Sunday, 11 December 2016

தே"வதை" தரிசனங்கள்

தே"வதை" தரிசனங்கள்
======================

துணைவராத எழுத்துகளும்
தவறிவிழுந்த நட்சத்திரங்களாக
என் வாசல் தூவிக்கிடக்கின்றனவே
உன் கைகள்பட்டு கவிதைக்கோலமாகிவிடவா

அன்றெல்லாம் தோன்றிவிடாத
தேவதைகளின் அணிவகுப்புகள்
உன்னை காதலிப்பதாலோ என்னவோ
என் வாசற்கதவை தேடவைக்கின்றனவே

குறைந்த பட்ச இடைவெளிகளினால்
முகம் காணாத ஊடல்கள்
கண்கள் சந்தித்துவிட்டால்
மிஞ்சுவது முத்தமழையே
குற்றால மலைச்சாரலாய்
குளிர்ச்சியிலே நனைந்துவிடாதா

நான்கடி நீ நடந்தால்
நால்வரி கவிதையாகிறாய்
நகராமல் நின்றுவிடுகையில்
என் அகம்தின்னும் சிற்பமாகிறாயே

இரவெல்லாம் விழித்திருந்து
இட்டுவிட்ட எச்சில் கோலம்
நீ எழுந்துவிட்ட பின்னாலும்
உன் தலையணை உரைத்துவிடாதா

அரைமணி நேரத்திலே
அழகாக மாறிவிடுகிறாயே
இதல்லவே இவன் இரசிக்கும் உன்னழகு

திரை மூடிய அறையிலே
கையில் தேநீருமாய்
எஞ்சிய ஈரங்களிலும்
உன்னை எழுப்பிவிட எண்ணும்
உறைந்த வார்த்தைகளுமாய்
காத்துத் தவம் கிடக்கிறேன்
நீ சோம்பல் முறிக்கும் தரிசனம் வேண்டியதாலா,,,

விழிக்காத ஆதவனும்
எட்டிப்பார்த்துவிடமாட்டானா
கிழக்குத் தோன்றும்
நீலகிரி மலைத்தொடரிடுக்கிலே,,,

உன் கலங்கியக்கூந்தலோடும்
கசங்கிய முந்தானையோடும்
நீ பவனி வரும் அழகைக்காணுகையில்,,,

வானமே நிறமற்று போனதே
இருக்கின்ற நீலத்தை
உன் பார்வையால்
விழிப்பறி செய்துவிட்டாயா,,,
உன் கண்களும் இன்று
நீலம் பூத்தல்லவா கிடக்கின்றன,,,,

சரித்திரத்தில் இடம்பிடித்த காதலர்களும்
தோற்றோடி விடுவார்களடி
இறங்கி வந்து
உன்னையும் என்னையும்
கண்ணால் ஒருமுறைக் கண்டுவிட்டால்
இப்படியெல்லாம் காதலிக்காமல்
சென்றுவிட்டோமே
என்ற பொறாமையிலேயே,,,

அய்யய்யோ இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்
எனக்கு தலைக்கிறக்கம்
வருகிறது என்றாய்,,
அப்பப்பா அரைநொடி மயக்கத்தில்
உனை அழகாய் கிடத்திவிட
எத்தனை போராடவேண்டியிருக்கிறது பாரேன்,,,

நீயோ லேசாக ஊதும்
உன் முத்தக்காற்றிலே என்னை
எளிதில் மயங்கிவிழச் செய்துவிடுகிறாயே

பூக்காரன் கவிதைகள்

No comments:

Post a Comment