Sunday, 29 January 2017

புரியாத சமிக்கைகள் அரங்கேறுதே...
===================================

உரைக்காத பொய்ப்பெயரை உரைத்துவிட்டேனே
அவளிடம்
நானும் பெயர்வைத்திருக்கின்றேன்
யாருக்கும் ஏன்
அவளுக்கே தெரியாமல்
நான்மட்டும் அழைக்க ம்ம்ம்
கேட்டாலும் சொல்லிவிடமாட்டேன் என்ற
சிரித்தபிடிவாதம்
எனக்குள்ளும்  இருக்கிறதே...
அதுதானோ என்று ஏமாந்துதேடட்டும்

இதோ சோழியை உருட்டிவிட்டு சென்றுவிட்டேன்
அகண்ட என் மார்புக்காடுக்குள்
அரள்கின்ற
அவள் கருமணிகளிரண்டும் சுழலட்டுமே...
கனவிலாவது தெரியட்டுமே..
உடல்மூடிய உயிராதாரமொன்றின்
அசரீரித் தெறிக்க
அந்த துஷ்யந்தவனத்தின் சகுந்தலையானவள்
அவள்தான் என்பதை

அழகான பூக்கள் பூக்கும் அக்கரையொன்றில்
புதர்கள் குடைக்குடையாய் மண்ட
தடமற்ற அலமர லிருட்டில்
அகவைதிருடிடும்
திரு(டி)விளையாடல் ஒன்று அரங்கேறுதே
அமலை இடரானதோ
அண்மையில் புகலானதோ
சமிங்ஞை அறியாமல் இளமை திசைபுரள்கிறதே

தைவரல் ஊடுருவிய கூந்தலுடுத்த
துணையற்றுப்போகட்டுமே
அத்தளுவமும்
ஆணியம் என்று சபிக்காமலிருந்தால்
கொஞ்சம் துவட்டிவிடுகிறேனே....
என் உட்டணப்பறிதலினால்
சூடா ஊடல்தீர்கையை
தேடா இடத்தில் இருந்து அள்ளி
இவன் இல்லாமல்
இவன்செய்த இவ்வினையை
செய்வினை என்பாளா....தெரியவில்லை

இதோ சோழியை உருட்டிவிட்டு சென்றுவிட்டேன்
அகண்ட என் மார்புக்காடுக்குள்
அரள்கின்ற
அவள் கருமணிகளிரண்டும் சுழலட்டுமே...
கனவிலாவது தெரியட்டுமே..

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment