உடையும் உணர்வுகள் - சிறுகதை
================================
அவன் என்னை
நான் மேலும் ஒப்பனை ஏதும் செய்யப்படாமல்
உருவாகிய முதல் நாளில்
என்னை சந்தித்தான் ,,,
அதோ அந்த பள்ளிக்கூட மதில் சுவரொட்டிய
கைக்காட்டி மரந்தான்
தினம் அவனுடைய தொடரிருப்பானது
என்னை சந்தித்தப்பின்னால்
முதல் பார்வையிலேயே
அவனால் ஈர்க்கப்பட்டிருப்பதை கவனித்திருந்தேன்
அன்றிலிருந்து ஏழாவதுநாள்
என்னை அருகி சில நிமிடங்கள்வரை
ரசித்திருந்தவனை
விசாரித்தார்கள் என்னை உற்பத்தி செய்தவர்கள்
அவன் திருட்டுப் பார்வையின்வசம்
என்னை அருக அனுமதிக்கவில்லை
மறுநாள் வந்தவன் விலைகேட்டான்
விலை கட்டுபடியாகவில்லை
சாயங்காலம் வருவதாகச்சொல்லி சென்றுவிட்டான்
பொழுது வைகியது அவனைக்காணவில்லை
இனிமேலும் வருவானா ??
என்ற நம்பிக்கையும் பொலிவிழந்துவிட்டது
அதே சமயம்
மூன்று முரட்டு மனிதர்கள்
யாருடைய அனுபாதமுமின்றி
என் இருப்பிடத்திற்குள் நுழைந்து
என்னை அத்துமீறி ஆக்கிரமித்தார்கள்
அதை தட்டிக்கேட்ட உரிமையாளரிடம்
என்னை விலைபேசினார்கள்
அப்பப்பா அவர்களின் ஆளுமையில்
எத்தனை வன்மை பதறித்தான் போயிருந்தேன்
அந்நேரம் அவன் அங்கே பிரவேசித்தான்,
கடுமையான பேரத்திற்கு பிறகு
ஆம் அவனே வென்றான் என்னை
புதுவாசம் நிரம்பிய தளவாடங்களுக்கு
மத்தியில் பிணைப்பூட்டி
ஏதோ ஒரு மூன்றுச்சக்கர மகிழூந்தில்
அவனுடன் இறுக்கமாக இருத்தப்பட்டேன்
வென்ற ஆசுவாசத்துடன் என்னை விடாமல்
பிடித்துக்கொண்டு போகும்
அவனைக் காணுகையில்
விசித்திரமாகத்தான் இருந்தது
அவன் வசிப்பிடத்திற்கு
என்னைக் கொண்டு சேர்க்கும்வரை
அவ்வளவு பத்திரப்படுத்தப்பட்டேன்
இங்கிருந்து ஒரு பதினான்கு காத தூரத்தில்
மகிழூந்தின் தடதடத்த
உதடு முறுக்கிப் பிழிந்த எஞ்சின் சப்தம்
ஓய்வெடுத்தது
பதறாமல் என்னைமட்டும் அவன் கரங்களோடு
அணைத்துவிட்டு
என் உடைமைகளை இதர ஆட்களைக்கொண்டு
அவனுடைய அறைபுகும் வழிக்கு
அவனை சார்ந்த எல்லோருமே
கடிந்துகொண்டிருந்தார்கள்
என்னை எதிர்ப்பட்ட அவர்களின் முகத்தில்
அவனைக்குறித்த அத்தனை கொடூரம் ம்ம் :(
ஊதாரிக்கு வாக்கப்பட்டதுபோல் மிகவும்
வருந்தினேன்
என்ன செய்வது பேரம் பேசியல்லவா
என்னை சொந்தமாக்கிக்கொண்டான் ம்ம்ம்
இனி நல்லதோ கெட்டதோ
அவன்தான் எனக்கு எல்லாமே
அவன் அறைதான் எனக்கு மாடமாளிகை
கொண்டுச் சென்றான்
அங்கே குத்துவாக்கில் கட்டித்தொங்கவிடப்பட்ட
மர ஊஞ்சலின் பக்கவாட்டில்
அவன் படுக்கைக்கு முன்னால்தான்
நான் இருக்கவேண்டும் என்றே அடம்,,,
அதுபோல் நடத்தியும் விட்டான்
அன்றிலிருந்து அவனுடைய எல்லா நடமாட்டங்களும்
என்னில் பதிவாகிறது
அவனுடைய ரகசியங்களுக்கு
உத்தரவாதி நான் ,,,
அடிமைகள் எப்போதுமே பேச அனுமதிக்கப்படாத
அஃறிணைகள் தானே ம்ம்,,
அவன் கைப்பேசி அலறினாலும் ,,
அவ்வறையின் எண்கடிகை அலறினாலும்
என்னால் ஏது செய்யமுடியும் ???
""அதிகப்பட்ச பிரியங்களை
அவன் என்னிடமே பொழிவான் ம்ம்
யாரோடு முறுக்கிக்கொண்டாலும்
என்னிடமே கண்களை விறைத்து சண்டையிடுகிறான்
யாரால் ஏமாற்றம் என்றாலும்
என்னிடமே சொல்லியழுவான்
நிறமாதிரிகளை வாங்கி
என் நிர்வாணத்தை அலங்கரிப்பான்
அதிக ஆவேசத்தின்போதெல்லாம்
அழுந்த முத்தமிடுவான்
ஒன்றுமே செய்யாத பட்சத்தில்
இப்படியா பார்ப்பது என்பதைப்போல
நான் வெட்கிக்கூனிக்குறுகிப்போக
விழுங்குவதுபோல் அப்படி முறைப்பான்
விளக்கணைக்கும் நேரத்தில்
வெற்றுச்சுவரை பதிவாக்கிக்கொள்வேன்
மின் தடங்கலின் போது
அதிகமாக வியர்த்து அயர்ந்துவிடுவேன்
மென்பட்டு நனைத்து
குளிர்ச்சி படர படர
இதமாக குளிப்பாட்டித் துடைப்பான்
யாருமில்லா நேரத்தில்
கதவடைத்துவிட்டு
கைக்காலகளை உதறிவிட்டு
ஆடைகளை அவிழ்த்துவிடுவான்
நானோ அப்போதெல்லாம்
திரும்பிக்கொள்ளவே முடியாத
சிலுவையிலறைந்த பாவியாகிறேன்"""
""என்னை அழைத்துச்சென்ற சிலநாட்களில்
ஆண்மை பொதிகூட
இடதுகை விரல்களால்
என் மார்பை அழுத்தித் தள்ளியவன்
இதோ எனக்கு அரையடி தூரத்திலிருந்து
இமைகள் சொருக நாசி, நரம்பு புடைத்து
சபலங்களை பீய்ச்சியடித்தான்
கறைசெய்யப்பட்டேன் முதல் முறை""
அவனுடைய ரகசியங்களைத் தின்று தேக்கி
வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு
அவன் நன்றாக பழகி போயிருந்த சமயம் அது
திடீரென்று ஒருநாள்
அறைக்கதவை உடைப்பதுபோல்
அறைந்துகொண்டும் திறந்துகொண்டும்
நுழைந்தவனிடம்
கோபமில்லை குழப்பத்தையே கண்டிருந்தேன்
ஆழ்ந்த வருத்தத்தில்
கரங்கள் முகம்புதைய
எப்போதும்போல வந்ததும்
என்னைக் காண்பதையும் மறந்திருந்தது
அவனின் அன்றைய போக்கு
ஆம் யாரோ அவனை மறந்திருந்தார்களாம்
ஹேய் இதோ ,, இங்கே பாரு
என்று அவன் கண்ணீரைத் துடைக்கும்
விதி கொள்ளாத பாவப்பிறவி ஆகிவிட்டேனே
என்று அன்றுதான் தோன்றிற்று
என்னை ஒருநொடி அவன்
ஏறெடுத்துக் கண்டிருப்பானானால்
அணைக்கச்செய்து நம்பிக்கையைக் கொடுத்திருப்பேன் ,,
அந்த நொடிகளுக்குப்பிறகு
அவ் அறை பூட்டப்பட்டுவிட்டது
அவன் பிரவேசமும்
இருமல் சத்தமும்
பூட்ஸ் சத்தமும் இல்லை ,,
அவன் அறையொட்டிக்கிடக்கும்
தாழ்வாரத்தை
கடந்துபோகும் பாதநடமாட்ட
எதிரொலிகள்
அவனுடையதாக இருந்துவிடாதோ
எனத்தோன்றும்
அதுமாதிரி சமயத்தில்
காற்றுச்சீரமைப்பி இயக்காமல்
வியர்த்துக்கிடப்பினும்
விழித்தெழுகிறேன்
ஒப்பனைகள் தோய்ந்துபோய்
சிலந்தி பின்னல்களில் அகப்பட்டுவிட்டேன்
அரும்பர் மூடி
அழகுக் கெட்டிருந்தேன்
அம்மாவாசை நள்ளிரவு போல்
வெளியிடையின் வௌவ்வால்களின் கூச்சலுக்கும்
நாய் நரிகளின் ஊளையிடுதலிற்கும்
என்னை துணை நிறுத்திச்சென்றவனின்
கடைசி வருகை
பிரிந்துசென்ற நாட்களிலிருந்து
அன்றுதான் இருந்தது
என் நெடுநாள் காத்திருப்பின்
இருளை உடைத்தெறிய
அறையின் பூட்டவிழ்க்கப்ப்பட்டு
இதோ உரையாடி உறவாட வந்துவிட்டான்
நடையில் தடுமாற்றம்
சத்தத்தால் உணர்ந்திருந்தேன்
ஏதும் பேசவில்லை
நிற்கும் கனமில்லாது
காலுறையைக்கூட கழற்றமறந்து
படுக்கையைத் தடவி விழுந்துவிட்டான்
அவன் வந்துவிட்டான்
என்னும் உவகையிலிருக்கும் எனக்கு
அன்றும் விடியல் நிறைய நீண்டிருந்தது
கதிர்கோல்களின் மசி
அதிகம் சுட்டுவிடாமல்
என் மூடாத இடுக்குகளை வருடவே
அவன் கண்களுக்கு கறையாக படர்ந்திருந்தேன்
விழித்தவன் விழிகள்
என்னில் முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை
கழிப்பறைக்கு சென்றுவிட்டான்
வந்து மீண்டும் உறங்க எத்தனிக்கையிலேயே
நான் மாசு பட்டிருப்பதை
கவனிக்கத் தொடங்கியவன்
என்னை தயார் செய்யும் களத்தில்
இறங்கிவிட்டிருந்தான்,,,
மேலிருந்து கீழாக சுத்தம் செய்யவே ,,
அவன் முகத்தில் முளைத்த கார்வனம்
சோகக்காதல் கதையின்
தீவாகியிருப்பதை
நான் ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருந்தேன்
தாடிக்கார இளைஞனின் மாயத்தால்
அற்ப நிமிடங்களில் அந்த அறை
அப்சரஸ் மாளிகையானது
என் முன்னாலிருந்து ஒப்பித்த
அந்த அரைமணிநேர கடிதவாசிப்பிற்குப் பின்னால்
இமைகள் அணையாமல்
இம்மிநேரம் என்னைப்பார்த்துவிட்டு
தலையாலும் முகத்தாலும்
மூர்க்கமாய் என்னில் மோதிக்கொண்டான்
முதல் மோதலிலேயே
பலந்தாளாமல் உடைந்து சுக்குநூறாகிவிட்டேன்
என் சில்லுகளால் கீறி
இறந்து விழுந்த
அவனின் "உதட்டுப்புர" கருந்தாடியை
எஞ்சிய என் பாகங்கள்
நகலெடுத்தன
நெருப்பிற்கு பிண்டமாகும் அவனை
முதல் நால்வரும் பின்னால் சிலரும்
சுமந்து போனார்கள்
குப்பைத் தொட்டியில் இறையப்பட்ட
என் கூறுகளோ
இனி எங்கு இடம் பெயரப்போகிறோம்
என்பதை அறியாமல்
உச்சி சூரியனை பிரதிபலித்த கர்வத்துடன்
குப்புறக் கிடந்திருந்தன.
"ஆம் இவள் பெயர் கண் "ஆடி"
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment