Saturday, 31 December 2016

வெண்ணிறப்பூக்கள்

வெண்ணிறப்பூக்கள் ================== யாரோ உடைய கண்ணாமூச்சியில் நாம் இருவரும் ஒரு பேழைக்குள் அடைப்பட்டுவிட்டோம் முதல் முறை இருட்டு என்றுமில்லாத வாசனைக்கொடுத்தது அந்த இருட்டு பிடித்திருந்தது அவள் முகம் தெரியவில்லை காற்றில்லாத சூழ்நிலை வியர்வையைத் தரவில்லை மூச்சிரைப்பிற்குள் வாழ்ந்திருந்தோம் என்னுடைய எல்லாமானவைகள் மறந்துவிட்டன அவளுடையதும் மறந்துகாணும் அந்த அறைக்குள் வந்துபோனவர்கள் அந்த பேழையை கவனித்திருக்கவில்லை மண் குழைவுப்போல சூட்டினோடான வியர்வைக்குள் மண் சிற்பம் ஆகிக்கொண்டிருந்தோம் அவளால் என்னுடையதும் என்னால் அவளுடையதும் ஆடைகள் களையப்பட்டன உயிர்வாழுதலுக்கு சுவாசமுட்டலின் உதவியை அன்றுதான் தெரிந்துகொண்டேன் முதல்முறை அவள் முகம் வேண்டுமாய் கண்மூடி பிராத்தித்திருந்தேன் அடைப்பட்ட இத்தனை நாட்களில் முதல் ஒளியாய் அவள் கண் திறந்திருந்தாள் சூரிய வெளிச்சத்தைவிட ஆயிரம் மடங்கு அவள் கண்களின் தேஜஸாகின அதில் எல்லாமே வெளிறியிருந்தன கால்களுக்குமேல் காலிட்டுக்கொண்டும் கழுத்திறுக கையிட்டுக் கொண்டும் மோவாயை தோளில் இருத்திய அந்த முகம் அப்போதும் தெரியவில்லை காலப்போக்கில் எங்கள் வியர்வைப்போக்கு ஓடையாய் ஒழுகி நதியாகி கடலாகி அந்த பேழை இப்போதொரு வனாந்திரம் ஆகியது என் உடல் ரோமாஞ்சனங்களில் இலைகள் முளைத்தன உடல்களுக்கு வயதாகும்போது இலைகள் சருகாகி சிறகுகளாகி அவள் முகம் காணும் முன்னமே நாங்கள் பட்டாம்ப்பூச்சிகளாகியிருந்தோம் அந்த அறை வேறு யாருக்கோ கைமாறியது தளவாடங்கள் தூசு தட்டியபோது நாங்கள் புறம் தள்ளப்பட்டோம் அதுவரை இருந்ததைவிட லட்சம் மடங்கு ஒளிக்கதிர்கள் எங்களை இதமூட்டின பறந்து செல்லும் வழிநெடுகிலும் கோடி மலர்கள் எங்களை வரவேற்றன காற்று விரட்டிய திசைதோறும் பறந்து திரிந்தோம் எங்களைக்கண்ட மழலைகள் குதூகலித்தனர் காதலர் கவிதைகளில் முன்னிடம் பெற்றிருந்தோம் இயற்கையைத் தாண்டிய எல்லாவற்றையும் எல்லைகள் கடந்து நாங்கள் விஜயத்திருந்தோம் மகரந்த மணிகளை சுமந்து திரியும் பற்பல பூக்களும் எங்களைக்கண்டு சூல்கொள்ள விரிந்தன ஒருப்பூவின் மகரந்தத்தில் சூல் கொள்ளும் முன்னமே ஏதோ ஒரு வலைக்குள் பிடிப்பட்டிருந்தோம் அங்கே எங்களைப்போன்ற எத்தனையோ ஜீவிகள் றெக்கைகளால் அடித்துக்கொண்டு வண்ணம் விடுபட்டுக் கொண்டிருந்தன நாங்களும் தப்பிக்க கெதியில்லாது வண்ணம் உதிர்த்துக்கொண்டிருந்தோம் அவள் மூச்சுக்காற்றை நெடினேன் கூட்டங்களோடு வெளிறி அடையாளம் தொலைத்துவிட்டிருந்தாள் றெக்கை இழந்த எங்களை இங்கு யாருக்கும் பிடித்திருக்கவில்லை சுவாசத்தட்டுப்பாட்டிலோடு இறந்துகொண்டிருந்தோம் அதுவரையும் எத்தனை நினைத்துப்பார்த்தும் அவள் முகம் என் கற்பனைக்குள் நுழைந்துகொடுக்கவில்லை உயிர்ப்பிரிந்து தேவதைகளாகிவிட்டோம் அப்போதும் கூட அவள் முகம் ஓர்மையிலில்லை கண்ணுக்கெட்டும் தூரம்வரை அங்கே எல்லோருக்கும் வெள்ளைப்பூக்கள் அணிந்த வெள்ளை இறகுகளே முளைவிட்டிருந்தன "பூக்காரன் கவிதைகள் "

No comments:

Post a Comment