வார்த்தைத் தொலைத்த கவிதை
************************************************
என் கரங்களைப்பார்
உன் அலைவரிசையில் சமமாக நீள்கின்றன
என் எண்ணத்தைப்பார்
உன் கவிதையை புரிந்துகொள்கின்றது
உன் அடிதாள விதைப்பில்
கால் ஊன்றி
என்னைப்போல் இருக்கிறானே
என்றுதான்
உன் பின்னால் சுற்றினேன்
நான் சந்தோஷங்களுடன்
போட்டியிட்டுக் கொண்டிருந்தபோது
நீ சந்தோஷங்களுடன்
வாழ்ந்துகொண்டிருந்தாய்
உன் முன்னால்
என் திறமைகளைக் காண்பிப்பதாய் எண்ணி
சாய்வு சாராத இடம் வரைமோதி
திரும்பிப்போகும் அலையாகிவிட்டேன்
உனக்குப் பிடித்துவிட்டால்
நீ நினைப்பதுபோல
எனக்கொரு ரஷ்ஷிய பேரிட்டு அழைத்துக்கொள்
உன் நண்பர்களை நீ
அப்படித்தானே பெயரிட்டு அழைப்பாய்
நீ காண்பதெற்கென்றே
என் இயல்புகளை மாற்றிக் கொண்டேன்
யாருமே
பெரிதாகக் கண்டுக்கொள்ளாத
பல இயல்புகளின் பெயர்ப்பிடமாக
நீயிருக்கிறாய்
நேற்று நீ
அந்த மீன் பிடிக்கும் ஆட்களுடன்
காரல்மார்க்ஸ் பேசிக்கொண்டிருந்தாய்
இன்று நீ
விறகுவெட்டியாகிவிட்டாய்
நாளை உன் அவதாரம்
அனாதரவான ஒரு சவத்திற்கு
கொள்ளியிடும்
திடீர் வாரிசாகி ஆச்சரியப் படுத்தலாம்
நாளை மறுநாள்
தூரப்பயணம் போகும் கூலி லாரியில்
பாஷை சம்பந்தமில்லாத
புதிய சொந்தங்களைத் தேடிக்கொள்ளலாம்
யாராவது பள்ளி சிறுவர்களுடன்
மட்டைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கலாம்
இல்லையென்றால்
சாராயக் கடையில்
சோகமாக இருக்கும் பெருசுகளுடன்
அவர்களுக்குப் பிடித்த கதைச்சொல்லியாகி
பொழுதைக் கழிக்கலாம்
உன்னை நெருங்கி நெருங்கி
உன் நிகழ்காலத்தை நடிக்கப் பழகிவிட்டேன்
மலை உச்சியில்நின்று
கரங்களை விரிக்கிறபோது
அணைப்புக்குள் அடங்கி
கண்களுக்கு முன்னால் தென்படும்
உன் எதிர்காலம்
இத்தனை பெரிதாக இருக்குமோ
என்று நினைப்பேன்
விஷயமறிந்த தோழி கேலி சொல்கிறாள்
நீ என்னிடம்
பேசாமலிருக்கலாம்
நானுன்னைக் காண்பதைக்கூட
கவனியாமலும் இருக்கலாம்
நாம் இருவரும்
இனி எப்போதும் சேராமல்கூட போய்விடலாம்
இதோ இப்பொழுது நீ கடந்துபோன
இந்த அற்பநேரம்
என்னை நீயாக்கிவிட போதும் எனக்கு
நட்சத்திரங்களுக்கெல்லாம்
கதாபாத்திரம் எய்தி
பித்துபாடி கொண்டிருப்பவனே
எனக்குள் உன் கதாபாத்திரத்தை
நுழைக்கும் இது
நீ எனக்கென விட்டுப்போகும்
காதல் சீசன் முனையின்
ஒரு காத்திருப்பா இரு காத்திருப்புகளா ம்ம்
சரி போ
உன்னைத்தப்பி தப்பி
கணக்கில்லாத தூரம்வரை கடந்துவிட்டேன்
அற்பம் ஓய்வெடுக்கிறேன்
உனக்கேத் தெரியாமல்
என்னை அழைத்துபோன
அழகான முன்னைய இடங்களைப்போல
இனி நீ போகும் புதிய இடங்களில்
புதிய பூக்களின் வாசனையாகி
புதிய ஓவியங்களின் நிறங்களாகி
சாக்ஸாபோனின் புதிய புன்னகைகளாகி
வார்த்தைத் தொலைத்த கவிதையாகிப்போ,,,
என்றாவது ஒருநாள் ஏதோ ஒரு பேருந்தின்
ஜன்னலோர இருக்கையின்
கண்ணாடி சட்டத்தில்
மழைநீர் தண்டிவலைகள் அறைய
நீ பயணத்திலிருப்பாய்
உனக்குத் தெரியவேண்டாம்
அது வழியே
உன்னை இரசித்தபடி
மீண்டும் நான் பின்தொடர்வதை
"பூக்காரன் கவிதைகள்"
No comments:
Post a Comment