Sunday, 11 December 2016

மௌனத்தால் பறித்துவிடலாம்

மௌனத்தால் பறித்துவிடலாம்
=============================

ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்
கடைசி முறையாக
இறுக சந்தித்துவிட்டு
இனி பிரியலாம் என்று கூறி
அவள் மறையும்வரை
டாட்டா சொல்லிக் கடந்ததை ம்ம்

சந்தன கலர் புடவையும் பொட்டும்
அணிந்திருந்தாள்
பத்து முழத்திற்கு மிகாமல்
பூ அணிந்திருந்தாள்
அன்று அவளுக்கு
ஓரிரு முடிகள் நரைத்திருந்தன

ஒரு சுருக்குப் பைக்குள்
நிறைய சின்னஞ்சிறு பரிசுகளை அடைத்து
அவளுக்கு கொடுத்திருந்தேன்
என் நினைவுகள்
அவளை உணர்த்தும் போதெல்லாம்
அச்  சுருக்குப்பை திறந்து
ஒவ்வொரு பொருளாய் எடுத்து
அவள் பார்க்கட்டும் என்று

பறித்துவிடலாம்தான்
என் அருகலில்
அவள் மௌனித்திருந்தபோது
மணிக்கணக்காய் அவளுடன் பேசிய
எல்லா வார்த்தைகளையும்
என் மௌனத்தால் பறித்துவிடலாம்தான்

சுமந்திருந்தவரை பாரம் தெரியவில்லை
இறக்கிவிட்டப்பின்பு
அதிகம்  தெரிந்துகொண்டேன்
இந்த வெறுமைக்கு எத்தனை பாரம் என்று

காலங்கள்
போய்க்கொண்டே இருக்கும்
பார்வைக்குன்றி
தோலில் சுருக்கங்கள் காணும்
அவளுடன்  வாழ்ந்துபோன இடங்களை
தேடியும் கிடைக்காமல்
அடையாளம் மாறியிருக்கலாம்
புழங்கிய  சாலைகளும்
சலாம் போடும் புகைவண்டிகளும்
விசாலமாக்கி  தொலைக்கப்பட்டிருக்கலாம்
வரும்போதெல்லாம்
எப்போதும்  தங்கும் விடுதியும்
நிஷாத் பாயின் பீடா கடையும்
அந்த வீதியை ஒட்டியுள்ள
சிற்றுண்டி விடுதிகளும்
நில ஆக்கிரமிப்பு  பொதுவழக்கில்
அரசாங்கத்தால்  தரமட்டமாக்கப் பட்டிருக்கலாம்

ஆனால்
வேறு யாருக்கென்றும் திறக்கப்படாத
ஏதோ ஒரு வீட்டின் அறைக்குள்
நான் இறக்கிவிட்டுப்போன  பாரங்களுடன்
யாருமில்லாத போது
தன் வயதையும்
பக்குவத்தையும் சிறிதாக்கி
அவள்  பேசிக்கொண்டிருக்கலாம்

தனிமையில் என்னைப்பற்றி
புலம்பிக் கொண்டிருப்பது
அவளுக்கு எப்போதுமான அலாதிதானே

நானில்லாமலும் வாழ்ந்துவிடுவாள் ம்ம்ம்ம்

 பூக்காரன் கவிதைகள்

No comments:

Post a Comment