Sunday, 11 December 2016

பந்தக்கயிறு

பந்தக்கயிறு
============

அவளென்னவோ உங்களை சுமந்துவிட்டதாக
பெருமையடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொருநாளும்
வரைந்து வரைந்து
நான் சுமந்த என் பேராசைகளைவிடவா
அவள் சுமை
பெரிதாகிவிடப்போகிறது
அவளுடைய கனவு
அவள் முந்தி இறகிற்குள்
உங்களை சிறை பிடிக்கிறாள்
என்னோடு ஏற்படும்
சிறு சிறு சண்டைகளுக்கும்
உங்களை துணை சேர்க்கிறாள்
ரசிக்கிறேன்
நிறமிட்டவனுக்கு உயிர் கொடுத்தவளுக்கு நன்றி
என் கனவுகளின் துவக்கங்களே
எங்கோ இருந்துவிட்டு
உங்கள் எதிர்காலம் காண்கிறேன்
அவளுக்குள் உங்களை விதைத்துவிட்டு
ஒரு பூநாத்து நடுகிறேன்
உங்களின் அசைவுபோலவே
அதை தொட்டுத் தழுவி பராமரிக்கிறேன்
பூமியில் விழுகிற  முதல் இரு பூக்களுக்கு
அழகான பெயர் வைக்கிறேன்
தோளிலேற்றிச் சென்றவனுக்கு
இன்று சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுக்க
முடியவில்லைதான்
உங்களோடு அளவளாவிக் கொண்டு
நடக்கும் நாட்கள்
வருடமொருமுறைதான்
அவளுடனான, உங்களுடனான
வேறு எந்த விசேடங்களுக்கும் கூட
கொடுத்துவைக்காதவன் தான்
உங்களோடு இருக்கின்ற
குறைந்தபட்ச நாட்களைத் தவிர
உங்களுக்கு சோறூட்டி தரவில்லைதான்
இருவரையும்
இருத்தோளில் சுமந்தபோது
உங்கள் உறக்க எச்சிலில்
பச்சைவாடை  இருந்தது
இன்று உங்கள் புகைப்படங்களுக்கு
முத்தமிடும்போது
பச்சைவாடை  தேடினேன்
அலைப்பேசியில் நீங்கள்  அப்பா என்னும்
நடுக்க சுவரத்தில்
அடிவயிறு வேகிறேன்
உயர உயர
உங்களைக் கூட்டிச்செல்லும் கனவுகளில்
ஒருக்கட்டத்தில்
நான் விழுவதாய் உணரும்போது
விரல்கள் உங்களை
இறுக்கிப்பிடிக்க எத்தனிக்கின்றன
அன்று அணைத்துப்பிரிந்த
நெஞ்சு சூட்டின்  கொதி
இன்னும் அகலவில்லை
இன்று நீங்கள் விழாமல் சைக்கிள் ஓட்டுகிறீர்கள்
என்று சமாதானிக்கிறேன்
சாலையில் நடந்துபோகும்போதும்
சாலையை கடக்கின்றபோதும்
ஓரமாக போகிறீர்கள்
என்று சமாதானிக்கிறேன்
குண்டும் குழியும் கண்டு கடக்கிறீர்கள்
நீங்களாகவே
சோறு பிசைந்து சாப்பிடுவீர்கள்
என்று சமாதானிக்கிறேன்
என் இரவு விடியல்கள் எல்லாமே
வெறுமொரு  சமாதானமாகவே கழிகின்றன
என் செல்வங்களே
நான்  நீங்கள் போட்ட பிச்சைதான்
இருந்தும்
இவ்வளவு  அன்பையும்
அப்பாவின்மேல் ஏன் வைத்திருக்கிறீர்கள்
இந்த அன்பு எப்போதும்
எனக்குமட்டுமே
நிலைக்கொள்ள வேண்டுமாய்தானோ என்னவோ
உங்களின் சிறு சிறு தவறுகளுக்கு
நான் துணை புரிகிறேன் போல ,,
இதை யார்வேண்டுமானாலும்
சுயநலம் என்று சொல்லட்டும் கவலையில்லை
இருங்கள் வருகிறேன்
உங்கம்மா கோபிக்கிறாள்
இது அவளுக்கான சமாதான நேரமல்லவா
உங்களை கெடுக்கிறேனாம்
எல்லோரோடும் புகார் சொல்லுகிறாள்
என் பிழையால்  பிறந்த
அழகான பிழைகளே
தற்போது பிழையாகவே இருங்கள்
அம்மா திட்டட்டும்
அப்பா பார்த்துக்கொள்கிறேன்
உடையாத
நம் தொப்புள் முறிவுகளுக்கு இடையே
என் உயிர்க்கொண்டு நெய்த
ஒரு பந்தக்கயிறு இணைத்திருக்கிறேன்
ஏது ஆழம்வரை போனாலும்
அது உங்களை
இழுத்துவந்து என்னிடம் சேர்த்துவிடும்

"பூக்காரன் கவிதைகள்"

No comments:

Post a Comment