Thursday, 26 January 2017

நட்சத்திரத் தூவல் (டைரி 2004)

நட்சத்திரத் தூவல் (டைரி 2004)
================================

சருகுகள் விழுந்தும்
சலனமின்றியிருக்கின்றது
ஆற்றின் விளிம்பு

குழப்பங்களோடு
துலக்கிக்கொண்டிருக்கின்றன
வனாந்திர பட்சிகள்
நீரில் தமது நிழலாடல்களை

ஆழ்ந்த பிரார்த்தனைக்குப்பின்னால்
எத்தனை முயன்றும்
அழிக்கமுடியாமல் தோற்றுபோகின்றன
பெரும்பெயல்கள்
வனதேவதைகளில் பூசிய
விபூதிகுங்குமக் கறைகளை

சுவர்களில் ஈரம் மேலேற மேலேற
பல்லிகள் சத்தமிடுகின்றன
புரியவாப்போகிறது ,,புயலுக்கு சகுனங்கள்

வருகையின் நீட்சியால்
சேவேரிய மனவழுக்குகளை
திறந்துவிடுகின்ற நிச்சலனங்களுக்குள்ளே
நெற்றிப்பாறையிலிருந்து
எம்பியெம்பிக்குதிக்கின்ற
கத்துகுட்டியாகின்றன ஆசைகள்
விவரமறிந்த  சூட்சமங்களும்
தனிமையின் சஞ்சாரத்தில்
கிணற்றுநீர்த்தவளையாய்
மொண்டுறுஞ்சப்படுகின்றன அங்கே

கழுவித்தீர்க்கின்றது
நட்சத்திரங்களையும் நிலாவையும்
அன்றையமழை நிரம்பிய
தொட்டாங்குச்சி இராத்திரி

ஆர்ந்த பனிமூட்டங்களின் இலயத்தில்
கலங்கித்ததும்பும் கொந்தவெளி
கீழ்வானமொன்றின்
விரிந்த வயல்களுக்கிடையில்
கருத்தமனிதர்கள் விரைந்துமறைகின்றனர்

தூரக்கிடையிலிருந்து மெலிதாய் வருடும்
பிதற்றல்சுமந்த
வெண்ணிற தென்றல்
எப்போதோ கை விட்டுப்போன
நியாபகங்களைப் பிரதிபலிக்கின்றனமாதிரி
லிகிதம் நழுவுகின்ற உதட்டில்
இளங்குயிலொன்றின்
சாகித்யத்தில்
வெள்ளியோடையின் காலமசிகள்
எதையோ திரையவிழ்த்துக்கொண்டிருந்தன


பூக்காரன் கவிதைகள்

No comments:

Post a Comment