தனிமை
==========
அன்றிரவு,
முதன் முதலாய் பிடித்த ராகம்
பெண்ணுடல் ஆகிறாள்
கனவு மலர்ந்த பூக்களை
யாரோ இரண்டு மூன்றுபேர்
பறித்துச் சென்றார்கள்
இத்தனைநாளும்
நேர்த்தியாக கொளுத்திய
தூபங்களின்
ஸ்திரிரூபா புகைபிம்பம்
ஆடைகளை
களைந்துவிட்டு
வழுவழுப்பான படுக்கையில்
யாரோ ஒருவனுடைய ஆளுமையில்
புரள்கிறது
தனித்திருக்கக் கிடைத்த
சூழல்களிலெல்லாம்
எதையும் எழுதாமல் விட்டுவிட்டேனே
என்றுக் குமைகிறேன்
வரிகளில்லாத ராகத்தை
என் உள்ளங்கைகளுக்குள்
மீண்டும் இடம் பெயர்க்கிறேன்
தனியறையின் பழைய சுவரொன்றில்
கண்ணாடிவழியே
பிரதிபலிக்கும்
அகல்விளக்கின் வெளிச்சத்தில்
பரு கிள்ளும்
முதிர்க்கன்னி ஒருத்தியின் ஏக்க நிழல்
வழியெங்கும்
சபிக்கும் ஆட்கூட்டம்
எதையும்
காதில் கொள்ளாமல்
ஆடுகளுக்கு
தழை ஊட்டும் உடல் விற்பவள்
கதவில்லாத குடிசைவாதலில்
கொடுங்காற்றிலாடும்
திரைக்கப்பால்
உயிர்ப்பிடித்துக் கொண்டிருக்கும்
அரிக்கேன் விளக்கோடு
யாரையோ காத்திருக்கும் மூதாட்டி கண்கள்
சக்கரவண்டியில்
யாத்திரைச் செய்யும்
தாயின் பிணத்திற்குப் பின்னால்
அழுதுக்கொண்டே போகும் பசிச்சிறுவன்
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
கால்களில்
சங்கிலியால் கட்டப்பட்ட
பைத்தியக்காரன்
ஒருவனின்
ஒச்சையின் எதிரொலி
காலை ஒளியில்
புன்னுனியில் மினுங்கும்
முதலாம் பனித்துளி
மனிதர்களோடு இல்லாத
இப்படியான
கதைச்சொல்லும்
ஓவியங்கள் நிறை அறையினோடும்
தனிமை ஆட்கொள்ளும்
இருளினோடும்
தானே புலம்பிச் செல்லும்
வழிகளோடும்
என் அடுப்பமும்
என் ஆழ் மோகங்களும்
வெளிவரும் என் சுவாசத்தில் ஓசைச்சேர்த்து
இசை செயகிறேன்
உட்கொள்ளும் சுவாசத்தில்
அதே இசையோடுதான்
உயிர்வாழ தனிமை தேடுகிறேன்
சதா பிரயாணத்தில்
திரிகிறேன்
கவிஞன் அல்ல, தான்தோணி
ஸ்திரமில்லாத
வழிப்போக்கினை
இலக்காக்கி சுற்றுகிறேன்
மௌனத்தை
நிசப்தங்களை ஆராதிக்கிறேன்
காடுமலைகளிலும்
கடற்கரை மேடுகளிலும்
கதைத்தேடி அலைகிறேன்
யாருடைய அரவமற்ற இடங்களிலும்
கூட்ட நெரிசல்களிலும்
நான் போய்ச்சேரும் முன்னமே
என் தனிமைப்போய்
இருப்பிட்டு இருந்துகொள்கிறது
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment