ஒரு காதலுக்குப் பின்னால்
==========================
சிலர் கேட்டிருந்தார்கள்
இந்த காதலுக்குப்பின்னால் அப்படி
என்னதான் இருக்கிறது என்று
காதலுக்குப் பின்னால் என்னதான் இல்லை ம்ம்
உள்ளூர நேசிக்கின்றவர்களின்
இழப்பு சொல்லும் காதலுக்குப்பின்னால்
என்னதான் இருக்கிறது என்று
அவளை பெற்றவர்கள்
அவள் இழப்பிற்குப் பின்னால்
குமுறி அழுவார்கள்
சொந்தங்கள் கூடி நாலுநாட்கள்
அவள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்
சுற்றம் எல்லோரும்
அவள் பற்றிய
புரளியில் புழுங்கிய தினங்களும்
கரைந்து போகும்
பின்பு இவர்களின் நிலை
இன்மையிலிருந்து மாறி
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்
ஒருவாரம் வரைக்கு மட்டுமே
உணவை தவிர்க்க இவர்களால் இயலும்
பின்பு பசிக்கும்
இறந்த அவளின்
ஒரு பிறந்தநாளிலோ இறந்தநாளிலோ
அல்லது இரு பிறந்த நாளிலோ
இறந்த நாளிலோ
நினைவு செய்வார்கள்
எல்லாமே மறக்கடிக்கப்படும்
சரளமான பண்டிகைக்கு
தங்களை தயார்செய்துவிடுவார்கள்
புதுத் துணி வாசனை
அவள் சாவு வாசனையை
மறக்கடித்துவிடும்
ஒரு காதலுக்குப் பின்னாலேயே
இந்த வலி நீளும்
அவன் அவளுடைய அருகாமையில்
வியர்த்த ஆடையின் வாசனையை நுகர்ந்திருப்பான்
அவள் குளிக்காதபோதும்
அவளை அணைத்து முத்தமிட்டிருப்பான்
அவள் படுக்கையில்
மாதவிடாயின் குருதியுடன்
புரண்டிருப்பன்
அவளை சார்ந்தவர்கள்
யாருமே அறியாத சுவாச நெடியை
அவன் மட்டுமே உணர்ந்திருப்பான்
தலையணையில் தோள் சாய்ந்துவிட்டு
ஒரு விஸ்பர் வாங்கித் தாடா
என்று அவள் அவனிடம் மட்டுமே
கேட்டிருப்பாள் ம்ம்
அவள் அயர்ச்சியின்போது
அவள் முகப்பருவில்
செல்லக்கிள்ளல் செய்திருப்பான்
அவளை ஒத்த
யாருமே சகித்திருக்கமாட்டர்கள்
உதடுகள் கடந்த
அவள் உமிழ்நீரின் எச்சில் ருசியை
நாவில் பகிர்ந்து
அவன் நாவால் எடுத்திருப்பான்
அவளுடைய அந்தரங்கம் போலவே
அவனுடைய அந்தரங்கமும்
அவளுக்கே சொந்தமானதென்று
கூடலின் போதும்
ஒரு சண்டைக்குப் பின்னால் நிலவும்
சமாதானத்தின்போதும்
எல்லாம் அவளிடம் உரைத்திருப்பான்
அன்னையே காணாத
அவள் அங்க ரகசியத்தில்
அவன் வாசனையைப் படர்த்திஇருப்பான்
சூடிய பூக்களின் வாசனையைவிட
அவள் கூந்தல் வாசனையிலேயே
அதிகம் இலயித்துக் கிடப்பான்
அவள் பழகும் அனைவரிடமும்
அவள் அவனுக்கு
எவ்வளவு முக்கியமானவள்
என்பதை உறுதி செய்துக்கொண்டே இருப்பான்
அவள் அழுக்கு ஆடையுடன்
அவன் ஆடை கலந்திருப்பதை
காண்கிற எல்லா நேரமும்
அவள் மேல் காதலும் காமமும்
கொண்டிருப்பான்
அவள் என்ன கண்ணாடியைப் பார்த்து
வெட்கப்படுவது
அவள் கொலுசுகளாலும்
உடைந்த கைவளைகளாலும்
தோடு மூக்குத்தியாலும்
அவள் விரல் நகங்களாலும்
கரைந்த குங்கும நெடியாலும்
அவன் முரட்டு உதடும் பூப்பூக்கும்
அவள் பாராட்டுக்களால்
நிறைந்திருக்க ஆசைக் கொள்வான்
அவள் இயலா நேரங்களில்
அவளுடைய உபாதைகளுடைய
நேர்ச்சியை கைப்பட கழித்திருப்பான்
வார்த்தைகளால்
எத்தனைப் பேரோடு வாழ்ந்தபோதும்
வாசனையாய்
அவளை மட்டுமே நினைத்திருப்பான்
இந்த வாசனைகளை
அவள் அவனைத் தவிர வேறு யாரோடும்
பகிர்வதைக் கூட
இந்த நோய்க் காதலால்
ஏற்க மறுப்பான்
ரத்தம் கொதிக்க கோபமுறுவான்
மனது சிலநேரம்
பித்துப் பிடித்ததைப் போலவும்
சிலநேரம் சிறு குழந்தையைப் போலவும்
அவளிடையே ஆர்ப்பரிக்கும்படி
அவன் எல்லையை சிறிதாக்கிக் கொள்வான்
அவள் தற்காலிக பிரிவின்போதுகூட
சரி போய்ட்டுவா
காத்திருக்கேன் ன்னு சொல்லிட்டு
இரவுகள் இழக்க
சிரமப்பட்டிருப்பான்
சிகரெட்டோடும்
அவள் புகைப்படங்களினோடும்
அவள் பிரிவை
தவிர்க்க முடியாத இயலாமைகளோடு
கத்திக் கொண்டிருப்பான்
எத்தனை பிணக்கத்திற்குப்பின்னாலும்
அவள் அவனிடம்
திரும்பி வருவதற்கு காரணமாய்
அவன் வெறுப்பு வாசத்தையாவது
அவள் மீது தெளித்து வைத்திருப்பான்
காலம்பூராவும் அவள்
அவனையே நினைத்திருக்கும்படியாக
அவன் அவளுக்கு
சுவடு கொடுத்திருப்பான்
அவளில்லாத போழ்து
அவள் உடமைகளோடு உரையாடி
காலந்தள்ள
அவனால் மட்டுமே முடியும்
இதெல்லாமே அவளுடன் அவன்
வாழுகிறபோது
காதல் கொடுக்கின்றபோது
அவனுக்கே உரிய வரமாக கருதியிருப்பான்
மனதில்
மறுபடி மறுபடி மலரும்
மருக்கள் என்பது
காதலில் மட்டுமே நிகழும்
பூக்காலம் ஆகும்
இந்த இழப்பிற்குப் பின்னாலும்
இதே செய்கைகளை
அவள் பாரத்தினாலோ
அசைகளினாலோ
அவனால் கடக்க நேரிடும் என்றால்
ஒரு காதலுக்குப் பின்னால்
பெரிதாக சொல்லிக் கொள்ள
என்னதான் இல்லை ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment