என்றென்றென்றைக்குமாய்
=========================
அர்த்தமின்றி
சிலமுறை தடதடக்கிறேன்
மழைத்துகள் தொட்டு
ஆராதித்தடங்கிய
பசுமையைப்போல
பின்னொரு ஏகாந்ததையிலோடு
மௌனமாகிறேன்
குடுவை நீரில்
தாமரையின் தளும்புதல் போல
எதிர்ப்படும் போதெல்லாம்
தளும்புகிறாய்
கடந்துபோகும் உன் கண்களில்
நின்று நான்
கடிதங்கள் வாசிக்கிறேன்
நவரஞ்சிதையே
நாம் இணைந்திருக்கும்
சம்மோகன வேளை
வசீகரமாகும்
எங்கோ வழித்தப்பியபோது
எதிர்பாராமல் பட்ட
பிரியவாசனை நீ
காதல் ஒரு பனிநீர் மெத்தையல்ல
என்னோடுள்ள
இப் பிரயாணங்களில்
கார முட்களும்
கண்ணாடிச்சில்களும்
காணக்கூடும்
தளராதே
என் கைப்பற்றி
முன்னேறிவிடு
உன் நுதலாடும் சிந்தூரத்தால்
உதயமாகும் நேசத்தின்
நெய்க்கயிற் நாளங்கள் போல
இராக்கால
மந்த மாருதத்தின் தள்ளோடையில்
இளகியாடிடும்
மந்தகாசப் பூக்களைப்போல
வெண்ணிலாவைத் தொட்டெழுதிய
கவிதைகள் போல
உன் யாத்திரை
என்றென்றென்றைக்குமாய்
என்மேல்
தழுவியிருக்கட்டும் ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment