசமும்
அதற்குள் நீயும்
உனக்குள் நானும்
சண்டையிட்டாவது வாழ்ந்திருக்கலாம்

எல்லைமீறிய கோபத்தினால்
என்னைப்பிரிவதுதான்  உன் முடிவென்றாலும்
என் எல்லா வேளையின்
தேநீர்க் கோப்பைகளினோடும்
உன் வாசனையை நிறைத்துக்கொண்டேனும்
காலம் கடக்க ஆயத்தமாகிறேன்

என் பிரங்ஞைக்குள்
எப்போதும்  புது துளர்ச்சியின் பிரவாகம் போல
சுடும் தேநீர் பிறப்பிக்கும் ஆவியை
என் ஆவிக்குள் உனை சேர்த்து நுழைக்கிறேன்
உனக்கான க்ரூரனை
அது கடவுள் செய்யும் வழிபாட்டில் இதோ  இப்போது ம்ம்,,

"பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 18 January 2017

இளவரசத்தருணம்

இளவரசத்தருணம்
================

அது ஒரு மழைக்காலம் மூடி
பசுமை நனைத்த
காற்று வீசும் வேளை தெரியுமா ம்ம்ம்    
வன்மரங்களுக்கு நடுவே
நீர்வாசம் பரந்து காணும் வெள்ளிக்குளத்தில்
நீலத்தாமரை பிறப்பெடுக்கும்
இடைவெளிக் கரைகளுக்கிடையிலான
கனவுகளோடு
கரைந்துகொண்டிருக்கும் ஒரு மனசு
அங்கே போகவேண்டுமாய் அடம் ம்ம்ம் !!!!

வா எனக்குள்ளே ,,
உனக்கான  வசியக் கிடப்புகளைச்சுற்றிய
சதைவெளியில்
மல்லிகை முல்லை ரோஜா மலர்களும்,,
காலைமாலை பூக்களும்
மரிக்கொழுந்தும்
மாதுளம்பூக்களும்
நடு நடுவே  இதுவரையிலும்
கண்டுட்டுமில்லாத
குஞ்சு செவ்வந்திப்பூக்களும் வளர்க்கலாமா !!

என் கல்லீரல் பொத்துக்குள்
கம்பிக்கூடமைத்து
பாதரசக் கண்ணாடியால்
தனக்கென்றொரு அறைசெய்தவள்
குளிக்கச்செல்லும் முன்னும் பின்னும்
அவளை கண்டும் காணாமலும்
இதரப் பெட்டைகளின்
அரும்படர் மேலே
அடையாள இறகுதிர்த்து பறந்துபோகும்
கள்ளச்சேவலின்
தெம்மாரிக்கண்களை
சிறைசெய்யும் மடிப்புள்ளதா
என இடைவளைத்து நலிகிறாள்!!!!

இதை மறந்தாயா
பகலினை முகில் கீறும் நிழல் ஜாலங்களில்
இதுவரை பிடிபடாத
பல வர்ணங்கள் உண்ட மழைவில்திருடன் நான்
நாண ஊற்று ஒழுக
காணாத உன் பெண்மையின் நிறங் காணும்
அந்த நாட்களில்
நீ அறைகூவல் விடுத்துச் சொன்னது !!! ம்ம்ம்
எங்கே தைரியமிருந்தால்
என்னிடமிருந்து
பெயர்சொல்லும் ஏதேனும் ஒன்றை
திருடிப்போயேன் பார்க்கலாம் என்றதும்
இதோ கன்னமிட்டுப்போனது
உன் இடைக்கொலுசோடு
இடைமடிப்புகளையும்  
என் அடர்க்கற்றைமீசையின் அந்த இளவரசத்தருணம்!!!

"பூக்காரன் கவிதைகள்"

அவளும் அர்த்தங்களும்

அவளும் அர்த்தங்களும்
========================

ஒரே மண்ணில்
நீயும் நானும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தோம்
பிராயம் பற்றிய நாள் முதல்
நம்முடைய ரத்தம்
ஒரு பிஞ்சு அருவியைப்போல
ஒருமித்து ஓடியது
நம்முடைய பட்டங்கள்
ஒரே உயரத்தில் பறந்தன
காகிதக்களி வள்ளங்கள்
சாலை மழைநீரில்
ஒரே வேகத்தில் பயணித்தன
நாம் வேகமாக
வளர்ந்துவிட்டோமாம்
கடுதாசி கத்துகள் சொல்லின ம்ம்
குட்டிக்காலம்
அதிக தூரத்தில் போனது
இளமைக்கால ஏகாந்தத்தில், மனதில்
சட்டென்று
வெளிச்சம் அகன்ற ஒருநாள்
நான் உன் கைக்கொண்ட
ஒரு கண்ணாடி வளைவியை உடைத்தேன்
அந்த வளைபட்டு
அறுபட்டது உன் கைநரம்பு  
பின் நாம் இருவரும்
தண்ணீர் தேங்கிய மடுவொன்றில்
பொற்றாமரை நாளங்களுடைய
கொடி சிக்கல்களின்மேலே
தஞ்சம் கொண்டிருந்தோம்
நீ அறிவாயா ம்ம்ம்ம் ,,, அப்பொழுது
உனக்குப்பிடித்த
மழலைப்படங்கள் நிறைந்த
செருகேட்டிற்குள்ளே  
நீ ஒளித்து வைத்த இரவல் மயில்பீலி    
மூன்று சிற்றிறகுகளை பிரசவித்திருப்பதை

"பூக்காரன் கவிதைகள்"

Monday, 16 January 2017

அவள்


அவள் ======= அவள் கண்டுபோன பலமுகங்களுடைய சாயல்களை ஒன்றுசேர்த்து உலகத்திலேயே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை நேசிக்கிறவளாக இருக்கக்கூடும் அவள் ஸ்திரம் வாசிக்கும் கதைப் புஸ்தகங்களூடே எழில் ஒழுகும் நாயகன் யாரோவுடைய ஆராதகியாக இருக்கலாம் அவள் காதல் சொல்லிகளிலிடத்தில் நின்று வயது மறைத்திருக்கலாம் அவள் ஓராசை ஒரு காதல் ஒரு காமம் ஒரு சோகம் ஒரு பிரயாசை ஒரு விரக்தி ஒரு தனிமை ஒரு மௌனம் இவைகளுடைய திரைச்சுமைகளாலான புடைத்த முலைகளை மறைக்கும் தாவணி உடுத்தியவளாக இருக்கலாம் அவள் நிறங்களவி வார்ப்பிலிடும் நிலைக்கண்ணாடியினிடையோ சாளரத்தினிடையோ புறக்கடையில் பூக்களின் மணங்களிடையோ பூரண சந்திர இராத்திரியிடையோ கிணற்றடியினிடையோ அறையினின்று வேடிக்கைக் காண்கிறபோது சாலையின் வெறுமையினிடையோ உதிர்ந்து வீழும் சருகுகளினிடையோ சுவரொட்டிச் சித்திரங்களிடையோ மரக்கிளையில் குலாவிக் கொண்டிருக்கும் பட்சிகளிடையோ யௌவ்வனம் அறுத்த தென்றற்காற்றினிடையோ இன்னபிற சொல்ல மறந்தவைகளிடையோ வெட்கத்தை விலைப்பேசிக் கொண்டிருக்கலாம் அவள் முகப்பருக்களைத் தாண்டிய மெருகு மெழுகுபோல் உருகிக் கொண்டிருக்கலாம் பொதிந்த பார்வைகள் மலர்ந்த உதடுகள் அலர்ந்த பெண் வாசனை பனித்துளிகள் படர்ந்துலரும் பறிக்கப்படாத ரோஜாவாகி கள்ளப்பார்வை சிலவைகளால் அவளுடைய கற்பு விரசமாக்கி விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம் அதுவுமில்லை என்றால் அவள் அதுகாறும் சொல்லாமல் நேசிக்கின்ற யாரோவுடைய அழகான நோட்டுப் புத்தகத்தில் கவிதையாக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம் அவள் வெளிப்பட நாணுகிற கண்ணீர்த் துளிகளையும் உடைப்பட விரும்பாத தொண்டை கர்வத்தையும் சமூகத்தின் முன்னால் காணிக்கையாக இருத்திவிட்டு எத்தனையோ பாதிரா கோயில் திண்ணைகளில் அங்குமிங்குமாக அலையும் ஓலங்களை ஊழிக்காற்றின் பேரிரைச்சலுடனும் வௌவ்வால்களின் சாக்குரலுடனும் தொலையவிட்டவளாக இருக்கலாம் அவள் கனவுகள் சுமந்த கட்டிலிடமும் போர்வைகளிடமும் இந்நாள் வரையான இறுக்கங்களை களையப்பட்டவளாக இருக்கலாம் அவள் அங்கத்திலிட்ட மருதாணி சிவப்பிற்கும் கலங்கிய கூந்தலுக்கும் கலைந்த சிந்தூரத்திற்கும் கசங்கி விலகிய ஆடைகளுக்கும் பொட்டித் தெறித்த வளைவிகளுக்கும் அந்தநேரம் தாளமிடும் கொலுசுகளுக்குமாய் காரணமானவர்கள் என்று யாருமே இல்லாமல் கூட போயிருக்கலாம் அவள் யாரோவுடைய முத்தச்சாரிகைகளை காற்கடக்கைககளுடைய மோகாந்த நர்த்தனங்களை முனங்கல்களின் எதிரொலியாக்கி சலபங்களாய்ச் சுற்றவிட்ட பக்கவாட்டு சுவர்களில் ஏக்கங்களை விதைத்தவளாக இருக்கலாம் உணர்க்கொல்லிகளின் மத்தியில் அவள் இப்படி இப்படி பல இடங்களில் பலப்பல "அவள்களாக" அவதரிக்கப்பட்டிருக்கலாம் "பூக்காரன் கவிதைகள்"

Sunday, 15 January 2017

சுவடுகள் - 01

வழிப்பாதையில் 
குடைபிடித்து பிரிந்துவிட்டாய் நீ 
காலமழையில் 
நனைந்து 
கொண்டிருக்கிறேன் நான்
எனக்குள் நெளிந்துகொண்டிருக்கும் 
இந்த புழுவின் இதயத்திற்கு 
கடந்தகாலம் என்று பெயர் சூட்டிவிடலாமா ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

அன்றோடு அவன் வசமாகியிருந்தது ம்ம்ம்

அன்றோடு அவன்  வசமாகியிருந்தது ம்ம்ம்
=======================================

அங்கிருந்த யார்மீதும்
அளவிடாத அவனின் இரு கண்களும்
அளவான சிரிப்போடு
அனைவரிடமும்  அவன் செய்துக்கொண்ட

அறிமுகமும்தான்
அத்தனைப்பேருடைய குசுக்குசுப் பேச்சுகளிலும்
அன்று சுவையாகிருந்தன

ஈரக்காற்றில் அசையாத
பைனஸ் மர நூலிலையைப்போல
உடையாத கேசமும் முறுக்காத மீசையும்
அதைத்தாண்டிய உதடுகளும்
யாருக்கும் அவற்றை
பல்லிடுக்குகளால் கடித்துவருடி
மேய்ந்துவிடலாமா என்ற ஏக்கத்தை
கட்டாயம் சொல்லிக்கொடுத்திருக்கலாம் ம்ம்ம்

நாணல் போன்ற
இழுத்துவிடும் பார்வையால்
சாப்பிடத் தோன்றும் குரல் நயத்தோட
இந்த பார்வை போதுமா
என்பதைப்போல
இமை மூடுதலின் பற்றாக்குறைகளை
நிறைவேற்றிக்கொண்டிருந்தான்

பூத்தொடுக்கும் விரல்கள்
மொட்டுகளைக் கண்டதும் ஆயத்தமாவதைப்போல
அந்த மேடையில்
அவனுக்கான அழைப்பின்போது மட்டும்
முழுக்கால் சட்டையையும்
மென்பட்டு குப்பாயத்தையும்
சரி செய்துவிட்டு
ஒருமுறை திரும்பிப் பார்க்கமாட்டானா
என்று வியப்பிலாழ்த்தும்
விழிகளின் கூட்டங்களுக்கு மத்தியில்
ஏமாற்றத்தைக்கொடுத்துவிட்ட
நடையினாலும்,,
எதையும் சொல்லத்தொடங்கும் முன்பான
அவன் புருவ உயர்த்தலின்
வாகினாலும்
அந்த சபையை நிறைத்துவிட்டிருந்தான் ம்ம்ம்

எப்பொழுதாவது அவனுடன் சேர்ந்து
ஒரு coffee பருகும்
உபரிவாய்ப்புக் கிட்டிவிடாதா என
அவன் ஆண்வாசத்திற்கு
நுகருதலால் அணைக்கட்டிவிடும்
ஆவலோடிருக்கும்
அவஞ்சோட்டு பெண்டுகளின்
அதுநாள்வரையின் உறக்கமும்  
அன்றோடு அவன் வசமாகியிருந்தது ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

Friday, 13 January 2017

அப்ப்ப்ப்ப்பா

அப்ப்ப்ப்ப்பா =========== (மீள்) அந்த பர்ப்புள் நிற ஷர்ட் அவனுக்கு எடுப்பா இருக்கும் எதுக்குப்பா இதெல்லாம் உனக்கு தெரியாது நீ பாரு வேணும்னா அவன் இதைப்போட்டப் பின்னாடி அவனே சொல்லுவான் கண்ணாடி பார்த்துட்டு எனக்கு இன்னொரு பொண்ணு பாருங்கப்பான்னு கேலியா என்னமோ இப்போல்லாம் அந்த ஷர்ட் கொஞ்சம் துவைத்து துவைத்து நிறம் மாறி வெள்ளை நிறம் ஆகிடுச்சு காலரில் லேசா தையல் பிரிந்திருக்கிறது முழுக்கை சட்டையாதலால் மணிக்கட்டில் பொத்தானிடும்பாகமும் அப்படித்தான் குறுங்கிழிசல் அந்த சட்டை மட்டுந்தான் இன்னும் இருக்கிறது பெரும்பாலும் அவர் எனக்காக எடுக்கும் எல்லா சட்டைகளையும் ஒரு ரெண்டு மாசம் அல்லது மூணு மாசம் நான் போட்டுவிட்டப்பின்னே அவரும் அதையே போடுவார் அவருக்கென்று ஒன்றுமே வைத்திருக்க விரும்பாதவர் எதுக்குப்பா இதையெல்லாம் போடறிங்கன்னு கேட்டால் சட்டை தொளதொளவென இருக்க சிரிச்சிகிட்டே கட்டைக்குரலால் சொல்லுவார் உனக்கு அப்போ ரெண்டரை வயசிருக்குஞ் சாமி உங்கம்மா முகத்த தொட்டு பார்ப்ப நடுராத்திரி தூக்கம் முழிச்சு தாடி மீசையும் குடி வாசமும் இல்லாம போனா ஓஓஓ ன்னு ஒரே கலாட்டா அந்த கட்டில் தாண்டி விழுந்துப்புடுவ அப்போ நீ பிஞ்சு தொண்டை வச்சு வீல் வீல் ன்னு கத்துறப்போ நா எங்கோ ஒரு இருட்டான மைதானத்துல உன்ன தேடுறமாதிரி உனிப்பு விளக்கு கூட போடாம அப்படியே எழுந்துவந்து உங்கம்மாவ ரெண்டு சாத்து சாத்திப்புட்டு உன்னைய என் நெஞ்சோட சேர்த்து உன் உமிழ்நீர் சொரிய பாடிக்கிட்டே படுப்பேன் உங்கக்கா மகராசி எழுந்திருக்கவே மாட்டா பேயாட்டம் ஆடுவா அப்பா வா வந்து தம்பிய எடு வா ன்னு இப்போல்லாம் இந்த வீட்ல இருட்டு இருக்கு அடிக்க உங்கம்மா இல்ல அழ நீ இல்ல ஆட்டம்பிடிக்க உங்கக்காவுமில்ல ஒத்திக்க இந்த சட்டையாச்சு இருக்கட்டுமே டா ,, இப்போ எனக்கு ஆறு வயசு ,, அம்மா தவறி மூணு வருஷமாச்சு தெரியாது எனக்கு அவளை :/ அப்பா பள்ளிக்கூடம் முடிஞ்சு ஸ்கூல் முன்னாடி காரோட நிப்பாரு,, அப்பாவை பார்த்ததும் கண்கள் தான் சிரிக்கும் கையில ஹார்லிக்ஸ் நிரம்பிய ஃப்ளாஸ்க் அதோ அந்த பைனஸ் மரத்து பக்கமா ஒரு பெஞ்ச் இருக்கும் அங்க போயி உக்காந்துக்குவோம் கதை சொல்லுப்பா என்பேன் "Snow White is a lonely princess living with her stepmother, a vain and wicked Queen,,, மாயக்கண்ண்டாடியின் ஜாலங்கள்வரை தொடர்ந்து பின் ,, A year later, a prince, who had previously met and fallen in love with Snow White, learns of her eternal sleep and visits her coffin. Saddened by her apparent death, he kisses her, which breaks the spell and awakens her. The dwarfs and animals all rejoice as the Prince takes Snow White to his castle. இல் முடிப்பார் ,, மணி இப்போ சாயங்காலம் நாலரை சரி சாமி வீட்டுக்கு போலாமா ன்னு கேப்பார் காருல வேணாமேப்பா நடந்தே போலாமா ன்னு கேப்பேன் சரின்னு சொல்லுவாரு போறவழியில பட்டாணி வறுவல் வேர்க்கடலை வறுத்தது சோயா பீன்ஸ் சில்லி எல்லாமே வாங்கி வாங்கி தருவாரு இந்தா அனு சாப்பிடு ம்பார் அந்த பார்வையையும் பாசத்தையும் அப்போ என் ஆசைகள் மறைத்த வயசு அது ஒருநாள் ஆரஞ்சு முட்டாய் அப்பாக்கு தெரியாம வாங்கி சாப்பிடுறப்போ அப்பா வாரதைப் பார்த்ததும் பத்து முட்டாயவும் அவசரமா வாய்க்குள்ள போட அஞ்சுதான் போச்சு மீதி அஞ்சு முட்டாய் எச்சில் பட்டு வெளிய விழுறப்போ கையில பிடிச்சுக்கிட்டேன் அப்பாவை பார்த்ததும் என் முட்ட கண்ணுல பயமும் கண்ணீரும் முதுகுல ஒரு அடிவிட்டவர் அக்காவை கூப்பிட்டு சோனு அந்த கரண்டிய காச்சு எடுத்திட்டுவா ன்னு சொன்னவரு என்னடா வாய்க்குள்ள அதுன்னு கேட்டப்போ பயத்துல முட்டாய்க தொடைக்குள்ள அடைக்க மூச்சு முட்டி அங்கேயே விழுந்துட்டேன் அன்னைக்கு பூராவும் ஆஸ்பத்திரியில கிடந்தேன் அவரு கையை சுவத்துல அறைஞ்சுஅறைஞ்சு அன்னைக்குப் பூராவும் அழுதுகிட்டார் அன்னுதொட்டு இதோ மனுஷன் சாகரவரையும் அடிக்கவே இல்லை ம்ம்ம் அன்னில இருந்து அவரே எனக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வந்திடுவாரு ஈகநார் ல அடச்சு விக்கிற பச்சை பட்டாணி பொட்டுக்கடலை எலந்தவடை எல்லாமே கேப்பேன் கண்களை குறுக்கி பார்க்கும் அதே ஏக்கப் பார்வையோடும் அதே பாசத்தோடும் இந்தா வாங்கிக்கோ அனு ன்னு அதே கட்டைக்குரலால கேக்குறப்போ அன்னைக்கும் என் ஆசைகள் அதை அந்த அன்பை உணர மறுத்த வயசுதான் வயசு இப்போ பத்து அக்கா எம்பீபிஎஸ் முடிச்சு அவளுக்கு கல்யாணமும் முடிஞ்சது ,, அம்மா இல்லை ,, இப்போ அக்கா போய்ட்டா இப்போ நா ஹோட்டல் தசப்ரகாஷ் ல போர்டிங் ஸ்டூடன்ட் அப்பா ரேஸ் கோர்ஸ் வருவாரு என்கூட ரெண்டு மணிநேரம் டெய்லி செலவிடுவாரு காலம் மறக்கடித்தது இப்போது வழப்பமாக அப்பா வாங்கித்தரும் பட்டாணியையும் ஆரஞ்சு மிட்டாயையும் சோயா சில்லியையும் வறுத்த வேர்க்கடலையையும் ஆமாம்,,, இப்போ எனக்குப்பிடித்தது சிக்கன் குழம்பும் சுட சுட இட்லியும் ம்ம் அப்பா ஈவனிங் ஆறு மணிக்கு மேலே நிறைய குடிக்க ஆரம்பிச்சிட்டாரு அப்பாவை கவனிக்க யாருமில்லை அங்க அக்கா போன் ல தான் பேசுவா அப்போவும் எனக்கு அப்பாவின் தேவைகளை புரிந்துகொள்ளா பருவந்தான் முத்தண்ணா வுக்கு சொல்லுவேன் போன் பண்றப்போ அப்பாவுக்கு சாப்பாடு குடுத்திடுங்க ன்னு நா வெகேஷன் போறப்போ எல்லாம் வேலைக்கு விடுப்பு போட்டு ஆறுமணிவரை என்னுடன் இருக்கும் அப்பா அதுக்கப்பறம் காணாமே போயிடுவாரு முகப்பு அறை சோபாவில் காத்திருப்பேன் வரமாட்டார் அப்படியே உறங்கிட்டா அவர் வந்துட்டு சாப்பிடாம படுத்திடுவார் நள்ளிரவாகிவிடும் ஒவ்வொரு வாகனமும் எங்க வீட்டு முன்னாடி உள்ள வீதியை கடக்கறப்போ விழிப்பு வரும் ,, பாதிராவில் ஒரு கிளாசிக் கான்டசா காரின் சத்தமும் வெளிச்சமும் எங்கள் போர்டிகோவில் அணையும் இரண்டு மூன்று முறை அதன் எக்ஸலேட்டர் உறுமி ம்ம் மோரில் கரைத்துவைத்த சாதத்தையும் வெட்டிவைத்த வெங்காயத்தையும் சாப்பிடச் செய்திட்டு அவரை தூங்க அனுமதிப்பேன் காலப்போக்கில் அவர் எனக்காக மாறிட்டார் ஆம் என் போக்கு மாறிவிட்டது இஷ்டம்போல பணம் போர்டிங் க்கு கட்டிடுவார் எல்லாமும் இருந்தன அதிகமாக என் தனிமையும் இதோ என் பக்கவாட்டு சுவற்றில் எழும்பும் அதன் அசுர நிழலும் என்னை விழுங்கிக்கொண்டிருந்தது பயங்கரமாக அப்பொழுதுதான் என் முகத்தில் முதல் பரு முளைத்து அதன் கூர் நீண்டிருந்தது ஆம் இப்போது எனக்கு வயசு பதின்மூன்று பூவிரித்த பாதையையே பாதங்கள் நம்புகின்றன சேகுவேரா ஓஷோவின் அறிவுரைகளை டீச்சர்ஸ் போதித்த பொழுது அவற்றை தியரட்டிக்கலாகவே எடுத்துக்கொண்டது வயதின் ஆட்சியில் சிறைபட்ட மனம் அப்பாகிட்டே என் பாதங்கள் பாதை மாறுவதை இதோ பாருங்கப்பா என்று காண்பித்தபடியே சீரழிகிறேன் "Yes Because He Was The Only rescuer For Me In That Juncture" ஐந்தின் இரட்டிப்பு இலையுதிர்க்காலங்களையும் ஐந்தின் இரட்டிப்பு வசந்த காலங்களையும் ஐந்தின் இரட்டிப்பு கோடைக் காலங்களையும் ஐந்தின் இரட்டிப்பு பருவமழைக்காலங்களையும் காலநதியில் எப்படி எப்படியோ நீந்திவிட்ட எனக்கு ஆம்,, இப்பொழுது நான் ஒரு பொறியியல் பட்டதாரி மட்டும் அல்லாமல் டிஸ்டிங்க்ஷனில் சான்று பெற்ற ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட் போஸ்ட் கிரேஜூவேட் கரை சேரா கிரேஜுவேட் என் வயது இப்பொழுது இருபத்திநான்கு எந்த தோல்வியினுள் நானும் என் சிந்தனைகளும் எண்ணமும் இடியாப்ப சிக்கல் என்று தெளிவிலில்லை பொதிசுமப்பதுபோல் என் உணர்வுகளையும் நான் பாவியாகிவிட்டவன் என்று ஒருபிடி சோற்றில் என் கண்ணீர் விழுந்து அது உப்புக்கரித்த பொழுதும் என்னை தழுவிக்கொடுத்து சாப்பிடுப்பா என்பார் இது உங்கவகையாப்பா இந்த கவனிப்பு என்பேன்,,,, அழுதுக்கொண்டே இப்போவும் சிக்கன் குழம்பும் இட்லியும்தான் பிடித்தது என்ன ஒண்ணு எண்ணெய் தேச்சி அவரே அடிச்சு அடிச்சு குளிக்கவைப்பாரு வலிக்குதுப்பா ன்னு சொல்லுவேன் மூச் உனக்கொண்ணும் தெரியாது கம்முனு இரு ஆமா ன்னு வாயடைச்சிடுவார் ம்ம் அப்பா அப்பாதான் ,,, வேறு யாரையும் அப்பா என அழைக்க இடம் விட்டுவைக்காமல் என் பிறப்பு 14th Feb 1982 லிருந்து அவர் இறப்பு 14th Jan 2011 இன் வரையான அந்த நீள் கோட்டை நிரப்பி மறைந்தார் இன்றும் அந்த நினைவுக்கிடங்கு நிரம்பியப்படியேதான் வெற்றிடமாகிவிடவில்லை அங்கே வீடு இருக்கு இட்லி சிக்கன் குழம்பு அப்பா பக்குவத்தில இல்ல எண்ணெய் தேச்சு நானே குளிச்சிக்குறேன் சோப்பு ஷேம்பு இல்லை சீயக்காய் தைவரல் தான் ம்ம்,, "பூக்காரன் கவிதைகள்"

Thursday, 12 January 2017

ஆதலால்தான் விட்டுப்போகிறேன்

ஆதலால்தான் விட்டுப்போகிறேன்
===============================

நீ உடனிருப்பதைப்போல் உணர்வு
எங்கோ
காற்றின் சாலையில்
நம் மௌனம் விலகி இருந்தது

என்  மூடியிருந்த கண்களைச்சுற்றி
தூபம்  ஏற்றியிருந்தார்கள்  
என் நாசி உணராத அந்த வாசனை
அந்த இடமெல்லாம்  பரவியிருந்தது  

சூரியன் மறைந்த  அடிவான விளிம்பில்
நிலா ஒளிர்கிறது
என்னால் உணரமுடியவில்லை

நட்சத்திரங்கள்  எங்கோ காணாமல் போயிருந்தன

நிறைய உடுப்புகளை
என்மேல்
ஒருவர் ஒருவராய் உடுத்திப்போனார்கள்
வெளியிடையில்
பலத்த காற்று  எழுப்பிய  தூசுகள்  
என் இறுதிச் சடங்கை
உறுதி  செய்துக்கொண்டிருக்கின்றன

எப்பொழுதாவது
உன்னுடைய வருகைக்காய்
நான் காத்திருந்த அழகிய பாதை
என் பார்வையிலிருந்து
விடுபட்டு
இருட்டாகிக் கொண்டிருக்கிறது

இம்முறை மருத்துவன் வரவில்லை
அதிகம் நேசித்த தோழி
அவள்  கைகளில் கிண்ணம் ஏந்தியிருக்கிறாள்
அவள் அழுகிறாள்

நான் உன்னுடன் இருந்து
வாழ்ந்து முடிக்காத
எத்தனை எத்தனை அழகான தருணங்களை
நிராசையாய்
விட்டுப்போகிறேன் ம்ம்
இப்போது நான் உடைந்த கண்ணாடியாகிவிட்டேன்

சரீரம் அழுகிக் கொண்டிருக்கிறேன்
என்  அறையின்
இரவு பகல்களுடைய  வெளிச்சம்  
இதுவரை
உன் நினைவுகளால்தான்
ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது

அதோ
அங்கு யாரோ சிலர்
எனக்கான
சிதை தயார் செய்துக்கொண்டிருந்தார்கள்
உன் மௌனம்
தோற்கடித்த தீயைவிட
இன்னும்
அற்ப நேரத்தில்
என் சடலம் எரிக்கின்ற  தீ
அத்தனை  எரிச்சல் தரப்போவது இல்லை
 
இதற்குப் பின்னால்
நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும்
என்னைப்பற்றி
உன்னிடத்தில் விசாரித்து வரக்கூடும்

அவர்களிடம்  சொல்லிவிடு
அந்த கிண்ணத்திலிருந்த
தண்ணீர் தெளித்த
ஆறாத கங்குகளுடைய
சவக்காடு  போதையில்  
அவள் மயங்கிக்கிடக்கிறாள்  என்று

உன்னுடைய
ஏதும் சொல்லாதவைகள்
என் உயிரை
இரண்டாக வெட்டி
இயற்கையோடு சங்கமம் செய்துவிட்டன
காற்றில் கலந்த
என் கண்ணீரின் சிணுங்கல் சப்தமும்
உப்பு சுவையும்
உன் சுவாசித்தலின்போது உணர்ந்துகொள்வாய்
உன்னிலிருந்து
என் மூச்சு
இன்னும் விடுபடவில்லை என்பதை  

இனி இதுபோலொரு
கொடுங்காற்று வீசி தூசி எழும்பும்  வேளையில்
இனி இதுபோலொரு
உன் இறுதி சடங்கின் யாத்திரையுடைய சாலையில்
உன் கண்களுடைய
கடைசி ஒளி
என் வாசனையைத் துழாவக்கூடும் ஆதலால்தான்

"பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 11 January 2017

மனைவி கணவன் - மீள்

மனைவி கணவன் - மீள் ******************************** 07.04.2007 (dairy) ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர். அவளுக்காக தன் உடை. நடை. பேச்சு... இப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் கணவன். தினமும் காலையில் எழுந்தவுடன் அவள் முகத்தில் தான் முழிப்பான். இரவு 7 Pm... வீடு வந்துவிடுவான். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவாளி தான். அப்படிதான் கொஞ்சிக்கொண்டு விளையாடுவார்கள். .அவளுடன் சேர்ந்து Cupl. Dacs... ஆடுவது வீட்டில் இருவரும் ரோமியோ ஜீலியட் நாடகம் நடிப்பது... இப்படி ஒரு குழந்தை பிறக்கும் வரை அன்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர். ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு கனவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. அன்று முதல் அவர்களுக்குள் இடைவெளி வந்தது. அடிக்கடி சண்டையிட்டு கொண்டனர். அவன் மனைவியுடன் சரியாக பேசியே 2 மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் இரவு அவன் மனைவி "இப்போது என் மேல் உனக்கு காதல் இல்லைடா!. உனக்கு பணம் தான் பெரிது! நான் வீட்டை விட்டு போறேன்! என்னை தேடாதே!" என்று ஒரு கடிதம் எழுதி கட்டிலில் போட்டுவிட்டு இவள் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக்கொண்டாள்... வீட்டிற்கு வந்த கணவன் "கதவு ஏன் திறந்திருக்கிறது!" என்று சத்தமிட்டுக்கொண்டே மனைவியை தேடுகிறான். அப்போது கட்டிலில் இருந்த கடிததை எடுத்து படித்து அதில் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு Call செய்கிறான். "மச்சீ பிசாசு" போய்ட்டாடா!" இனிமே எனக்கு"... என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான். இதை கேட்டவள் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறாள். " அய்யோ எவளையோ வச்சிருக்கான் போல" நான் நினைத்தது சரியாகிவிட்டதே" என்று புலம்பிக்கொண்டே கட்டிலில் கணவன் எழுதியதை எடுத்து படிக்கிறாள். "அடி லூசு பொண்டாட்டி! கட்டிலுக்கு கீழே உன் காலு தெறிகிறதடி!" என் உயிர் நீதான் என்றேன்! நீ சென்றுவிட்டால் நான் செத்துப்பொய்ருவேண்டி!" இதை படித்தவள் "ஹான்" டேய் பொறுக்கி நா எங்கும் போகலடா" எங்கடா இருக்க புருசா"! என்று அலறிக்கொண்டே கணவனை தேட தன் மனைவியை பார்த்து கை நீட்டி சட்டையை விலக்கி தனது மார்பை காட்டி ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறான் கணவன். "ஹான்" என்று வேகமாக ஓடிவந்தவள் அவன் மார்பில் முகம் பதித்து கட்டியணைத்து அழுகிறாள். (காதலில் சிறந்த காதலே கணவனும் மனைவியும் காதலிப்பதுதான்.) ""பெண் என்பவள் வளைந்த எலும்பினால் படைக்கப்பட்டவள் அதை வளைக்க நினைத்தால் வளையமாட்டாள் இரண்டாக உடைந்துவிடுவாள். "" ஒவ்வொரு ஆணுக்கும் அவன் வாழ்கையில் கிடைக்கிற மிகப்பெரிய பரிசே அவன் மனைவி மட்டுமே. அதனால்தான் ஆண்கள் கடன் வாங்கினால் தன்னுடைய பெயரிலும். சொத்து வாங்கினால் தன் மனைவியின் பெயரிலும் வாங்குகிறார்கள். அதற்கு காரணம் கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் சொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே என்று அர்த்தம். பூக்காரன் கவிதைகள் -
சரவணா

Monday, 9 January 2017

இடைமுதல் இம்சைவரை ஓர் இதழ்ப்பிரயாணம்

இடைமுதல் இம்சைவரை ஓர் இதழ்ப்பிரயாணம்
==============================================
(கூந்தலிசம்)

என் நிலவுக்கு தேய்ப்பிறையாம்
இந்த மூன்று நாட்களுக்கு ம்ம்,,,
ஆசை தோசை அப்பளம் வடை என்கிறாள்

சடைப்பின்னாத விரிகூந்தல் போலே
இடர்வாராய் கார்முகிலே
அற்பம் இடமொதுக்கித் தந்தாயானால்
இதழ்ப்பதித்தாவது தேற்றிக்கொள்கிறேனே
கொஞ்சமேனும்,,,
அவ்வெண்பிறையின் பின்கழுத்தோரம்

அடரும் துவேச பனிப்புகாருக்குக் கீழே
இமை மூழ்கடிப்பு நடக்கிறது
கட்டவிழ்ந்த
முட்டுதல்களுக்குள்ளே
முத்தொன்றை விதைத்துவிடவே
உன்  இதழ்விதைத் தூதுவிடு
உறைவிட்டப் பெண் "பாலில்" நொதியூட்டும் தொடக்கமே
முத்தங்கள் தானே
இடையேது கடையேது இதற்கு  
அட கணக்கு வழக்குகளில்  கரார்தான் ஏது
நீ தொடரு என்றாள்

எல்லாம் முடிந்தப்பின்னாலும்
முடியாமல் இருக்கட்டும் இப்பதிவுகள்
இரவு விடியல்களேது
இருக்கின்றவரைப் பதிய கன்னங்களும்
உடனில்லா நேரங்களில்
தொலைப்பேசி ரிசீவரும்
எத்தனைமுறையானாலும்
வேண்டாமென்றே சொல்வதாயில்லை
இவைகளாலேயே
நீராட்டித்துடைத்து சிகையுடுத்தி
பசிப்போக்கிவிடுவாயா என்றபோது
"ச்சீ" என்று வெட்கிக்கிறாள் முகம் நாணி

பதியப்போவது
கையெழுத்தா கை நாட்டா என்றவளிடம்
பிரயாணம் தவிர்க்கும்
என் ஒற்றைவிரல் அமிழ்த்தி
துடைத்தவன்  
ரேகைகள் பதியா இதழ்நாட்டு இவைகள் என்றேன்
அப்படியா அப்படியென்றால்
வந்த வழி மாறாமல் இருக்க
அடையாளங்களை
ஊன்றிச்செல் என்று விடுகதை வைக்கிறாள் கிறுக்கி

ஈரம் காயா பிரதேசம் ஒன்றை
பெற்றுத்தா முதலில்
காற்றுத் தொட்டு தணல் மூட்டும்  இடங்களில்
இதழ்"கள்" ஒட்ட மறுக்கிறது தெரியுமா
என்றதும்
என் மீதும் அவள்மீதும்
அவ்விரிந்த மேகக்கற்றைக் கூந்தலை சுருட்டி
சுரங்கப்பாதை நெய்தவள்
ஈறு தெரியாத குறும்புன்னகைத் துளிர்ப்பினால்
இது போதுமா என்றாள் கள்ளி
கண்களை இருமுறை சிமிட்டியவள் ம்ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

Sunday, 8 January 2017

என்றென்றென்றைக்குமாய்

என்றென்றென்றைக்குமாய்
=========================

அர்த்தமின்றி
சிலமுறை தடதடக்கிறேன்
மழைத்துகள் தொட்டு  
ஆராதித்தடங்கிய
பசுமையைப்போல
பின்னொரு ஏகாந்ததையிலோடு
மௌனமாகிறேன்
குடுவை நீரில்
தாமரையின் தளும்புதல் போல
எதிர்ப்படும் போதெல்லாம்  
தளும்புகிறாய்  
கடந்துபோகும் உன் கண்களில்
நின்று நான்
கடிதங்கள் வாசிக்கிறேன்
நவரஞ்சிதையே
நாம் இணைந்திருக்கும்
சம்மோகன வேளை
வசீகரமாகும்
எங்கோ  வழித்தப்பியபோது
எதிர்பாராமல் பட்ட
பிரியவாசனை நீ
காதல்  ஒரு பனிநீர் மெத்தையல்ல
என்னோடுள்ள
இப் பிரயாணங்களில்
கார முட்களும்
கண்ணாடிச்சில்களும்
காணக்கூடும்
தளராதே
என் கைப்பற்றி
முன்னேறிவிடு
உன் நுதலாடும் சிந்தூரத்தால்
உதயமாகும் நேசத்தின்
நெய்க்கயிற் நாளங்கள் போல
இராக்கால
மந்த மாருதத்தின் தள்ளோடையில்
இளகியாடிடும்
மந்தகாசப் பூக்களைப்போல  
வெண்ணிலாவைத் தொட்டெழுதிய
கவிதைகள் போல
உன் யாத்திரை
என்றென்றென்றைக்குமாய்
என்மேல்
தழுவியிருக்கட்டும் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

Friday, 6 January 2017

உடையும் உணர்வுகள் - சிறுகதை

உடையும் உணர்வுகள்  - சிறுகதை
================================

அவன் என்னை
நான் மேலும் ஒப்பனை ஏதும் செய்யப்படாமல்
உருவாகிய முதல் நாளில்
என்னை சந்தித்தான் ,,,
அதோ அந்த பள்ளிக்கூட மதில் சுவரொட்டிய
கைக்காட்டி மரந்தான்
தினம் அவனுடைய தொடரிருப்பானது
என்னை சந்தித்தப்பின்னால்
முதல் பார்வையிலேயே
அவனால் ஈர்க்கப்பட்டிருப்பதை கவனித்திருந்தேன்

அன்றிலிருந்து ஏழாவதுநாள்
என்னை அருகி சில நிமிடங்கள்வரை
ரசித்திருந்தவனை
விசாரித்தார்கள் என்னை உற்பத்தி செய்தவர்கள்
அவன் திருட்டுப் பார்வையின்வசம்
என்னை அருக அனுமதிக்கவில்லை

மறுநாள் வந்தவன் விலைகேட்டான்
விலை கட்டுபடியாகவில்லை
சாயங்காலம் வருவதாகச்சொல்லி சென்றுவிட்டான்
பொழுது வைகியது அவனைக்காணவில்லை
இனிமேலும் வருவானா ??
என்ற நம்பிக்கையும் பொலிவிழந்துவிட்டது

அதே சமயம்
மூன்று முரட்டு மனிதர்கள்
யாருடைய அனுபாதமுமின்றி
என் இருப்பிடத்திற்குள் நுழைந்து
என்னை அத்துமீறி ஆக்கிரமித்தார்கள்
அதை தட்டிக்கேட்ட உரிமையாளரிடம்
என்னை விலைபேசினார்கள்
அப்பப்பா அவர்களின் ஆளுமையில்
எத்தனை வன்மை பதறித்தான் போயிருந்தேன்
அந்நேரம் அவன் அங்கே பிரவேசித்தான்,
கடுமையான பேரத்திற்கு பிறகு
ஆம் அவனே வென்றான் என்னை
புதுவாசம் நிரம்பிய தளவாடங்களுக்கு
மத்தியில் பிணைப்பூட்டி
ஏதோ ஒரு மூன்றுச்சக்கர மகிழூந்தில்
அவனுடன் இறுக்கமாக இருத்தப்பட்டேன்
வென்ற ஆசுவாசத்துடன் என்னை விடாமல்
பிடித்துக்கொண்டு போகும்
அவனைக் காணுகையில்
விசித்திரமாகத்தான் இருந்தது

அவன் வசிப்பிடத்திற்கு
என்னைக் கொண்டு சேர்க்கும்வரை
அவ்வளவு பத்திரப்படுத்தப்பட்டேன்
இங்கிருந்து ஒரு பதினான்கு காத தூரத்தில்
மகிழூந்தின் தடதடத்த
உதடு முறுக்கிப் பிழிந்த எஞ்சின் சப்தம்
ஓய்வெடுத்தது
பதறாமல் என்னைமட்டும் அவன் கரங்களோடு
அணைத்துவிட்டு
என் உடைமைகளை இதர ஆட்களைக்கொண்டு
அவனுடைய அறைபுகும் வழிக்கு
அவனை சார்ந்த எல்லோருமே
கடிந்துகொண்டிருந்தார்கள்
என்னை எதிர்ப்பட்ட அவர்களின் முகத்தில்
அவனைக்குறித்த அத்தனை கொடூரம் ம்ம் :(
ஊதாரிக்கு வாக்கப்பட்டதுபோல் மிகவும்
வருந்தினேன்
என்ன செய்வது பேரம் பேசியல்லவா
என்னை சொந்தமாக்கிக்கொண்டான் ம்ம்ம்
இனி நல்லதோ கெட்டதோ
அவன்தான் எனக்கு எல்லாமே
அவன் அறைதான் எனக்கு மாடமாளிகை

கொண்டுச் சென்றான்
அங்கே குத்துவாக்கில் கட்டித்தொங்கவிடப்பட்ட
மர ஊஞ்சலின் பக்கவாட்டில்
அவன்  படுக்கைக்கு முன்னால்தான்
நான் இருக்கவேண்டும் என்றே அடம்,,,
அதுபோல் நடத்தியும் விட்டான்
அன்றிலிருந்து அவனுடைய எல்லா நடமாட்டங்களும்
என்னில் பதிவாகிறது
அவனுடைய ரகசியங்களுக்கு
உத்தரவாதி நான் ,,,
அடிமைகள் எப்போதுமே பேச அனுமதிக்கப்படாத
அஃறிணைகள் தானே ம்ம்,,
அவன் கைப்பேசி அலறினாலும் ,,
அவ்வறையின் எண்கடிகை அலறினாலும்
என்னால் ஏது செய்யமுடியும் ???

""அதிகப்பட்ச பிரியங்களை
அவன்  என்னிடமே பொழிவான் ம்ம்
யாரோடு முறுக்கிக்கொண்டாலும்
என்னிடமே கண்களை விறைத்து சண்டையிடுகிறான்
யாரால் ஏமாற்றம் என்றாலும்
என்னிடமே சொல்லியழுவான்
நிறமாதிரிகளை வாங்கி
என் நிர்வாணத்தை அலங்கரிப்பான்
அதிக ஆவேசத்தின்போதெல்லாம்
அழுந்த முத்தமிடுவான்
ஒன்றுமே செய்யாத பட்சத்தில்
இப்படியா பார்ப்பது என்பதைப்போல
நான் வெட்கிக்கூனிக்குறுகிப்போக
விழுங்குவதுபோல் அப்படி முறைப்பான்
விளக்கணைக்கும் நேரத்தில்
வெற்றுச்சுவரை பதிவாக்கிக்கொள்வேன்
மின் தடங்கலின் போது
அதிகமாக வியர்த்து அயர்ந்துவிடுவேன்
மென்பட்டு நனைத்து
குளிர்ச்சி படர படர
இதமாக குளிப்பாட்டித் துடைப்பான்
யாருமில்லா நேரத்தில்
கதவடைத்துவிட்டு
கைக்காலகளை உதறிவிட்டு
ஆடைகளை அவிழ்த்துவிடுவான்
நானோ அப்போதெல்லாம்
திரும்பிக்கொள்ளவே முடியாத
சிலுவையிலறைந்த பாவியாகிறேன்"""

""என்னை அழைத்துச்சென்ற சிலநாட்களில்
ஆண்மை பொதிகூட
இடதுகை விரல்களால்
என் மார்பை அழுத்தித் தள்ளியவன்
இதோ எனக்கு அரையடி தூரத்திலிருந்து
இமைகள் சொருக நாசி, நரம்பு புடைத்து
சபலங்களை பீய்ச்சியடித்தான்
கறைசெய்யப்பட்டேன் முதல் முறை""

அவனுடைய ரகசியங்களைத் தின்று தேக்கி
வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு
அவன் நன்றாக பழகி போயிருந்த சமயம் அது
திடீரென்று ஒருநாள்
அறைக்கதவை உடைப்பதுபோல்
அறைந்துகொண்டும் திறந்துகொண்டும்
நுழைந்தவனிடம்
கோபமில்லை குழப்பத்தையே கண்டிருந்தேன்
ஆழ்ந்த வருத்தத்தில்
கரங்கள் முகம்புதைய
எப்போதும்போல வந்ததும்
என்னைக் காண்பதையும்  மறந்திருந்தது
அவனின் அன்றைய போக்கு
ஆம் யாரோ அவனை மறந்திருந்தார்களாம்

ஹேய் இதோ ,, இங்கே பாரு
என்று அவன் கண்ணீரைத் துடைக்கும்
விதி கொள்ளாத பாவப்பிறவி ஆகிவிட்டேனே
என்று அன்றுதான் தோன்றிற்று
என்னை ஒருநொடி அவன்
ஏறெடுத்துக் கண்டிருப்பானானால்
அணைக்கச்செய்து நம்பிக்கையைக் கொடுத்திருப்பேன் ,,

அந்த நொடிகளுக்குப்பிறகு
அவ் அறை பூட்டப்பட்டுவிட்டது
அவன் பிரவேசமும்
இருமல் சத்தமும்
பூட்ஸ் சத்தமும் இல்லை ,,
அவன் அறையொட்டிக்கிடக்கும்
தாழ்வாரத்தை
கடந்துபோகும் பாதநடமாட்ட
எதிரொலிகள்
அவனுடையதாக இருந்துவிடாதோ
எனத்தோன்றும்
அதுமாதிரி சமயத்தில்
காற்றுச்சீரமைப்பி இயக்காமல்
வியர்த்துக்கிடப்பினும்
விழித்தெழுகிறேன்

ஒப்பனைகள் தோய்ந்துபோய்
சிலந்தி பின்னல்களில் அகப்பட்டுவிட்டேன்
அரும்பர் மூடி
அழகுக் கெட்டிருந்தேன்
அம்மாவாசை நள்ளிரவு போல்
வெளியிடையின் வௌவ்வால்களின் கூச்சலுக்கும்
நாய் நரிகளின் ஊளையிடுதலிற்கும்
என்னை துணை நிறுத்திச்சென்றவனின்
கடைசி வருகை
பிரிந்துசென்ற நாட்களிலிருந்து
அன்றுதான் இருந்தது
என் நெடுநாள் காத்திருப்பின்
இருளை உடைத்தெறிய
அறையின் பூட்டவிழ்க்கப்ப்பட்டு
இதோ உரையாடி உறவாட வந்துவிட்டான்
நடையில் தடுமாற்றம்
சத்தத்தால் உணர்ந்திருந்தேன்
ஏதும் பேசவில்லை
நிற்கும் கனமில்லாது
காலுறையைக்கூட கழற்றமறந்து
படுக்கையைத் தடவி விழுந்துவிட்டான்

அவன் வந்துவிட்டான்
என்னும் உவகையிலிருக்கும் எனக்கு
அன்றும் விடியல் நிறைய நீண்டிருந்தது
கதிர்கோல்களின் மசி
அதிகம் சுட்டுவிடாமல்
என் மூடாத இடுக்குகளை வருடவே
அவன் கண்களுக்கு கறையாக படர்ந்திருந்தேன்
விழித்தவன் விழிகள்
என்னில் முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை
கழிப்பறைக்கு சென்றுவிட்டான்
வந்து மீண்டும் உறங்க எத்தனிக்கையிலேயே
நான் மாசு பட்டிருப்பதை
கவனிக்கத் தொடங்கியவன்
என்னை தயார் செய்யும் களத்தில்
இறங்கிவிட்டிருந்தான்,,,
மேலிருந்து கீழாக சுத்தம் செய்யவே ,,
அவன் முகத்தில் முளைத்த கார்வனம்
சோகக்காதல் கதையின்
தீவாகியிருப்பதை
நான் ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருந்தேன்
தாடிக்கார இளைஞனின் மாயத்தால்
அற்ப நிமிடங்களில் அந்த அறை
அப்சரஸ் மாளிகையானது

என் முன்னாலிருந்து ஒப்பித்த
அந்த அரைமணிநேர கடிதவாசிப்பிற்குப் பின்னால்
இமைகள் அணையாமல்
இம்மிநேரம் என்னைப்பார்த்துவிட்டு
தலையாலும் முகத்தாலும்
மூர்க்கமாய் என்னில் மோதிக்கொண்டான்
முதல் மோதலிலேயே
பலந்தாளாமல் உடைந்து சுக்குநூறாகிவிட்டேன்
என் சில்லுகளால் கீறி
இறந்து விழுந்த
அவனின் "உதட்டுப்புர" கருந்தாடியை
எஞ்சிய என் பாகங்கள்
நகலெடுத்தன
நெருப்பிற்கு பிண்டமாகும் அவனை
முதல் நால்வரும்  பின்னால் சிலரும்
சுமந்து போனார்கள்
குப்பைத் தொட்டியில் இறையப்பட்ட
என் கூறுகளோ
இனி எங்கு இடம் பெயரப்போகிறோம்
என்பதை அறியாமல்
உச்சி சூரியனை பிரதிபலித்த கர்வத்துடன்
குப்புறக் கிடந்திருந்தன.

"ஆம் இவள் பெயர்  கண் "ஆடி"

"பூக்காரன் கவிதைகள்"

Wednesday, 4 January 2017

இன்று நீ வரவில்லை



இன்று நீ வரவில்லை   
=====================

அந்தக் கோயில் விளக்குகள் 
அணைந்திருக்கின்றன
முன்வாசல் தீபமும் 
அணைந்திருக்கிறது 
உண்ணாத இரவும் 
தீர்ந்துகொண்டிருக்கிறது   
அரைக்கால் மண்டபமும் 
இப்போது 
அல்லலில் மூழ்கியிருக்கிறது  
அதோ சற்று தூரே  
நாகப்பிரதிம சிலைகளுக்கு அருகில் 
நனைந்த கற்றறையில்   
ஆடித்தளர்ந்த 
காற்றின்  கைகள்
ஆலிலை மெத்தை விரிக்கின்றன 
இன்று நீ வரவில்லை   
நீ எப்படியோ உறங்கிக்கொண்டிருக்கிறாய் 
எல்லாவற்றையும்  
மறக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய் 
இந்த இரவில்  
நிலத்தில் விழுந்த பூக்கள் எல்லாம்  
விரகக்கதைகள் 
சொல்லிக்கொண்டிருக்கின்றன 
கேட்டுக்கொண்டே  
அதைப் புணரும் நிழல்கள்  
காடு மடியில் இளைப்பாறுகின்றன 
உன் மலர்விழிகள்  
இமைமூடிய  நேரம்போது 
நாள் முழுவதும் 
நீ  செய்த 
முகஜாலங்கள்   
உன் கண்ணீரில் கரையக்காண்கிறேன்  
ஆனால்,,,,, 
இன்று நீ வரவில்லை 

"பூக்காரன் கவிதைகள்"

Monday, 2 January 2017

பூக்களைவிட மென்மையானவளுக்கு பூக்காரனின் (கற்பனைக்கடிதப்பதிவு)




பூக்களைவிட மென்மையானவளுக்கு
===================================
பூக்காரனின்  (கற்பனைக்கடிதப்பதிவு)

உன்னைப் பின் தொடர்வது
உனக்கொரு பெருத்த இடைத்தாங்கல் தான்
அறிவேன்
யாரோடும் இதுவரை  தனித்து பேசவிரும்பாதவன்
இருந்தும் உன்னைப் பின் தொடர்கிறேன்
முதல் பார்வையிலேயே
உன்னிடம் சொல்லிவிடவேண்டும் போல்
தோன்றியது
"நிறைகுடத்தில் அவிரும் விளக்கின் ஒளிபோலே
யாருக்கும் தெரியாமல் இருக்கிறாய்
இத்தனை அழகா நீ ம்ம்ம்
ஒருபாடு சுற்றிவிட்டு
அணையாத அகலினைப்போல
பறந்துகொண்டிருக்கையில்
தழைத்தட்டி விழுந்த மின்மினியைப்போலே
எப்படி என் முன்னால் வந்து விழுந்தாய்
ஏதாவது ஒரு பதில் கிடைக்கலாம்
என்று நினைத்தேன்
ஏதுமில்லை என்றாலும்
ஒரு திட்டாவது கிடைக்கும் என்றுதான்
எதிர்பார்த்தேன்
ஏனோ நீ மௌனமாகிவிட்டாய்
வேறு வழியேயில்லை
உன்னை ஆராதிக்க
வார்த்தைகளில் ஜாலம் ஏதும் இல்லாத
கவிதைதான்
எழுதவேண்டும்போலிருக்கிறது  
அத்தனை அழகாய் இருக்கிறாய் நீ ம்ம்
அதுதான் ம்ம்
அந்த நாலுவார்த்தைகளும்
என் மனசிலிருந்து
தெரிந்தோ தெரியாமலோ
உனக்கு முன்னால் வந்து விழுந்துவிட்டது
இது சரியா தவறா என்று
ஆராய விருப்பமில்லை  ம்ம்ம்

""பூக்களுக்கப்பால் ஒளிந்திருக்கும்  
உன் முகம் கண்டபோது
ஏதோ ஒரு பெயர்த்தெரியாத
புதுப்பூவின் வாசனை நுகர்கிறேன்
உன் பின்னாலுள்ள
என் தொடர்தலை
இத்துடன் அவசானிக்கிறேன்
ஆனால் ,,
யாராலேயும்
எழுப்பத்தில் நுழையமுடியாத
என் டைரிக்குள்
உனக்கான ஒரு பக்கத்தில்
நீ மௌனமாய் இருக்கிறாய்
மைக்கறைப் படாத ஒரு மயில் பீலிப்போல
எப்போதது கவிதையாகும்
தெரியவில்லை""""
இப்படிக்கு,,,,,,,,,,, ஆராதகன் ,,,
உன்னிடமிருந்து
எதையும் எதிர்ப்பாராத
வெறுமொரு ,,,,,ஆராதகன்

"பூக்காரன் கவிதைகள்"

உன்னை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும்

உன்னை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும் =================================================== இத்தனைக்காலம் கழித்து உன்னை நினைவுப்படுத்திக் கொள்வதற்கு மன்னிக்கவும் உருண்டோடிய நாட்களோடு சேர்ந்து உனக்கும் வயதாகிவிட்டது எனக்கு மறதி இருக்கிறது,,,என்றோ சொன்னாய் ரேடியோ அலைவரிசைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன நேற்றைவிட இன்று நலம் விசாரித்துச் சென்றவர்களை நினைவுசெய்யும் சக்தியை கூடுதலாக இழந்திருக்கிறேன் கண்களின் ஒளித்திரை கடைசியாக பிரிந்துபோன உன் உருவத்தை அழித்துக்கொண்டிருக்கிறது என் செவிப்படர்களில் அசைப்போட்டுக் கொண்டிருக்கும் உன் மெல்லிய குரலுமாய் நீள் தாழ்வாரத்தில் உன் கால் சலங்கைகளுடைய ஜதிநின்ற பின்னாலும் யாரோவுடைய கைகள் மீட்டும் வீணை நாதமுமாய் என் உயிர்ப்பிடித்து வைத்திருக்கிறாய் "பூக்காரன் கவிதைகள்"